தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட வட இந்தியப் பெண் ஒருவர், தாம் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சாலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்த அந்த பெண்ணைக் காப்பாற்றி, கடந்த திங்கள்கிழமை அன்று (ஜூன் 1) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டு பகுதி அருகே, திங்களன்று கொரோனா தடுப்பு ஊரடங்கில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குடும்ப வன்முறைளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, அதே பகுதியில் வட இந்தியப் பெண் ஒருவர் ரத்த காயங்களோடு சாலையில் கிடப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாதர் சங்கத்தினரிடம் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை மீட்ட மாதர் சங்கத்தினர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாதர் சங்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

வட இந்தியப் பெண் கூறுவது என்ன?

நடந்த சம்பவம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி பிபிசி தமிழின் நடராஜன் சுந்தரிடம், “அவர் உடல் முழுவதும் காயங்களும், உடையில் ரத்தமும் இருந்தது.

அவருக்குத் தமிழ் தெரியாததால், இந்தி தெரிந்தவர்களைக் கொண்டு அந்த பெண்ணிடம் விசாரித்தோம். அப்போது, அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்த்தவர் என்றும், அவரது குடும்பத்தினர் அனைவரும் பெங்களூரில் இருப்பதாகவும் கூறினார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காகத் தஞ்சாவூர் அழைத்து வரப்பட்டதாக எங்களிடம் தெரிவித்தார்,” என்றார்.


“தன்னைப் பணிக்கு அமர்த்தியவர்கள் அடித்துத் துன்புறுத்தியதாகவும், தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்ததாகவும் குற்றம்சாட்டுகிறார். அந்த பெண்ணின் உடல் பகுதிகளில் கடுமையாகத் தாக்கப்பட்டதல் உண்டான காயங்களின் வடுக்கள் அதிகமாக இருந்தன. மேலும், மறைமுகமான இடங்களிலும் அந்த பெண்ணிற்குக் காயம் இருப்பதைக் காட்டி அவர் அழுதார்,” என்று கூறுகிறார் தமிழ்ச்செல்வி.

தொடர்ந்து அவர் பேசுகையில், “அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் மேலும் மூன்று தமிழ் பெண்களை அடைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழ் தெரியாததால் உங்களுக்கு அனைத்தையும் கூற முடியவில்லை என்று சொல்லி அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

அந்த பெண்ணுடைய பையில் 48,000 ரூபாய் இருந்தது. அதைப் பார்க்க ரொக்கப் பணம் போலத் தெரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்த பணம் போல் தெரிந்தது. அதைக் காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டோம்.

மேலும் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரனிடம் புகார் அளித்துள்ளோம்,” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வி.

பாலியல் வல்லுறவு வழக்கு என்ன நிலையில் உள்ளது?

பாதிக்கப்பட்ட பெண் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாகத் தஞ்சாவூர் வல்லம் பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்த மேலதிகத் தகவல்களுக்காக காவல் துறையினரை அணுகியது பிபிசி தமிழ்.

“பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்த்த இளம் பெண் கொடுத்த வாக்குமூலத்தில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலை செய்வதற்காக எனது மூத்த சகோதரி தஞ்சாவூர் அழைத்து வந்ததாக கூறுகிறார்.

ஆனால், நான் வேலைக்கு வந்த வீட்டில், வீட்டு வேலை கொடுக்காமல், என்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.

இந்த வீட்டிலிருந்த செந்தில்குமார் (வயது 47) மற்றும் ராஜம் என்ற பெண் இருவரும் சேர்ந்து என்னைத் தொடர்ந்து அடித்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்தனர்.

இதனிடையே, பெங்களூரில் இருந்த எனது அம்மாவிற்கு உடல்நிலை சரி இருப்பதால், அவரை பார்க்கச் செல்லவேண்டும் என்று அவர்களிடம் கேட்டிருந்தேன்.

ஆனால், வீட்டிலிருந்த செந்தில்குமார், ராஜம் மற்றும் அவருடன் இருந்த மேலும் இருவர் என்னை அடித்து கொடுமை செய்து என்னிடமிருந்த தொலைபேசியை பறித்துக் கொண்டனர்.

அதையடுத்து என்னை காரில் ஏற்றிவந்து சாலையில் விட்டுச் சென்றனர்,” என்று பாதிக்கப்பட்ட வட இந்தியப் பெண் கூறியுள்ளதாகத் தெரிவித்தனர்.


“பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் சில காயங்கள் உள்ளன. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். இந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் தொழில் ஈடுபடுத்தியுள்ளனர்.

மேலும், மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கருவுற்று இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.”

“இதற்கு முன்பு பாலியல் வன்முறை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளின் புகைப்படங்களைப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காட்டினோம்.

அப்போது அதில் இரு நபர்கள் அடையாளம் காட்டியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்தி வருகிறோம்.

தற்போது குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்கள் தலைமறைவாக இருப்பதால், சிறப்புகே குழுக்களை அமைத்து அவர்களைத் தேடிவருகிறோம்.”

தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பரிசோதனை முடிவுகளில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவரும் பட்சத்தில் மேற்கொண்டு அவரிடம் குற்றம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

 

Share.
Leave A Reply