ஒரு மாணவி பரீட்சை  எழுதுவதற்காக 70 பேர் பயணிக்கக்கூடிய படகை கேரள அரசு இயக்கி பாராட்டுக்களை பெற்றுள்ளது.

கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்திரா பாபு. இவர் ஆலப்புழாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்புத் தேர்வை எழுதவிருந்தார்.

ஆனால் இவர் தேர்வு எழுதச் செல்ல வேண்டுமென்றால் படகு போக்குவரத்தில் செல்ல வேண்டும்.

 

தனிப்படகு எடுத்துச்சென்றால் அதிக செலவாகும் என்பதால் அரசின் உதவியை நாடினார் சந்திரா. கேரள மாநில நீர்வழிப் போக்குவரத்துத் துறையை அணுகிய சந்திரா, தான் தேர்வு எழுத வேண்டுமென்பதால் உதவ முடியுமா? எனக் கேட்டுள்ளார்.

மாணவியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த கேரள அரசு, சந்திரா பாபாவுக்காக மட்டுமே 70 பேர் பயணிக்கக் கூடிய படகை இயக்கியது.

காலை 11.30 மணிக்கு சந்திராவை ஏற்றிக்கொண்டு 12 மணிக்குப் பள்ளியைச் சென்றடைந்தது அப்படகு. சந்திரா தேர்வு எழுதி முடிக்கும் வரை அங்கேயே காத்திருந்த படகு மீண்டும் மாலை 4 மணிக்கு சந்திராவை வீட்டில் இறக்கிவிட்டுள்ளது.

சராசரியாக இந்த பயணத்திற்குப் படகுக்கு 4000 இந்திய ஆயிரம் செலவாகும். ஆனாலும் சந்திராவிடம் படகு டிக்கெட் விலை 18 ரூபா மட்டுமே வசூலிக்கப்பட்டது.

படகில் பயணியாகச் சந்திரா மட்டும் பயணம் செய்தாலும், படகை இயக்கியவர், உதவியாளர், வழிகாட்டுபவர் எனப் படகைச் சேர்ந்த 4 பேர் வழக்கம்போல் படகிலிருந்துள்ளனர்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாணவி சந்திரா, ”நான் தேர்வை எழுத முடியாது என்றுதான் நினைத்தேன்.

அரசு என் நிலைமையை உணர்ந்து உதவி செய்துள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீர்வழிப் போக்குவரத்துத் துறையை நினைத்தால் பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு மாணவிக்காக படகை இயக்கிய கேரள அரசின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Share.
Leave A Reply