யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மந்துவில் வடக்கு குட்சன் வீதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சி.ஐ.டி எனத் தெரிவித்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டு சில மணி நேரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வாள்கள், கத்திகளுடன் முகத்தை துணியினால் கட்டியபடி மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஏழு பேர் கொண்ட குழு குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்து வீட்டின் தந்தையை கட்டிவைத்து பலமாகத் தாக்கியிருக்கின்றது. இதனைத் தடுக்க முற்பட்ட தாயும் தாக்கப்பட்டிருக்கின்றார்.
அதன் பின்னர் அங்கிருந்த 20 வயதுடைய இளம் பெண்ணை குறித்த குழு வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றிருக்கின்றது. சில மணி நேரத்தின் பின்னர் அந்தப் பகுதியில் உள்ள கோவிலடியில் குறித்த பெண் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் வீடு திரும்பியிருக்கின்றார்.
தாக்குதல் நடைபெற்ற வேளை அங்கு வந்த அயலவர்களுக்கு தாம் பொலிஸார் என்றும், சிஐடியினர் என்றும் விசாரணைக்கு வந்திருப்பதாகவும் குறித்த குழுவினர் தெரிவித்திருக்கின்றர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் வீட்டார் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த குழுவில் தம்முடைய பிள்ளை மீது தொடர்ந்தும் தொந்தரவு செய்யும் நபர் ஒருவரும் இடம்பெற்றிருந்தாகவும் தமது பிள்ளையை காதலிக்குமாறு அவர் நிர்பந்தித்துவருவதாகவும் அதற்கு தமது பிள்ளை இடங்கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதேவேளை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சகோதர உறவுமுறை கொண்ட அந்த நபர் தற்போது பொலிஸார் ஊடாக தம்முடன் சமரச முயற்சிக்கு முற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.