கிளிநொச்சி பூநகரி ஏ32 வீதியின் நான்காம் கட்டைப் பகுதியில் ஷரிப்பர் மற்றும் உந்துருளி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (08-06-2020) பிற்பகல் இடம்பெற்றுள்ள இவ் விபத்தில்  42வயதுடைய பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதோடு 40 வயதுடைய நபரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னாரிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் கிளிநொச்சி பூநகரி பள்ளிக்குடா சுனாமி குடியிருப்பிலிருந்து வீதியை கடக்க முற்பட்ட உந்துருளியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

உந்துருளியில்  இருவர் பயணித்த நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மற்றையவர் படுகாயக்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் வந்து பார்வையிட்ட பின்னரே சம்பவ இடத்திலிருந்து எடுத்துச் செல்ல முடியும் என பிரதேச பொது மக்கள் வீதியை மறித்து எதிா்ப்புத் தெரிவித்த நிலையில் நீண்ட நேரமாக சடலம்  வீதியோரமாக காணப்பட்டது.

இந்த நிலையில்  அப் பகுதி  பொது மக்களுக்கும்  பொலீஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கலகம் அடக்கும் பொலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். பின்னர் நிலைமை சுமூகமாக மாறியது.

இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக  விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டுவருகிறார்கள்.

Share.
Leave A Reply