சாப்பாட்டு விஷயத்தில் பொதுமக்களை ஏமாற்றிய உணவகம் ஒன்றின் உரிமையாளர்கள் இருவருக்கு பாங்காக்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று 1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

தாய்லாந்தில் உள்ள லீம்கெட் இன்ஃபைனைட் எனும் கடல் உணவுகளை விற்பனை செய்யும் உணவகம், தங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக முன்கூட்டியே இணையம் மூலம் பணம் செலுத்தும் திட்டம் ஒன்றை கடந்த ஆண்டு அறிவித்தது.

அந்த உணவகத்தின் கடல் உணவுகளை குறைந்த விலையில் பெறுவதற்காக சுமார் 20 ஆயிரம் பேர், 50 மில்லியன் தாய் பட் (இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய்) மதிப்பிலான வவுச்சர்களை இணையம் மூலம் வாங்கினார்கள் என்று தாய்லாந்திலுள்ள செய்தி நிறுவனமான பிபிஎஸ் தெரிவிக்கிறது.

ஆனால் தங்களுக்கான தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருப்பதாகவும், அதைப் பூர்த்தி செய்ய முடியாது என்றும் கூறி அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் அபிசார்ட் பவோன்பன்சாரக் மற்றும் ப்ரபாசன் பவோன்பன்சா ஆகியோர் அந்த உணவகத்தை மூடிவிட்டனர்.

பணம் செலுத்தி ஏமாந்த நூற்றுக்கணக்கானவர்கள் புகார் அளித்த பின்பு அதன் உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தாய்லாந்தில், அதிக எண்ணிக்கையில் பெறப்படும் புகார்கள் தொடர்பான வழக்குகளில், இவ்வாறு நூறு ஆண்டுகள் அல்லது ஆயிரம் ஆண்டுகள் என்று தண்டனை விதிக்கப்படுவது வழக்கமானதுதான்.

ஆனாலும் பொது மக்களை ஏமாற்றிய குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையாக அந்த நாட்டு சட்டப்படி 20 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழிக்க முடியும்.

நடந்தது என்ன?

லீம்கேட் உணவகத்தின் வாடிக்கையாளர்கள் அங்கு நேரடியாக சென்று உணவு வாங்கும்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் உணவு வாங்குவதற்கு, பல மாதங்களுக்கு முன்பே வவுச்சர்களை இணையம் மூலம் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால், தேவை அதிகமாக இருப்பதால் அதற்கு ஏற்ப கடல் உணவு வகைகளை தங்களால் வாங்க முடியவில்லை என்று கூறி சென்ற மார்ச் மாதம் அந்த உணவகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்தனர்.

ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு, அந்தத் தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் புகார் அளித்தவர்களில் 818 வாடிக்கையாளர்களில் 375 பேருக்கு மட்டுமே பணம் திரும்ப வழங்கப்பட்டது.

நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரும் 723 குற்றங்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டது. அவர்களுக்கு 1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தண்டனைக் காலம் பாதியாக குறைக்கப்பட்டு ஒவ்வொருவரும் தலா 723 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருந்தாலும் தாய்லாந்து நாட்டு சட்டங்களின்படி அவர்களால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழிக்க முடியும்.

2017ஆம் ஆண்டு நடந்த ஒரு குற்ற சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு தாய்லாந்து நீதிமன்றமொன்று 13,000 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply