ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் உறவினர் இறந்தவரின் உடலை தூக்கிக் கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களை புதைக்க அல்லது எரியூட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. பாதுகாப்பாக இறுதிச் சடங்கு செய்யப்பட்டாலும் ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் உடலை புதைக்க முடியாத அவலநிலை ஏற்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 72 வயது முதியவர். இவர் ஜம்மு பகுதியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அருகில் உள்ள இடத்தில் உடலை எரியூட்ட முடிவு செய்தனர். மருத்துவ ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் உடலை எரிக்க முயன்றபோது அப்பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் ஒரு கும்பலாக சேர்நது உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் என்ன செய்வது தெரியாத உறவினர்கள் பாதி எரிந்த நிலையிலான உடலை எடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று அங்கு எரியூட்டியுள்ளனர்.
இதுகுறித்து அந்த முதியவரின் மகன் சோகத்துடன் கூறுகையில் ‘‘வருவாய் அதிகாரிகள் மற்றும் மெடிக்கல் குழுவுடன் நாங்கள் தோமனா என்ற இடத்தில் அமைந்துள்ள தகன மைதானத்தில் உடலை எரிக்க முயன்றோம். அப்போது உள்ளூர்வாசிகள் ஒரு குழுவாக திரண்டனர். அவர்கள் உடலை எரியூட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
இறுதிச் சடங்கின்போது நான், எனது சகோதரர் மற்றும் அம்மா ஆகியோர் மட்டுமே இருந்தோம். கும்பலிடம் இருந்து தப்பிக்க பாதி எரிந்த நிலையில் உள்ள உடலை தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் கற்கள் மட்டும் கம்புகளால் தாக்கினர்.
எங்களுடைய சொந்த மாவட்டத்திற்கு உடலை கொண்டு செல்ல அனுமதி கேட்டோம். ஆனால் எல்லா ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தால் நீங்கள் பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்றனர். ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் ஸ்டாஃப் அதிக அளவில் உதவி செய்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அரசு இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய சிறந்த திட்டத்தை வகுக்க வேண்டும் ’’ என கவலையுடன் தெரிவித்தார்.
பின்னர் உடல் பகவதி நகர் பகுதியில் உள்ள தகனம் செய்யும் இடத்தில் எரியூட்டப்பட்டது.