மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புபட்ட கும்பல், 2020 இல் இலங்கையில் இரத்தக் களரியை ஏற்படுத்த இரகசியமாக திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னரேயே சி.ஐ.டி. மாவனெல்லை நீதிவான் நீதிமன்றுக்கு இரகசிய அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.
2019 மார்ச் மாதம் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும், அதனை மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்க தனது கையெழுத்தில் சமர்ப்பித்துள்ளமையும் நேற்று, உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சிப் பதிவின் போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்றது.
ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக்க டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.
இதன்போது நேற்றைய தினம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் பொலிஸ் பரிசோதகர் சுரேஷ் பிரியங்கர, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்முனி அருண ஆகியோரின் சாட்சியத்தை தொடர்ந்து சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனாக மாரசிங்க சாட்சியம் அளித்தார்.
அதன்போதே சிரேஷ்ட அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத்தின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தினார்.
அவருக்கு முன்னர் வாக்கு மூலம் அளித்த இரு அதிரடிப் படையின் அதிகாரிகளும் புத்தளம் – வனாத்தவில்லு பயிற்சி முகாம் கண்டறியப்பட்ட போது அங்கு தேடுதல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட குழுக்களை வழி நடாத்தியவர்களாவர்.
இந் நிலையில், சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்க சாட்சியமளிக்கையில்,
கடந்த 2019 மார்ச் 12 ஆம் திகதி கயெழுத்திடப்பட்ட இரகசிய அறிக்கை ஒன்றினை தான் மாவனெல்லை நீதிவானுக்கு சமர்ப்பித்ததாக குறிப்பிட்டார்.
‘ அந்த ஆவணத்தில் ( அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்படவில்லை) வனாத்தவில்லு பயிற்சி முகாம் கண்டறியப்பட்ட பின்னர் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளில், 2020 ஆம் ஆண்டு இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இரத்தக் களரியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இரு குழுக்களாக பிரிந்து அந்த தாக்குதல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தற்கொலைதாரிகளுக்கு அபூ என்ற ஆரம்பத்துடன் புனைப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘
பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்கவுக்கு முன்னர் சாட்சியமளித்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் பொலிஸ் பரிசோதகர் சுரேஷ் பிரியங்கர,
தான் 2019 ஜனவரி 16 ஆம் திகதி மாலை வனாத்தவில்லு – லக்டோ தோட்டத்துக்கு தனது கட்டளை அதிகாரியின் உத்தரவின் கீழ் சென்றதாக கூறினார்.
தான் போகும் போதும் சி.ஐ.டி.யின் பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க உள்ளிட்ட குழு அங்கு இருந்ததாகவும், அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய தோட்டத்தின் நுழை வாயிலில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் இருந்த சிறிய வீட்டினையும் அவ்வீட்டிலிருந்து 600 முதல் 800 மீற்றர் தூரத்தில் இருந்த மற்றொரு வீட்டினையும் சோதனை செய்ததாக கூறினார்.
முதலில் சோதனை செய்யப்பட்ட 200 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டிலிருந்து 600 முதல் 800 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் இரு துப்பககிகளும் தோட்டக்களும் சிக்கியதாக கூறிய அவர், அவ்வீட்டில் சிறு பிள்ளை ஒன்றுடன் கூடிய குடும்பம் ஒன்று இருந்தமைக்கான அடையாளங்கள் , சான்றுகள் இருந்ததாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அதனை தொடர்ந்து சாட்சியமளித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்முனி அருண, தனக்கு சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவும், தனது கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபும் கொடுத்த ஆலோசனை, உத்தரவின் பேரில் சுரேஷ் பியங்கர உள்ளிட்ட குழுவை முதலில் அங்கு அனுப்பி வைத்ததாகவும் பின்னர் அங்கு தானும் சென்றதாகவும் கூறினார்.
இந் நிலையில் சாட்சியம் அளித்த சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்க,
குறித்த விடயம் தொடர்பில் பின்வருமாரு தெரிவித்தார்.
‘ 2019 ஜனவரி 16 ஆம் திகதி பிற்பகல் 3.05 மனியளவில் நாம் வனாத்தவில்லு லக்டோ தோட்டத்தை அடைந்தோம். எமது குழுவுடன் கேகாலை பொலிஸ் வலயத்தின் அழகக்கோன் பொலிஸ் கான்ஸ்டபிள் இருந்தார். அவரைவிட எமக்கு தகவல் அளித்த தஸ்லீமும் எம்முடனேயே இருந்தார்.
நாம் குறித்த தோட்டத்துக்குள் நுழியும் போது அந்த தென்னந் தோப்பில், 200 மீற்றர் தூரத்தில் இருந்த வீட்டின் முன்னால் இருவர் இருந்தனர்.
ஒருவர் முபீஸ். மர்றையவர் ஹமாஸ். முபீஸின் கையில் அலவாங்கு ஒன்று இருந்தது. நாம் அவர்களை முதலில் கைதுசெய்தோம். அதன் பின்னர் அவ்வீட்டை நோக்கி தோப்பின் பின் பக்கத்தில் இருந்து இருவர் நடந்து வந்தனர். ஒருவர் நப்ரிஸ். மற்றையவர் நவீட். அவ்விருவரையும் எமது பொறுப்பில் எடுத்து நலவரையும் விசாரித்தோம்.
இந் நிலையிலேயே, அதிரடிப் படையின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டோம். அதிரடிப் படையினர் ஸ்தலம் வரும் போது இருட்டிவிட்டது. அதனால் மறு நாளே வெளி தோட்டப் பகுதியில் பூரண சோதனைகளை முன்னெடுக்க முடிந்தது.
இதன்போது அபாயகரமான வெடிபொருட்கள் உட்பட 40 வகையான பொருட்களை நாம் கைப்பற்றினோம். அதில் 12 குழல் துப்பாக்கி, வாயு ரைபிள் உள்ளிட்டவையும் அடங்கும். ‘ என சாட்சியமளித்தார்.
இதன்போது அவ்விடத்தில் கைதுசெய்யப்பட்ட நப்ரிஸ் மற்றும் நவீர் ஆகியோர் பின்னர் மாவனெல்லை நீதிமன்றம் ஊடாக விடுவிக்கப்பட்ட விடயம் தொடர்பிலும், விடுதலை செய்யப்பட ஏதுவாக சி.ஐ.டி.யே அறிக்கை சமர்ப்பித்ததாகவும் கூறப்படும் விடயம் தொடர்பிலும் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்கவை குடைந்தனர்.
அதற்கு பதிலளித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க,
‘ நவீட், நப்ரிஸ் ஆகியோர் அங்கு கைது செய்யப்பட்ட முபீஸின் மனைவியின் சகோதரர்களாவர். அவர்கள் அங்கிருந்த கோழிப் பண்ணையில் சேவைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். நப்ரிஸ் கோழிப் பண்ணையில் வேலை செய்யும் நிலையில், நவீட் அங்கு கைது செய்யப்படும் போதும் இரு தடவைகளே வந்து சென்றுள்ளமை தெரிந்தது. கைது செய்யப்படும் போதும் அவர் நப்ரீஸுக்கு பகல் உணவு எடுத்து வந்துள்ளார் என கூறப்பட்டது.
நப்ரீஸ் எனும் நபரே 5 மாதங்களுக்கு முன்னர், கோழிப் பண்ணை அருகே உள்ள வீட்டில் தனது மனைவி மற்றும் பிளைகளுடன் இருந்துள்ளமையும் தெரியவந்தது.
இவ்வாறான பின்னணியில் நப்ரிஸ் , நபீஸ் தொடர்பில் விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டமைக்கான ஆதாரங்கள் இல்லாத நிலையிலேயே, பயங்கரவாத தடைச் சட்டத்தின் 11/1 ஆம் பிரிவின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவிடம் கோரப்பட்டது. அதன் பின்னரே அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
குறித்த இருவர் தொடர்பிலும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு எனது மேலதிகாரியான உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் கூறிய நிலையிலேயே அதற்கென சார்ஜன் ஒருவரின் கீழ் விசாரணை நடாத்தப்பட்டது.’ என்றார்.
இதன்போது, நப்ரீஸ், நவீட் ஆகியோர் இருந்த கோழிப் பண்ணைக்கு அருகே இருந்த வீட்டில் இருந்து அல்லவா 12 குழல் துப்பாக்கியும் வாயு ரைபிளும் மீட்கப்பட்டுள்ளன. அதனை அதிரடிப் படை அதிகாரி சாட்சியமளித்தார். அப்படியானால் அவர்கள் அது தொடர்பில் மேலதிக விசாரணை செய்யாது விடுவித்தது எப்படி? என ஆணைக் குழு கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த மாரசிங்க, கோழிப் பண்ணை அருகே உள்ள வீட்டிலிருந்து துப்பககிகள் மீட்கப்பட்டமை, தான் ஆணைக் குழுவில் முன்வைத்த சாட்சியத்துக்கு அமையவே அறிந்ததாகவும், அதுவரை அந்த துப்பாக்கிகள் லக்டோவத்த தோட்ட நுழைவாயிலில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் இருந்த போதே தன்னால் பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறினார்.
கோழிப் பண்ணைக்கு அருகே உள்ள வீட்டிலிருந்து அத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பின், குறித்த இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு செய்யாமல் அவர்கள் விடுவிக்க ஏதுவாக அறிக்கை சமர்ப்பித்தமை தவறானது என தற்போது தோன்றுவதாகவும், எனினும் அச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக எந்த சான்றுகளும் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே சாட்சியமளித்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்முனி அருண, குறித்த தோட்டத்தில் துப்பாக்கிப் பயிற்சி அளிக்கப்பட்டமைக்கான தடயங்கள் இருந்ததாக கூறினார்.
பிளாஸ்டிக் மூடிகளில் வட்டமிடப்பட்டு குறிக்கப்பட்டு அப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், அந்த் அலக்டோ தோட்டம் தென்னந்தோப்பானது களப்புடன் சேர்ந்ததாக இருந்ததாகவும் கடல் மார்க்கமாக படகூடாக அங்கு எதனையும் கடத்த முடியுமான சூழல் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனைவிட தனது சாட்சியங்களின் இடையே விஷேட விடயங்களை வெளிப்படுத்திய சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி ஜானக மாரசிங்க,
வனாத்தவில்லு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்துக்கு தேசிய உளவுத் துறை அதிகாரிகள், இராணுவப் புலனாய்வுப் பிரிவு உயரதிகாரிகள் வருகை தந்ததாகவும் அவர்களிடம் குறித்த வெடிபொருட்களின் பாரதூரம் மற்றும் அடிப்படைவாத விடயங்கள் தொடர்பில் தகவல் அறிவிக்கப்பட்டதாகவும், இதனைவிட செயற் திறனாக செயற்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.