இந்தியா – சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா சீனா இடையிலான எல்லை பதற்றம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது. எப்போது எல்லை பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இரு அண்டை நாடுகள் பற்றிய ஒப்பீடு அதிகம் விவாதிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கூட, சமூக வலைத்தளங்களில் இந்த விவாதமானது தீவிரமடைந்து வருகிறது. ஆனால் உண்மையில் இருநாடுகளில் ராணுவ அளவில் யார் பலசாலி?
1. இந்தியா – சீனா: ராணுவ வீரர்கள் எத்தனை பேர்?
ஜப்பான் பாதுகாப்புத்துறை 2019-ல் வெளியிட்ட அறிக்கையின் படி சீனாவிடம் 9 லட்சத்து என்பதாயிரம் ராணுவ வீரர்கள் உள்ளார்கள். இந்தியாவில் 14 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளார்கள்.
அதன்படி பார்த்தால் படைவீரர்களின் எண்ணிக்கையில் இந்தியாவே பலம் வாய்ந்த்து என கூறலாம்.
1927-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீன ராணுவத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான படை வீரர்கள் இருந்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்த சீனா, தனது வான் மற்றும் கப்பற்படைகளின் பலத்தை அதிகரித்தது. மேலும் தேவைப்படும் இடங்களில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் புகுத்த தொடங்கியது.
2. பாதுகாப்பு துறைக்கு அதிகம் செலவிடுவது இந்தியாவா? சீனாவா?
ராணுவத்திற்காக செலவிடப்படும் தொகை என ஒப்பிட்டால், இந்தியாவை விட சீனாவே பாதுகாப்பிற்காக அதிக நிதியை செலவு செய்கிறது. 2019-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, சீனா 177 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்கு ஒதுக்கியது.
இந்தியா சுமார் 61 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக செலவு செய்கிறது. அதாவது இந்தியாவை விட சீனா மூன்று மடங்கு பாதுகாப்பு படைகளுக்காக செலவு செய்கிறது.
3. இந்திய – சீன கப்பற்படை மற்றும் விமானப்படை ஒப்பீடு
வான்படையை பொறுத்தவரை க்ளோபல் ஃபயர்பவர் இணையதள தரவுகளின்படி, சீனாவிடம் 3187 விமானங்கள் உள்ளன. இந்தியாவிடம் 2082 விமானங்களே உள்ளன.
கப்பற்படையை பொறுத்தவரை, சீனாவிடம் 714 கப்பல்கள், 76 நீர் மூழ்கி கப்பல்கள் இருப்பதாகவும், இந்தியாவிடம் 295 கப்பல்கள்,16 நீர்மூழ்கி கப்பல்கள் இருப்பதாகவும் அந்த இணையதளம் தெரிவிக்கிறது.
4. இந்தியா சீனா இடையே எவ்வளவு தூரம் எல்லை?
இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது.
5. இந்திய – சீன எல்லையில் யார் ஆதிக்கம்?
எல்லைப்பகுதிகளில் இருநாட்டு ராணுவம் தங்கள் நிலைகளை பல ஆண்டுகளாக வலுப்படுத்தி வந்தாலும், சீனாவே இதிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது வரை எல்லையில் 15 முக்கிய விமான தளங்களையும், 27 சிறிய விமான நிலையங்களையும் சீனா கட்டியுள்ளது.
இதில், திபெத் பகுதியில் சீனா கட்டியுள்ள விமான தளம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், அனைத்து வானிலையின் போதும் விமானங்கள் செல்லவும் தரையிறங்கவும் அனுமதிக்கும் இந்தத் தளத்தில், மேம்பட்ட போர் ஜெட் விமானங்களைக் கையாள முடியும்.
திபெத் பகுதியில் விமான தளத்துடன், விரிவான சாலை மற்றும் ரயில் தொடர்புகளையும் சீனா கொண்டுள்ளது. இதன் மூலம், சீன படைகள் 48 மணி நேரத்தில் இந்திய எல்லையை அடையலாம் என கூறப்படுகிறது.
எல்லைப் பகுதியை வலிமைப்படுத்துவதில் சீனா முன்னணி வகிக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியா தனது தூக்கத்தில் இருந்து விழித்தது” என இந்தியாவின் “ஃபர்ஸ்ட் போஸ்ட்” இணையதளம் கூறியுள்ளது.
இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் 73 சாலைகளை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அதில் இதுவரை 30 சாலைத் திட்டங்கள் முடிவடைந்துள்ளன.
அருணாசல பிரேதசத்தில் உள்ள தவாங் மற்றும் டிராங்க் பகுதியில் இரண்டு உயர்தர விமான இறங்கு தளத்தை இந்தியா கட்டி வருகிறது. அத்துடன் வட-கிழக்கு பகுதியில் உள்ள ஏற்கெனவே உள்ள ஆறு உயர்தர விமான இறங்கு தளத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.
இந்தியா, தனது சீன எல்லைப்பகுதியில் 31 விமான தளங்களைக் கொண்டுள்ளது. அதில், அஸ்ஸாமில் உள்ள விமான தளங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றன.
6. இந்தியா – சீனா எல்லை பதற்றம்: சூழல் யாருக்குச் சாதகம்?
கோவிட்-19 காரணமாக பொருளாதாரத்தில் கடும் சிரமங்களை சந்தித்து வருவதால், போர் என்பதை இருநாடுகளும் விரும்பவில்லை என்றாலும், தங்களுடைய பலத்தை வெளியுலகத்திற்கு காட்டுவதற்கு இந்த பதற்ற நிலையை அந்நாட்டு ராணுவங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன என கூறப்படுகிறது.
‘’ராணுவத்தின் பயிற்சி மற்றும் ராணுவ தொழில்முறை இந்தியாவிற்குச் சாதகமாக உள்ளது. உள்கட்டமைப்பு, தளவாடங்கள், பொருட்கள் ஆகியவை சீனாவுக்கு சாதகமாக உள்ளது“ என ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ராணுவம் குறித்த ஆராய்ச்சியாளர் ஸ்ரீகாந்த் கூறுகிறார்.