இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான இணையதளங்கள் சிலவற்றின் மீது இன்று, சனிக்கிழமை, மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீதே இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படும் “தமிழீழம் சைபர் ஃபோர்ஸ்” என அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு குழுவினரால் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

“சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையப் பக்கத்தில் விடுதலைப் புலிகளின் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தக் குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, 2009இல் இறுதிப் போர் நடந்த, மே மாதம் 18ஆம் தேதி இவ்வாறான சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவது வழக்கமான விடயமாக உள்ளது.

காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் மே மாதம் 18ஆம் தேதி ஐந்து இணையதளங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

பிரபல செய்தி நிறுவனமொன்றின் இணையத்தளம், வெளிநாட்டு தூதுவராலயமொன்றின் இணையதளம் உள்ளிட்ட இணையதளங்கள் மீதே சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியில். இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார் குழுவிடம் பிபிசி தமிழ் வினவியது.

இந்த இணையதளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அந்த இணையதளத்தின் ஊடாக எந்தவொரு தகவல்களுக்கோ அல்லது தரவுகளுக்கோ சேதம் விளைவிக்கப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் தெரிவித்தார்.

இணையதளத்தின் முகப்பு பகுதியில் மாத்திரம் சில தரப்பினர் ஊடுருவி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share.
Leave A Reply