உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில்  4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4-வது பணக்கார பெண்மணி ஆக உள்ளார்.

இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு:

சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான். இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவானுக்கு மாற்றியுள்ளார். இதன் மதிப்பு 320 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார். ரூ.24 ஆயிரம் கோடி)  இருக்கும் என கூறப்படுகிறது.

இதையடுத்து, மே 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, யுவான் உலகின் பணக்காரர்களின் வரிசையில் சேர்ந்து உள்ளார்.

யுவான் சீனாவின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். 49 வயதான யுவான் தற்போது நேரடியாக பங்குகளை வைத்திருக்கிறார்.

ஷென்சென் நகரில் வசிக்கும் டு வீமின் மே 2011 மற்றும் ஆகஸ்ட் 2018 க்கு இடையில் காங்டாயின் இயக்குநராக பணியாற்றினார். அவர் இப்போது துணை பெய்ஜிங் மின்ஹாய் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் துணை பொது மேலாளராக உள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்தபோது, காங்டாய் பங்குகள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன.

டுவின் நிகர சொத்து மதிப்பு முன்னாள் மனைவிக்கு பங்குகளை கொடுப்பதற்கு முன்பு 650 கோடி டாலர்களாக இருந்தது. தற்போது அது சுமார் 301 கோடி டாலராக குறைந்துள்ளது.

56 வயதான டு வீமின் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். கல்லூரியில் வேதியியல் படித்த பிறகு, 1987-ம் ஆண்டில் ஒரு கிளினிக்கில் பணிபுரியத் தொடங்கினார்.

1995-ம் ஆண்டில் ஒரு பயோடெக் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக ஆனார். காங்டாய் 2004-ம் ஆண்டில் நிறுவப்பட்டு, அதன்பின்   மின்ஹாய் நிறுவனத்தை வாங்கியது, மேலும் அதன் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் தலைவராக டு வீமின் உள்ளார்.

Share.
Leave A Reply