உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை – மஹவில கார்டன் வீட்டில், மேல் மாடியில் இருந்த அறையில், மாபிள் தரை மீது குண்டினை வைத்து அதன் அருகே அமர்ந்தவாறு தனது பிள்ளைகளையும் அனைத்துக்கொண்டு, கர்ப்பிணிப் பெண்ணான தற்கொலை குண்டுதாரி குண்டினை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்த பேதுரு ஆராச்சி ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.தற்போது டாம் வீதி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருக்கும் அவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற சமயம் கொழும்பு வடக்கு பொலிஸ் வலய ஸ்தல தடயஆய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தார்.
கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் தெமட்டகொடை – மஹவில கார்டன் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து அவ்விடங்களில் ஸ்தல ஆய்வினை முன்னெடுத்து சாட்சிகளை சேகரித்த பிரதான குழுவுக்கு அவரே தலைமை தாங்கிய நிலையிலேயே அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்றது.
இதன்போது 407 ஆது சாட்சியாளராக ஆணைக் குழு முன்னிலையில் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதியின் நெறிப்படுத்தலில் பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பீர்யந்த பேதுரு ஆராச்சி சாட்சியமளித்தார். அதன்போதே அவர் மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார். .
ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நேற்று முன் தினம் மாலை குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.
இந்த சாட்சியத்தை பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்த பேதுரு ஆராச்சி வழங்கிய போது, தெமட்டகொடை தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஆணைக் குழுவுக்கு கையளித்ததுடன் அவற்றை ஆணைக் குழு ஊடகங்களுக்கும் வழங்கியது. அந்த புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்படாத புகைப்படங்களாகும்.
அவரது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் சுருக்கமாக வருமாறு
‘குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீடு இரு மாடிகளைக் கொண்டிருந்தது. இந் நிலையில் முதலாவது மாடியில் உள்ள அறையொன்றிலேயே முதல் குண்டு வெடித்துள்ளது.
அந்த மாடியின் மேல் தரையில் குண்டுவெடிப்பால் பாரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக மேல் மாடி உடைந்து விழும் அளவில் இருந்தது.
அந்த பாதிப்புக்களைப் பார்க்கும் போது என கனிப்பின் பிரகாரம், குறித்த தற்கொலை குண்டுதாரி பெண், மாபிள் பதிக்கப்பட்ட தரை மீது, குண்டினை வைத்து நிலத்தில் அமர்ந்து, தமது பிள்ளைகளை அருகே அழைத்துக்கொண்டு இந்த குண்டினை வெடிக்கச் செய்திருக்க வேண்டும்.
அவ்வீட்டில் இடம்பெற்ற 2 ஆம் குண்டு வெடிப்பு சம்பவம், அந்த அறையில் இடம்பெறவில்லை. அது வேறு ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வெடிப்பு இடம்பெர்ற அறை, ஒருவர் மட்டும் இருக்க முடியுமான சிறிய இடமாகும்.
எவ்வாறாயினும் இந்த வெடிப்பு இடம்பெர்ற மஹவில கார்டன் வீட்டிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டார உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் சடலங்களை மீட்ட போது, தற்கொலை குண்டுதரியான பெண், அவரது பிள்ளைகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதறிக் கிடந்துள்ளனர்.’ என சாட்சியமளித்தார்.