அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வினோதமான சம்பவம் நிகழ்ந்தது.

முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனையில் இருந்து அவர் குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அடுத்த நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த முதியவர் உடல் நலம் தேறி வருகிறார், கொரோனா பாதிப்பு முழுமையாக குணமடைந்து விட்டது என மருத்துவமனையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

எனவே அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்ல உறவினர்கள் சென்றபோது, முதியவர் இறந்துவிட்டார் என மறுபடியும் கூறியுள்ளனர். உண்மையில் என்ன நடந்தது?

71 வயதான தேவ்ராம் பிஸ்கர் குஜராத்தின் நிக்கோல் பகுதியில் வசிக்கிறார். கடந்த மே 28ம் தேதி மூச்சு திணறல் பிரச்சனையால் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவ்ராம் பிஸ்கர் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்.

பிஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரின் மருமகன் நிலேஷ் நிக்டேவிடம் ஒரு ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டது. அந்த ஒப்புதல் கடிதத்தில் நோயாளிக்கு ஏதாவது ஏற்பட்டால், அதற்கு மருத்துவமனை பொறுப்பேற்காது என குறிப்பிடப்பட்டிருந்தது.

”சிவில் மருத்துவமனையில் உள்ள புற்று நோய் பிரிவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்குதான் என் மாமனாரும் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 575 ஆக இருந்தது, அது மிகவும் அதிகம். அப்போது என்னிடம் அந்த ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து கேட்டபோது நான் கடுமையாக மறுத்தேன். ஒரு முறை அவரை பார்க்க அனுமதி வழங்குங்கள் என கேட்டேன். பிறகு மருத்துவமனையில் உள்ள செவிலியர் காணொளி மூலம் அழைப்பு விடுத்தார். காணொளியில் என் மாமனாரை பார்த்துவிட்டு அந்த ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டேன்,” என பிபிசியிடம் பேசிய நிக்டே தெரிவித்தார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கவும் துவங்கினர் அது சற்று ஆறுதல் அளித்தது என்றும் நிக்டே குறிப்பிட்டார். மருத்துவமனையில் நாங்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்பினோம்.

பிறகு அடுத்த நாள் என் மாமனார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் என மருத்துவமனையில் இருந்து அழைத்து சொன்னார்கள். உடனே சிவில் மருத்துவமனைக்கு விரைந்து சென்றோம். நீல நிற பாதுகாப்பு உறைகளை கொண்டு உடல் முழுவதும் சுற்றப்பட்டிருந்தது. அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்பதற்கான எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை. என் மாமனாரின் ஆடையை மட்டுமே எங்களிடம் காண்பித்தனர் அதை வைத்து அவர் உயிரிழந்துவிட்டார் என ஏற்றுக்கொண்டோம். அவரது முகத்தைக்கூட நாங்கள் பார்க்கவில்லை. இறுதி சடங்குகளில் முழு கவனம் செலுத்தினோம், என்கிறார் நிக்டே.

தேவ்ராம் பிஸ்கருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர், இரண்டு மருமகன்கள் உள்ளனர்.

”இறுதி சடங்குகள் செய்து முடித்த அடுத்த நாள் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. உங்கள் மாமனாருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இல்லை அவர் குணமடைந்துவிட்டார். அவரை சாதாரண வார்டுக்கு மாற்றி விட்டோம் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் அவரை வந்து அழைத்து செல்லும் படியும் கூறினார்கள்” என நிக்டே கூறுகிறார்.

பிஸ்கரின் உடல் என்று கூறி மருத்துவமனையில் இருந்து வந்த உடலை புதைத்த பிறகு வந்த இரண்டு தொலைபேசி அழைப்புகளால் பிஸ்கர் குடும்பத்தினர் பெரும் குழப்பத்தில் மூழ்கிபோயுள்ளனர். எனவே மருத்துவமனைக்கு பிஸ்கர் குடும்பத்தினர் மீண்டும் சென்றனர். அப்போது தேவ்ராம் பிஸ்கர் உயிரிழந்து விட்டார்.

அதற்கான ஆவணங்களும் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். பிறகு பிஸ்கர் குடும்பத்தினர், தங்களுக்கு தவறான தொலைபேசி அழைப்பு வந்திருக்கவேண்டும் என நினைத்து வீடு திரும்பினர். அதேநேரத்தில் பிஸ்கரின் மரணத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் அழைப்பு விடுத்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

வீடு திரும்பிய பிறகும் மூன்றாவது அழைப்பு வந்துள்ளது. இந்த தொலைபேசி அழைப்பிலும், பிஸ்கர் நலமுடன் இருக்கிறார் கவலை கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பிஸ்கர் குடும்பத்தினர் அவரது மரணம் குறித்தும், இதற்கு முன்பு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் விளக்கியுள்ளனர்.

இதை கேட்ட மருத்துவ அதிகாரி இரண்டு மணி நேரத்திற்கு முன்புதான் நோயாளியின் உடல்நிலை குறித்து முடிவுகள் வந்தன என விளக்கம் தந்துள்ளார். இதனால் பிஸ்கரின் குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இது குறித்து புற்றுநோய் மருத்துவமனை டீன் மருத்துவர் ஷஷாங் பாண்டியாவிடம் பிபிசி குஜராத்தி சேவை பேசியபோது, நோயாளியின் குடும்பத்தினரை தொடர்ப்பு கொண்டு தவறான தகவல் பகிரப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் , ”மே 28ம் தேதி தேவ்ராம் பிஸ்கர் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையில் நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் இருந்ததால் குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மே 29ம் தேதி பிற்பகல் பிஸ்கர் உயிரிழந்தார். அவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் உயிரிழந்தால் கூட அவர்களின் உடல் முழு பாதுகாப்பு கவச உறை கொண்டே பாதுகாக்கப்படும்,” என மருத்துவர் ஷஷாங் தெரிவித்தார்.

அடுத்து வந்த இரண்டு தொலைபேசி அழைப்புகள் குறித்து மருத்துவர் ஷஷாங்க் கூறுகையில், ”அவரின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. எனவே அவரின் குடும்பத்தினரை அழைத்து அவர் உடல் நலம் தெரிவருகிறார் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் பிஸ்கர் கொரோனா பாதிப்பு இன்றி வேறு உடல் நல பாதிப்பால் உயிரிழந்துவிட்டார் என பரிசோதனை முடிவுகளை குடும்பத்தினருக்கு தெரிவிக்கும் குழுவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரியாது, ” என்றார்.

மேலும் பிஸ்கரின் உறவினர்கள் இறுதி சடங்கு மேற்கொண்டு புதைத்தது பிஸ்கரின் உடல்தான் என மருத்துவர் ஷஷாங்க் உறுதியாக கூறுகிறார். மேலும் தவறான தகவல்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டதற்கு பிஸ்கரின் குடும்பத்தினரிடம் மருத்துவமனை சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.

Share.
Leave A Reply