மதுரவாயலில் கிருமிநாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரவாயல் எம்எம்டிஏ காலணி பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்திற்கு நள்ளிரவில் ஆட்டோவில் வந்த மர்மநபர் காவலாளியிடம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய காவலாளியும் எந்த கேள்வியும் கேட்காமல் அவரை ஏடிஎம் மையத்திற்குள் அனுமதித்து உள்ளார். இதையடுத்து உள்ளே சென்ற அந்த மர்மநபர் சாவி மூலம் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பணத்தை எடுத்து உள்ளார்.

இதைகண்ட அங்கிருந்த பணம் எடுக்க வந்த நபரும் வங்கி ஊழியர் என நினைத்துள்ளார். பணம் முழுவதையும் எடுத்துக்கொண்ட அந்த மர்மநபர் அங்கிருந்து வெளியே கிளம்பி விடவே சந்தேகமடைந்த பணம் எடுக்க வந்த நபர் காவலாளியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் பணம் திருடு போனதை தெரிந்து கொண்ட காவலாளி உடனடியாக வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply