ஹாங்காங்கில் உள்ள 3.15 லட்சம் குடிமக்களுக்கு இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால் சீனா ஆத்திரமடைந்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தது. அதன்படி, ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரைச் சீனாவுக்குக் கடத்தி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.
இதுபோன்ற ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்துவதால் மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால், தற்காலிகமாக அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நேரத்தில் சீனா அரசு சத்தமில்லாமல் ஹாங்காங் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது.
முன்பு ஹாங்காங் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்துள்ளதால், அங்குள்ளோரில் பலர் வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் வெளிநாடுவாழ் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
ஆகவே, சீனா அவர்களை ஒடுக்க முயலும் நேரத்தில், தன் குடிமக்கள் என்ற முறையில், அவர்கள் மீதான அக்கறையால், இங்கிலாந்து சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 3,15,000 வெளிநாடுவாழ் நாட்டினரின் விசா உரிமைகளை நீட்டிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய வெளியுறவுச்செயலர் டொமினிக் ராப் வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டினரின் விசா உரிமைகள் ஆறு முதல் 12 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது, அவர்கள் எதிர்காலத்தில் இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
இங்கிலாந்து அரசின் இந்த நடவடிக்கையால் சீனா ஆத்திரமடைந்துள்ளது.