இன்று இலங்கை வரலாறு காணாத நெருக்கடிக்குள் சென்றுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தியுள்ள ‘கொரொனா’ வைரஸ் மட்டுமல்ல, அதனால் பாதிப்படைந்துள்ள உலகப் பொருளாதாரமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றுமதி, வெளிநாட்டுச் செலாவணி, உல்லாசப் பயணத்துறை போன்றன பெரும் பிரச்சனைகளாக மாறியுள்ளன. இதனால் நாட்டின் அரச கட்டமைப்பானது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமிடையே ஊசலாடுகிறது.
எதிர்நோக்கியுள்ள இப் பிரச்சனைகளைக் கையாள்வதாயின் நாட்டின் அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்காலம் நோக்கிய காத்திரமான பாதை குறித்த சிந்தனைகள் அவசியமானவை.
இலங்கையின் தற்போதைய நிலையைக் கவனிக்கையில் அங்கு அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, கொரொனா நெருக்கடி எனக் கூறலாம்.
இவை மூன்றிற்குமிடையே இறுக்கமான தொடர்பு உள்ளது. ஆனாலும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும், நிலைபேறான ஆட்சிக்கும் தேசிய நல்லிணக்கம் அவசியமானது.
சுதந்திர காலம் முதல் தேசிய நல்லிணக்கம் என்பது மிகவும் பலவீனப்பட்டே சென்றுள்ளது. இப் பலவீன நிலைக்குப் பிரதான காரணம் சிங்கள அதிகார வர்க்கத்தினரே எனக் கூறினாலும், தமிழர் தரப்பினரும் இப் பிரச்சனைகள் உக்கிரமடைவதற்கு உதவியுள்ளனர் என்பது குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
வரலாறும் பாடங்களும்
தேசிய இனப் பிரச்சனை தற்போது மிகவும் கூர்மை அடைந்து நாட்டின் பொருளாதாரத்தை அச்சுறுத்தியுள்ள நிலையில் அது முழு நாட்டையும் பல்வேறு விதங்களில் பாதித்துள்ளதால் தற்போது காணப்படும் நிலைப்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விகளே எம் முன் உள்ளது.
தமிழர் தரப்பில் சாத்வீகம், ஆயுதப் போராட்டம் அல்லது வன்முறை என அணுகுமுறைகள் சென்ற போதிலும் அவை விட்டுச் செல்லும் பெறுபேறுகள் பலமான தாக்கத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தத் தவறவில்லை.
உதாரணமாக சாத்வீக போராட்டம் என்ற பெயரில் உண்ணாவிரதம், சாலை மறியல், கடையடைப்பு, சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு எனத் தொடர்ந்தன.
இப் போராட்டங்களின் விளைவுகள் என்ன? அவை வெறுமனே போராட்டங்களா? அல்லது அவற்றினால் ஏற்பட்ட காத்திரமான மாற்றங்கள் என்ன? என்ற கேள்விகளை எழுப்பினால் திருப்தியான பதிலை எம்மால் பெற முடியவில்லை.
இன்று அவை ஒரு பலவீனப்பட்ட சமூகத்தின் கையாலாகாத செயற்பாடுகள் என்றே வர்ணிக்கப்படுகின்றன.
மகாத்மா காந்தி மேற்குறித்த பல போராட்டங்களை நடத்திய போதிலும் ஈற்றில் அதன் முடிவு வெற்றியளித்ததால் அவை இன்றும் நினைவுகூரப்படுகின்றன.
ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமையில் அதே பெயரில் நடத்தப்பட்ட இவ்வகை நடவடிக்கைகள் இன்று சப்பாணிப் போராட்டங்கள் என வர்ணிக்கப்படுகின்றன.
அதே போலவே சுமார் முப்பது ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆயுத வன்முறையும் அதன் காரணமாக இழக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும், துயரங்களும் விடுதலை என்ற பெயரில் வீணாகிப்போனதாக உணரும் நிலை போராட்டம் முடிவடைந்த மிகக் குறுகிய காலத்திலேயே வெளிப்படுகிறது.
இந்த இரண்டு காலப்பகுதிகளிலும் தமிழரசுக் கட்சியே அரசியல் தலைமையை வைத்திருந்தது. அவ்வாறாயின் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் தலைமையை வைத்திருக்கும் தமிழரசுக் கட்சி தற்போது எடுத்துள்ள பாதையில் சரியாகப் பயணிக்கிறதா? என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.
அரசியல் யாப்பின் பின்னணியில்
தமிழரசுக் கட்சியின் போராட்டங்கள் அதன் ஆரம்பத்திலிருந்தே இலங்கையின் அரசியல் யாப்பிற்கு எதிரானவையாகவே இருந்துள்ளன.
கட்சியின் தோற்றமே மலையக மக்களின் சிவில் உரிமைகளின் பறிப்புக்கு எதிரான குரலாகவே அமைந்தது. நாட்டின் அரசியல் அமைப்பு தமிழ் மக்களுக்கான அல்லது தேசிய சிறுபான்மை இனங்களுக்கான ஜனநாயக உரிமைகளை வழங்கவில்லை என்பதே சாத்வீகம், வன்முறை ஆகிய போராட்டங்களின் பிரதான முறைப்பாடாகக் காணப்பட்டது.
உதாரணமாக, 1972ம் ஆண்டு வரையப்பட்ட முதலாவது குடியரசு யாப்பு தமிழர்களின் உரிமையை முற்றாகப் பறித்துள்ளதாகவும், அரசியல் யாப்பினைத் தம்மால் ஏற்க முடியாதெனவும் கூறியே தந்தை செல்வா 1972 இல் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்து தமது எதிர்ப்பினை நிருபிக்கும் பொருட்டு இடைத் தேர்தலில் குதித்தார்.
அதே போலவே 1978ம் ஆண்டு ஐ தே கட்சி இரண்டாவது குடியரசு யாப்பினை வரைந்தபோது அதில் சிறுபான்மையினரின் உரிமைகள் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறியே அந்த வரைபு முயற்சிகளில் பங்கு கொள்ளாது வெளியேறினர்.
அரசியலமைப்பின் 6வது திருத்தத்தினை எதிர்த்து நாட்டைவிட்டு வெளியேறினர். இவ்வாறு அரசியல் அமைப்பிற்கு எதிராகவே தமிழரசுக் கட்சியின் போராட்டங்கள், செயற்பாடுகள் அமைந்திருந்தன.
இப் போராட்டங்களில் பிரதான பேசு பொருளாக தமிழ்ப் பிரதேசங்களில் அதிகரித்து வரும் சிங்கள குடியேற்றங்கள், நிர்வாகக் கட்டுமானங்களில் சிங்கள மொழித் தேர்ச்சி, அரச சேவைப் பாகுபாடுகள், அரச உதவியுடன் நடைபெறும் நிலப் பறிப்புகள் பிரதானவையாக அமைந்திருந்தன.
தமிழரசுக் கட்சியின் சாத்வீகப் போராட்டங்களினாலும், அதன் பின்னதான ஆயுத வன்முறைகளாலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? இன்றுள்ள நிலமைகள் என்ன? சிங்கள பெரும்பான்மையினரின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பத்தில் வெற்றி அளிப்பதாகக் காணப்பட்ட போதிலும் அவ் வெற்றிகளைத் தொடர்ந்து தக்கவைக்க முடியாது என்பதை உணர முடியாத தலைமையாக அரசியல் தலைமையும், ஆயுதத் தலைமையும் இருந்துள்ளது.
அவ்வாறாயின் சாத்வீகப் போராட்டங்களை இன்று சப்பாணிப் போராட்டங்களாக வர்ணிப்பது போலவே ஆயுதப் போராட்டமும் கோட்பாட்டு வழிநடத்தலும், அணுகுமுறைத் தந்திரங்களும் அற்று தனி மனிதனின் ஆளுமையில் நடத்தப்படும் போராட்டங்களின் விளைவுக்கான உதாரணமாக இவ் வரலாறு இன்று எழுதப்படுகிறது.
ஆயுதப் போராட்டத்தில் பல தியாக வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் போராட்டம் தோல்வியை அடைந்த பின் அத் தியாக வரலாறுகளும் துரோகத்தின் வரலாறாகவே எழுதப்படுகின்றன.
உண்மைகளும், மிகைப்படுத்தல்களும்
இத்தனை தோல்விகளும், அனுபவங்களும் தமிழர் அரசியலில் நிறைந்துள்ள நிலையில் இன்றுள்ள நிலவரங்கள் எவற்றை எமக்கு உணர்த்துகின்றன?
தமிழ் மக்களின் அரசியல் தiமையை இன்றுவரை கொண்டுள்ள தமிழரசுக் கட்சியினர் இன்னமும் தாம் பலமான நிலையில் இருப்பதான ஓர் தோற்றப்பாட்டைக் காட்ட முயற்சிப்பதாகவே தெரிகிறது.
உதாரணமாக விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவிச் சென்ற வேளையில் அவர்களின் பிரச்சாரங்கள் உண்மையை மறைத்துத் தாம் தொடர்ந்து வெற்றியை நோக்கிச் செல்வதாகக் கூறினர்.
ஆரம்பத்தில் இவ்வாறான மிகைப்படுத்திய செய்திகளை மக்களை ஊக்கப்படும் நோக்கில் வெளியிட்டாலும் படிப்படியாக அவற்றை அவர்களே உண்மை என நம்பும் அவலநிலை காணப்பட்டது.
போர் தோல்வியை நோக்கிச் சென்ற இறுதிக் காலத்திலும், ஆயுதங்களுக்கான பணம் திரட்டல் போரின் வெற்றியை முன்வைத்தே வெளிநாடுகளில் நடைபெற்றன.
எனவே இவ்வாறான மிகைப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாடு உண்மை நிலையை மக்களுக்கு மறைக்கிறது.
அதுவே இன்றும் தொடர்கிறது. உதாரணமாக ஐ நா மனித உரிமைச் சபைச் செயற்பாடுகள், இலங்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாடு என்பவை தமிழர்களின் மேலுள்ள கரிசனை அல்லது மனித உரிமை என்பதை விட அந் நாடுகளின் பூகோள அரசியல் செயற் தந்திரங்கள் என்பதைப் பலரும் அறிவர்.
தமிழ் அரசியலின் இப் பலவீன நிலையை இலங்கை அதிகார வர்க்கமும் நன்கு அறியும். நாட்டின் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான எவ்வித தீர்வுகளும் இலங்கை அரசிடம் இல்லை.
அவர்கள் மிகவும் திட்டமிட்டே புதிய அரசியல் யாப்பு வரைவதற்கான இடைவெளியை ஏற்படுத்தி, வெளிநாட்டுக் கடன்களைப் பெறும்பொருட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றினர்.
தமக்குள்ளே உள்ள இப் பலவீனத்தைத் தொடர்ந்து மறைத்து வருகிறது. தாம் பலமான சக்திகள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி ஆட்சியாளருடன் தாம் பேசுவதாக காட்டிக் கொள்கிறது.
எவ்வித தீர்வுத் திட்டங்களும் அரசின் மேசையில் இல்லாத நிலையில் குறைந்த பட்சம் 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த முழுமனதோடு செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனையும் போட்டுடைத்துள்ளார்கள். அது மட்டுமல்ல அரசாங்கத்துடன் இணைந்தே அதனைக் கொலை செய்துள்ளார்கள். இவை பற்றிய விபரங்களைப் பின்னர் பார்க்கலாம்.
2009 இன் பின்னரான தமிழரசுக்கட்சியும், அதன் பின்புலமும்
தமிழரசுக் கட்சியின் இத் தோல்வியான நிலைக்கு அவர்கள் மட்டுமே காரணம் என்பதாக நாம் கொள்ளவில்லை.
இலங்கை அரசுகள் இதில் நம்பிக்கையோடு செயற்படவில்லை. உதாரணமாக. 2005ம் ஆண்டு பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ஸ சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அறிக்கை தயாரித்தார்.
2006ம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஒன்றினை நியமித்து அறிக்கை பெற்றார்.
அதே போலவே மைத்திரி – ரணில் நல்லிணக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் தோல்வி அடையச் செய்தார்.
2005 – 2015ம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டின் முக்கியமான அதிகார மையங்களின் கட்டுப்பாடு மகிந்த தரப்பினரிடமே இருந்தது. அது மட்டுமல்ல தாம் விரும்பிய வகையில் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மக்கள் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது.
இவ்வாறான பலமான நிலை அரச தரப்பில் இருந்த வேளையில் தமிழர் தரப்பில் முக்கிய தலைவர்கள் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
ஆளுமை மிக்க தலைவர்கள் அற்ற நிலையில் வெறுமனே சில பாராளுமன்ற ஆசனங்கள் மட்டுமே இன்றைய பலமாக உள்ளது.
அரசியல் அடிப்படையிலும், ஆளுமை அடிப்படையிலும் பலவீனமடைந்துள்ள தமிழரசுக்கட்சி தற்போது ஏற்கெனவே காணப்பட்ட உள் மோதல் காரணமாகத் தோன்றிய இதர பலவீனப்பட்ட அமைப்புகளின் கலவையாகவே தமிழர் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.
இதனால் அரசாங்கத்தைச் சற்றுத் தமக்கு அண்மையில் எடுத்து வருவதற்கான அல்லது அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி வற்புறுத்துவதற்கான ஆளுமை அக் கட்சியின் மத்தியில் காணப்படவில்லை. இதுவே இலங்கை அரசு தாம் எண்ணியவாறு பிரச்சனைகள் குறித்த விளக்கங்களையும், தீர்வுகளையும் முன்வைக்கிறது.
தமிழ் மக்கள் இவ்வாறான கையறு நிலைக்குத் தள்ளப்பட்டதன் காரணம் வெறுமனே தமிழரசுக்கட்சிதான் என்பதாக அர்த்தங்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஆனால் தமிரசுக்கட்சியின் மிதவாத, எதனையும் பிறப்பிக்காத அரசியல் போக்கின் விளைவே மிதவாதத்திற்கெதிரான தீவிரவாதமாகும். மிதவாத அரசியலினதும், தீவிரவாத அரசியலினதும் தோல்வியே 2009ம் ஆண்டின் பின்னர் தமிழ் அரசியல் என்பது மிகவும் பலவீன நிலைக்குச் சென்றதன் காரணமாகும்.
ஆனால் அதன் பின்னர் தமிழ் அரசியலைச் சரியான அரசியல் செல்நெறியில் எடுத்துச் செல்வதற்கான ஆக்கபூர்வ முயற்சி எதுவும் தமிழரசுக்கட்சியால் எடுக்கப்படவில்லை. 2009 இன் பின்னர் பாரிய மாற்றத்தை நோக்கிச் சென்றதாக கூறிய போதிலும் வெறும் அரசியல் பாதை மாற்றம் மட்டும் பாரிய மாற்றமாக மாறாது.
அதன் பின்னால் மக்கள் அணி திரட்டப்படவேண்டும். தமிழ் அரசியலில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், அடிப்படையில் தேசிய இனப் பிரச்சனையில் குறைந்தபட்ச தீர்வை அடைவதற்கு எவரும் தடையாக இருந்ததில்லை.
விடுதலைப்புலிகள் எவ்வாறு ஏனைய விடுதலை அமைப்புகளின் மேல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி அரசாங்க பாதுகாப்பை நோக்கித் தள்ளினார்களோ, அதேபோலவே, தமிழரசுக்கட்சியினர் பரந்த அளவிலான நல்லிணக்கத்தை நோக்கித் திட்டங்களை வகுக்காமல் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டிற்குள்ளும், மூடிய கதவிற்குள்ளும் கட்சியை வைத்திருந்தமையால் ஏனைய சக்திகளால் தொடர்ந்தும் அரசியல் உதிரிகளாக செயற்பட முடியவில்லை.
இன்று பல அமைப்புகள் தேசிய இனப் பிரச்சனை தொடர்பான விவகாரங்களை தமிழரசுக்கட்சியிடம் ஒப்படைத்து மக்களுக்கு உதவுதல் என்ற அடிப்படையில் அபிவிருத்தி என்ற குறுகிய வட்டத்திற்குள் தம்மை ஒப்படைத்துள்ளனர்.
இவை அவர்களின் தெரிவு என்பதை விட தமிழரசுக்கட்சியின் குறுகிய நலன் குறித்த செயற்பாடுகளின் விளைவேயாகும்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தின் உதவிகள் பெறுவது சலுகைகள் எனவும், துரோகச் செயல்கள் எனவும் வர்ணித்த தமிழரசுக்கட்சி, அரசாங்க அதிபர் காரியாலயங்களில் சட்டமறுப்பு, சத்தியாக்கிரகம் எனப் போராட்டத்திற்கு மக்களை அழைத்த அக் கட்சி தற்போது அரசாங்க அதிபர் காரியாலயங்களுக்குள் சென்று ‘கம்பரெலிய’ திட்ட உதவி, சமுர்த்தி திட்ட உதவி என இணைந்து செயற்படுகின்றனர்.
இதனையே ஏனைய அமைப்புகள் கூறியும், செயற்பட்டும் வந்தன. இந் நிலையில் தமிழரசுக்கட்சி அவர்களுடன் இணைந்து செயற்படாது ஏன் தவிர்த்துக்கொண்டது? ஐக்கியத்தை நோக்கி விட்டுக்கொடுப்புடன் புதிய பாதையை வகுக்க ஏன் தவறியது?
சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கங்களின் பின்னணியில் அரசாங்கம் வெளிநாட்டவர்களைத் தனது சேமிப்பு வங்கியில் முதலீடு செய்யுமாறும், அதிக வட்டி வழங்குவதாகவும் உத்தரவாதமளித்தது.
”புலம்பெயர் தமிழர்கள் ஓர் வலுவான அமைப்பில் செயற்பட்டிருப்பின் அல்லது புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு கூட்டமைப்பினர் அவ்வாறான ஓர் கட்டுமானத்தின் தேவையை ஏற்கெனவே உணர்ந்து செயற்பட்டிருப்பின் அரசின் இக் கோரிக்கைக்குப் பதிலாக தேசிய நல்லிணக்க திட்டங்களை முதலில் அறிவித்தால் சேமிப்பில் உதவத் தயார் என வற்புறுத்தியிருக்க முடியும்.”
தொடரும்..
வி.சிவலிங்கம்
-நன்றி. தமிழ் மிரர்-