நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக 2019 நவம்பர் 18 பதவியேற்றுக்கொண்ட  கோதாபய ராஜபக்ச இப்போது பதவியில் 6 மாதங்களை நிறைவுசெய்திருக்கிறார். குறுகிய ஆனால் பரபரப்பூட்டும் நிகழ்வுகள் நிறைந்த இந்த பதவிக்காலத்தில் அவர் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார் ; தொடர்ந்து முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், ஜனாதிபதியாக கோதாபயவின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வது இந்த கட்டுரையில் எனது நோக்கமல்ல.பதிலாக, அவரின் ஆட்சியின் கீழான இந்த சில மாதங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவியின் இயல்பு  மிகவும் அசாதாரணமான பாணியில் எவ்வாறு மாறுதலுக்குள்ளாகியிருக்கிறது என்பதில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

வழக்கத்துக்கு புறம்பான சூழ்நிலைகளின் விளைவாக,  பாராளுமன்றத்தின் மீது தங்கியிராத இலங்கையின் முதல் சுயாதீனமான  நிறைவேற்று அதிகார  ஜனாதிபதியாக” இன்று கோதாபய ராஜபக்ச விளங்குகிறார் என்று கூறமுடியும். இதில் அவர்  1978 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதி பதவி தொடர்பில் கொண்டிருந்த நோக்கையும் விஞ்சியிருக்கக்கூடும்.ஜெயவர்தனாவைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்துடன் உடனிணைந்து செயற்படுகின்ற பலம்பொருந்திய ஜனாதிபதி பதவியையே அவர் மனக்கண்ணில் கொண்டிருந்தார். பாராளுமன்றத்தின் மீது தங்கியிராத ஜனாதிபதி பதவியை ஜே.ஆர்.விரும்பியிருந்தாலும் கூட அவர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஊடாக எப்போதுமே செயற்பட்டு பாராளுமன்ற முறையை பேணிக்காத்தாரே தவிர, அதற்கு வெளியே செயற்பட முயறசிக்கவில்லை.

  செயலிழந்த பாராளுமன்றம், பலமிக்க ஜனாதிபதி

பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில், பலம்பொருந்திய ஒரு ஜனாதிபதி அரசு என்ற கப்பலை கடந்த பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிராத பிரதமரையும் ‘ காபந்து அமைச்சரவை ‘ ஒன்றையும் வைத்துக்கொண்டு செலுத்துவதையே இன்று நாம் காண்கிறோம்.

கடந்த வருடம் நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது செயற்பட்டுக்கொண்டிருந்த ‘ பழைய ‘ பாராளுமன்றம் இவ்வருடம் மார்ச் 2 ஜனதிபதியால் கலைக்கப்பட்டது.ஏப்ரில் 25 இல் நடத்துவதற்கு திட்டமிடப்ட்டிருந்த புதிய தேர்தல் கொவிட் — 19 தொற்றுநோய் பரவலின் விளைவாக பின்போடப்பட்டது.புதிதாக நிர்ணயிக்கப்பட்ட திகதியான ஜூன் 20 தேர்தலை நடத்துவதென்பது பெரும்பாலும் சாத்தியமானதல்ல.புதிய பாராளுமன்றம் கூடுவதற்கான மூன்று மாத காலஅவகாசம் ஜூன் 2 க்கு முன்னதாக காப்பாற்ப்படப்போவதில்லை என்பது தெளிவானது.

மார்ச் 2 வர்த்தமானி அறிவிப்பை ரத்துச்செய்து, கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் செயற்படவைப்பதில்லை என்பதில் ஜனாதிபதி விடாப்பிடியாக இருக்கிறார். நெருக்கடிநிலையொன்றைக் கையாளுவதற்கு அயசியலமைப்பின் உறுப்புரை 70(6) இன் கீழ் ஒரு விசேட நோக்கத்துக்காக பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் அவர் தயங்குகிறார்.இதனால் ஜூன் 2 க்கு பிறகு அரசியலமைப்பு நெருக்கடியொன்று உருவாகக்கூடும். ஜூன் 2 க்கு பிறகு பாராளுமன்றம் இல்லாத ஒரு  வெற்றிடத்தில் கடந்த வருடம் 52 சதவீத வாக்குகளை பெற்று தெரிவான ஜனாதிபதி மாத்திரமே ” சட்டமுறைப்படியான ” அதிகாரமையமாக இருக்கும்.இது தொடர்பிலான விவகாரம் இப்போது உச்சநீதிமன்றத்தின் முன்னால் இருக்கிறது.குழப்பகரமான இச்சூழ்நிலையில் ஒரு தெளிவான நிலையை நீதித்துறை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகார மையப்படுத்தல்

மேலும், தற்போதைய சூழ்நிலைகளின் கீழ் ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சிமுறைப் பாங்கு ஜனாதிபதியின் ஆணையின் கீழ் அதிகார மையப்படுத்தல் ஒன்றுக்கு வழிவகுத்திருக்கிறது. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி செயலகத்திலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணிகளிலும் ஒருமுகப்படுத்தப்படுகிறது.ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் மிகப்பெரும் முக்கியத்துவத்தையும் பெறுமதியையும் பெறுகின்றன.” சகலருமே ஜனாதிபதியின் ஆட்களாக ” இருக்கின்ற குழுவொன்றே முக்கிய பதவிகளை வகிக்கிறது. அதில் வழமைக்கு மாறாக பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த அதிகாரிகளே பெருமளவில் உள்ளனர். அவர்கள் எல்லோருமே கோதா விசுவாசிகளாகக் கருதப்படுகிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் புரியாப்புதிராகத் தோன்றுவது அரசியலமைப்புக்கான 19வது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பிரதமரினதும் பாராளுமன்றத்தினதும்அதிகாரங்களை அதிகரித்திருந்தது என்ற உண்மையாகும். அந்த அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னரான நிலைவரத்தில், பிரதமர் ஒப்பீட்டளவில் பலம்பொருந்தியவராகவும்  ஜனாதிபதி அதிகாரமற்றவராகவும் இருப்பர் என்று அரசியலமைப்பு நிபுணர்கள் என்று சொல்லப்படுகின்ற பலர்  கூறியதைக் கேட்டிருக்கிறோம்.

நிலைமாறுகால ஏற்பாடுகளின் ( Transitional provisions ) மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட சில அதிகாரங்கள் சட்டப்படியாக செல்லுபடியாகாமல் போன சூழ்நிலையொன்றில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவே. அவ்வாறு இருந்தாலும்,அதிகாரங்கள் குறைக்கப்பட்டதாக சொல்லப்டுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவி கோதாபயவின் கீழ்  எழுச்சிமிக்கதாகவும் மட்டுமீறிய சுறுசுறுப்புடன் செயற்படுவதாகவும் தோன்றுகிற அதேவேளை, அதிகாரமளிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற பிரதமர் பதவியும் பாராளுமன்றமும் முடமாக்கப்பட்டிருக்கின்றன.

19 வது திருத்தம் பாதுகாப்பு அமைச்சர் பதவி உட்பட எந்தவொரு அமைச்சர் பதவியையும் ஜனாதிபதி வகிக்கமுடியாதவாறு தடுக்கிறது. ஆனால், பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கமால் குணரத்னவை ஜனாதிபதி நியமித்தார். ஜனாதிபதியின் தனிப்பட்ட நேரடியான அறிவுறுத்தல்களின் கீழ் கமால் குணரத்னவே விவகாரங்களை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.அதேவேளை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மதிப்பேதும் இல்லாதவராகவே இருக்கிறார்.

நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி பதவியின் தோற்றுவாய்

இத்தகைய நிலைவரங்களுக்கு வழிவகுத்தது என்ன? ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றம் தொடர்புபட்ட தற்போதைய நிகழ்வுப்போக்குகளை சரியான முறையில்  முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் தோற்றுவாயை சுருக்கமாக ஆராயவேண்டியது அவசியமாகும்.

முன்னர் கூறப்பட்டதைப் போன்று, இலங்கையின் அரசியல் முறைமை பிரிட்டிஷ் வெஸ்ற்மின்ஸ்டர் முறையில் இருந்து பிரெஞ்சு காலிஸ்ட் அரசியலமைப்புக்கு ( French Gaullist constitution ) நெருக்கமான ஒன்றாக மாறியதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரி ஜே.ஆர்.ஜெயவர்தனவே.வெறுமனே பெயரளவிலானதாக ஜனாதிபதி என்ற நிலையில் இருந்து மெய்யான ஒரு அரச தலைவராக மாற்றியமைக்கப்பட்ட ஜனாதிபதி பதவிக்கு அதிகாரம் கைமாறியது.இருந்தபோதிலும், பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் கொண்டதாக அமைச்சரவை இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியதன் மூலமாக ஜே.ஆர்.பாராளுமனறத்தின் ஊடாகவும்  செயற்பட்டார். எனவே இரு பகுதிகளாக அமையவிருக்கும் எனது இந்த கட்டுரையின்  முதலாவது பகுதி ஜெயவர்தனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் படிமுறை வளர்ச்சியை விபரிக்கின்ற அதேவேளை,இரண்டாவது பகுதி கோதாபயவின் பதவிக்காலத்தின் ஆரம்பக்கட்டங்களில் அந்த வளர்ச்சியின் தற்போதைய நிலையை ஆராயும்.

பாராளுமன்றத்தின் மீது தங்கியிருக்காத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை உருவாக்கும் தனது குறிக்கோளை ஜே.ஆர். ஜெயவர்தன மிகுந்த விருப்பார்வத்துடன் தொடர்ந்து முன்னெடுத்தார்.ஜனாதிபதி ஆட்சிமுறையொன்று  பற்றிய தனது நோக்கை அவர் முதன்முதலாக 1966 டிசம்பரில் வெளிப்படுத்தினார். டட்லி சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ( 1965–70) இராஜாங்க அமைச்சராக இருந்த ஜே.ஆர். விஞ்ஞான முன்னேற்றத்துக்கான சங்கத்தில் 1966 டிசம்பர் 14 நிகழ்த்திய முக்கிய உரையொன்றின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி பற்றிய தனது நோக்கை விபரித்துக்கூறியதுடன் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு பாணிகளை அடிப்படையாகக்கொண்ட  ஜனாதிபதி ஆட்சிமுறையொன்றுக்கு ஆதரவாக வாதிட்டார்.

” நிறைவேற்று அதிகார தலைவர் நேரடியாக மக்களினால் தெரிவுசெய்யப்படுவார் என்பதுடன் தனது பதவிக்காலத்தின்போது பாராளுமன்றத்தின் மீது தங்கியிருக்கவும் போவதில்லை. நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையான வருடங்களுக்கு அவர் ஆட்சியதிகாரத்தில் இருப்பார். தெரிவுசெய்யப்பட்ட பாராளுமனனறம் ஒன்றின் விருப்புவெறுப்புகளுக்கு ஆட்படாதவராகவும் சரியான ஆனால் மக்களால் விரும்பப்படாத தீர்மானங்களை பாராளுமன்றத்தின் கண்டனத்துக்குள்ளாகும் சாத்தியத்தையும் பொருட்படுத்தாமல்,எடுக்கக்கூடியவராகவும் அவர் இருப்பார். ஜே.ஆரின் ” நோக்கின் ” சாராம்சம் அவர் கூறிய வார்த்தைகளில் தெளிவாக தொனித்தது.அதாவது ” மக்களினால் நேரடியாக தெரிவுசெய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகார தலைவர் தெரிவுசெய்ப்பட்ட பாராளுமன்றம் ஒன்றின் விருப்புவெறுப்புகளின் மீது தங்கியிருக்காது”.

ஜே.ஆர்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றிய தனது நோக்கை தெளிவான யோசனைகளின் வடிவில் முன்வைத்து வாதிடுவதற்கான வாய்ப்பு 6 வருடங்களுக்கு பிறகு  சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின்போது (1970–77) கிடைத்தது. புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்காக பாராளுமன்றம் ஒரு  அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட்டது. அப்போது ஜே.ஆர்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் டட்லி சேனநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும் இருந்தனர்.

1971 ஜூலை 2 ஜே.ஆர்.அரசியல் நிர்ணயசபையில் பிரேரணையொன்றை முன்வைத்தார்.” அரசின் நிறைவேற்று அதிகாரம் குடியரசின் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். அவர் அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் அந்த அதிகாரத்தை செயற்படுத்துவார். குடியரசின் ஜனாதிபதி 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனினதும் நேரடி வாக்கினால் ஒரு 7 வருட பதவிக்காலத்துக்கு மாத்திரம் தெரிவுசெய்யப்படுவார்.அமைச்சரவைக்கு குடியரசின் ஜனாதிபதியே தலைமைவகிப்பார்”.

ஜே.ஆரின் பிரேரணையை அரசியல் நிர்ணயசபையில் அப்போது கொழும்பு மத்தி எம்பி.யாகவும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் இருந்த ரணசிங்க பிரேமதாச வழிமொழிந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு ஆதரவாக அரசியல்நிர்ணயசபையில் ஆற்றல்முனைப்புடன் வாதிட்டார்.பிரேரணை அந்த சபையால் நிராகரிக்கப்பட்டது.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மே 22 பதிய குடியரசு அரசியலமைப்பொன்றை கொண்டுவந்தது.முன்னைய சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இருந்த மகாதேசாதிபதி பதவி ஜனாதிபதி பதவிக்கு வழிவிட்டது. அப்போது தேசிய அரச சபை என்று அழைக்கப்பட்ட பாராளுமன்றத்திடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட அதேவேளை, ஜனாதிபதி வில்லியம்கோபல்லாவ சம்பிரதாயபூர்வமான அரச தலைவராக வந்தார்.உண்மையான ஆட்சியதிகாரம் பிரதமர் சிறிமாவோவின் வசமிருந்தது.

1973 ஏப்ரிலில் ஆண்டு டட்லி சேனநாயக்கவின் மரணத்தையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தவைவராக ஜே.ஆர். பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் உடனடியாகவே தனது தலைமைத்துப் பதவியை வலுப்படுத்திக்கொண்டு கட்சியை தனது  முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.இப்போது ஜே.ஆரினால். நிறைவேற்று அதிகார ஜனதிபதி பதவி பற்றிய தனது நோக்கை பலம்பொருந்திய நிலையில் இருந்து தொடர்ந்து முன்னெடுக்கக்கூடியாக இருந்தது.

பாராளுமன்றத் தேர்தல் 1977 ஜூலையில் நடத்தப்பட்டது.1997 ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில்  பின்வருமாறு கூறப்பட்டிருந்தது ; ” நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியொருவரிடம் மக்களினால் காலத்துக்குக் காலம் ஒப்படைக்கப்படும்.எமக்கு பழக்கமான பாராளுமன்ற முறையையும் அரசியலமைப்பு பேணிக்காக்கும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருக்கும் கட்சியில் இருந்து பிரதமரை ஜனாதிபதி தெரிவுசெய்வார். அமைச்சரவை உறுப்பினர்களும் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருப்பர்”.

பிரதமர் ஆட்சி முறையில் இருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு மாறுவது என்பது 1977 பொதுத்தேர்தலில் ஐ.தே.க.வின் பிரசாரத்தில் முக்கிய ஒரு அம்சமாக இருந்தது.ஐ.தே.க. பெருவெற்றிபெற்று பாராளுமன்றத்தின் மொத்தம் 168 ஆசனங்களில் 141 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஜே.ஆர்.பிரதமராக வந்தார்.நீண்டகாலமாக தான் மனதில் வளர்த்திருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை என்ற இலக்கை நோக்கி அவர்  விரைவாக செயற்படத்தொடங்கினார்.

ஜே.ஆரும் ஒரு சிறிய அமைச்சர்கள் குழுவும் கட்சியின் முக்கியஸ்தர்களும் முன்னணி சட்டத்தரணி மார்க் பெர்னாண்டோவுடன்  ( பிறகு அவர் உச்சநீதிமன்ற நீதிபதி) சேர்ந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தும் இலக்கை நோக்கி செயற்பட ஆரம்பித்தார்கள். பூர்வாங்க கலந்துரையாடல் 1977 ஆகஸட் 7 நடைபெற்றது.முதலில் 1972 குடியரசு அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்று வரையப்பட்டது.அமைச்சரவையில் கலந்தாலோசித்த பிறகு அந்த திருத்தம் ” தேசிய நலனுக்கு அவசரமாக தேவைப்படும் ” ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு திருத்தம் ஒரு ” அவசர சட்டமூலமாக ” அரசியலமப்பு நீதிமன்றத்துக்கு பாராளுமன்ற சபாநாயகரினால் அனுப்பப்பட்டது. குறீத்துரைக்கப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் அரசியலமைப்பு நீதிமன்றம் சட்டமூலத்தை அங்கீகரித்தது.அதையடுத்து விவாதித்து வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்காக தேசிய அரச சபைக்கு ( பாராளுமன்றம் ) அது சமர்ப்பிக்கப்பட்டது. அந்த சபை 1977 செப்டெம்பர் 22 சட்டமூலத்தை ‘ இரண்டாவது அரசியலமைப்பு திருத்தமாக ‘  அங்கீகரித்தது.நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு கைமாற்றப்பட்டது. இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஜே.ஆர்.சுதந்திரதினமான 1978 பெப்ரவரி 4 பதவியேற்றார்.

அரசியலமைப்பை பதிலீடு செய்தல்

அதேவேளை, 1972 அரசியலமைப்பை முற்றுமுழுதாக புதியதொரு அரசியலமைப்பினால் பதிலீடு செய்யும்  இலக்கை நோக்கியும்  ஜே.ஆர்.செயற்படலானார். அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான தெரிவுக்குழுவொன்றை  அன்றைய சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் நியமிப்பதற்கு வகைசெய்யுமுகமாக தேசிய அரச சபை 1977 அக்டோபர் 20 தீர்மானமொன்றை நிறைவேற்றியது.” இலங்கைக்குடியரசின் அரசியலமைப்பையும் எழுத்தில் உள்ள ஏனைய சட்டங்களையும் மாற்றியமைப்பது குறித்து குழு ஆராயும் ‘ என்பது தெரிவுக்குழுவுக்கான ஆணையில் சாராம்சமாகும்.1977 நவம்பர் 3 தெரிவுக்குழு அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் கொழும்பு மேற்கு தொகுதியை அப்போது பிரதிநிதித்துவப்படுத்திய ஜே.ஆரே தெரிவுக்குழுவின் தலைவராக இருந்தார். ஆனால், ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு 1978 பெப்ரவரியில் அவர் ஒரு எம்பி.யாக  பாராளுமன்றத்தில் இருந்து பதவிவிலகவேண்டியிருந்தது. தெரிவுக்குழுவின்  ஒரு உறுப்பினராக இருந்த ரணசிங்க பிரேமதாச 1978 பெப்ரவரி 23 சபாநாயகரினால் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.அவர் பிரதமராகவும் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக அரசியலமைப்புக்கான இரண்டாவது திருத்தத்தின் ஊடாக அறிமுப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இப்போது புதிய அரசியலமைப்பு வரைவில் ஒழுங்கமைக்கப்பட்டு கூட்டிணைக்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே  இப்போது அரச தலைவராகவும் அரசாங்கத்தலைவராகவும் வந்தார். தேர்தல் முறையும் தொகுதி அடிப்படையிலான  முறையில் இருந்து விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைக்கு மாற்றப்பட்டது. இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசானது.” ஜே.ஆர்.அரசியலமை்பு ” என்று பிரபலமாகக் கூறப்படுகி்ற புதிய அரசியலமைப்பு 1978 செப்டெம்பர் 7 முறைப்படியாக பிரகடனம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவரப்பட்ட பிறகு அதை பேராசிரியர் அல்பிரெட் ஜெயரத்தினம் வில்சன் தனது ” ஆசியாவில் காலிஸ்ட் முறை; இலங்கையின் அரசியலமைப்பு ” என்ற நூலில் ஆராய்ந்தார். ” உள்ளுக்குள் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ வரக்கூடிய நெருக்குதல்களினால் எளிதில் தடுமாறாத உறுதியான நிறைவேற்று அதிகாரபீடத்தை ஏற்படுத்துவதே ஜே.ஆரின் நோக்கமாக இருநதது. அவரது முயற்சிகளின்  விளைவாக இறுதியில் பல வழிகளிலும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளிலும் பிரெஞ்சு ஜனாதிபதியையும் விட கூடுதலான அளவுக்கு பலம்பொருந்திய ஒரு ஜனாதிபதி உருவாகியிருக்கிறார் ” என்று அவர் கூறினார்.ஜனாதிபதி ஆட்சிமுறையொன்றை  ஜே.ஆர்.அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட, பாராளுமன்றத்துக்கு வெளியில் இருந்து அமைச்சரவையை நியமிக்கும் ஏற்பாட்டை அவர் புகுத்தவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு அம்சமாகும். அமைச்சரவைக்கு சமாந்தரமான அதிகார நிலையமாக பலம்பொருந்திய ஜனாதிபதி செயலகத்தையும் ஜே.ஆர்.விரும்பவில்லை.ஏன் அது ?

இந்த விவகாரம் தொடர்பில் பேராசிரியர் வில்சனின் விசேடமான கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜே.ஆர்., ” ஜனாதிபதியை சுற்றி இருக்கக்கூடிய ஆலோசகர்களை நியமிப்பதற்கு நான் மிகவும் தயங்குகிறேன் என்பதை சொல்லியாகவேண்டும்.மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற காரணத்தால் தனது பிரதமரையும் அமைச்சரவை உறுப்பினர்களையும் மாத்திரமே ஆலோசகர்களாக கொண்டிருக்க விரும்புகிறேன் ” என்று கூறினார்.

இந்த நிலைப்பாட்டை ஜேஆர்.1978 மே 31 இலங்கை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நிகழ்த்திய உரையில் விளக்கினார். அதில் அவர் கூறியதாவது; ” இலங்கையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட  முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் அரசதலைவரும் அரசாங்கத்தலைவரும் நானே. இது ஒரு அதிகாரப்பதவி. அதனால் அதற்கு பொறுப்பும் இருக்கிறது. எனக்கு பின்னர் வேறு பலர் இந்த பதவிக்கு வருவாரகள் என்பதால், மற்றவர்களினால் பின்பற்றக்கூடிய முன்னுதாரணங்களை எனது பதவிக்காலத்தின்போது உருவாக்கவிரும்புகிறேன். முதலாவதாக, நான் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஊடாகவே எப்போதும் செயற்படுவேன். பாராளுமன்ற முறைக்கு  இருந்துவந்திருக்கின்ற அதிகாரங்களில் எந்தக் குறைப்பையும் செய்யாமல் அந்த  முறையைப் பேணிக்காக்க விரும்புகிறேன். இரண்டாவதாக என் மீது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய ஜனாதிபதியின் ஆட்கள் என்று ஒரு குழுவை நான் உருவாக்கப்போவதில்லை’.

பாராளுமன்றத்தின் மீது ஆதிக்கப்பிடி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்றத்தின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தமை ஜே.ஆர்.காலத்தின் அரசியல் யதார்த்தமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சகல வல்லமையும் பொருந்தியவராக இலுப்பதற்கு பாராளுமன்றத்தின் முழுமையான பலம் தேவைப்படுகிறது என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகிறது.

ஜே.ஆர்.ஜனாதபதியாக இருந்தபோது ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தைக்கொண்ட ஒரு பாராளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ‘ பெறுமதி ” குறைக்கப்பட்ட  பாராளுமனறத்துக்கு மேலானவராகவும் அதில் தங்கியிருக்காதவராகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருந்தபோதிலும், ஜே.ஆர்.சாத்தியமானளவுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக செயற்படவே விரும்பினார். ஏனென்றால் அது உண்மையில் அவரது பொம்மையாக இருந்தது. தவிரவும், அவ்வாறு செய்ததன் மூலம் ஒரு சர்வாதிகாரி போன்று அதிகாரங்களை அபகரித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் வருவதையும அவர் குறைத்துக்கொண்டார்.ஐ.தே.க.வுக்கு பாராளுமன்றத்தில் இருந்த பிரமாண்டமான பெரும்பான்மைப்பலம் காரணமாக சர்வாதிகாரி என்று நாமஞ்சூட்டப்படாமலேயே ஒரு சர்வாதிகாரிக்கு நிகராக ஜே.ஆரினால் அதிகாரத்தைச் செயற்படுத்தக்கூடியதாக இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் பாராளுமன்றத்தின்  மீதான முழுக்கட்டுப்பாடு தேவையாக இருந்தது. சர்ச்சைக்குரிய பல வழிமுறைகளின் ஊடாக பாராளுமன்றத்தின் மீதான இந்த அதிகாரப்பிடியை ஜே.ஆர்.தொடர்ந்து வைத்திருந்தார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிறகு எம்பி.க்கள் கட்சி மாறுவதை ஜே.ஆரின் அரசியரமைப்பு தடுத்தது.அரசியலமைப்புச்சட்ட  ஏற்பாடொன்றின் ஊடாக அரசாங்கத் தரப்பில் இருந்து எம்.பி.க்கள் எதிர்க்கட்சிக்கு மாறுவதை ஜே.ஆர்.தடுத்தார்.ஜே.ஆரும் பிறேமதாசவும் ஐ.தே.க.வின் ஆதரவுத்தளத்தை மிகவும் பரந்ததாக்கினார்கள். பெரும் எண்ணிக்கையான ” சாமானியர்கள் ” 1977 இல் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.வர்க்க உணர்வு கொண்டவரான ஜே.ஆர்.தெரிவுசெய்யப்பட்ட பொதுமக்களின் பிரதிநிதிகளின் விசுவாசம் குறித்து நிச்சயமற்றவராக இருந்தார்.எனவே அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பேணுவதற்கு கட்சிமாறலை தடுக்கவேண்டியிருந்தது. அடிக்கடி கட்சிமாறும் எம்.பி.க்களை கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு ஏற்பாடும் இல்லாத காரணத்தால் முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான கூட்டரசாங்கம் கவிழக்கூடும் என்று அவரிடமே ஜே.ஆர்.ஒரு தடவை கூறியிருந்தார்.1979 ஆம் ஆண்டு அது உண்மையானது.

இருந்தாலும் கூட, தமிழர் விடுதலை கூட்டணியின் மட்டக்களப்பு தொகுதி எம்.பி.யாக இருந்த செல்லையா இராஜதுரை அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு வசதியாக அரசியலமைப்புக்கு  திருத்தம் ஒன்றை அதே ஜே.ஆர். கொண்டுவந்தார்.மோசமான அந்த ” இராஜதுரை ” திருத்தம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள அனுமதித்தது.ஆனால்,அரசாங்க எம்.பி.க்கள் எதிர்க்கட்சிக்கு போகமுடியாது.பாராளுமன்றத்தில் பிரமாண்டமான பெரும்பான்மைப் பலத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான இன்னொரு சூழ்ச்சித்தனமான ஏற்பாடாக தனது கட்சியின் சகல எம்.பி.க்களிடமிருந்தும் திகதியிடப்படாத பதவிவிலகல் கடிதங்களை ஜே.ஆர். வாஙகிப்பெற்றுக்கொண்டார்.இது ஐ.தே.க.வில் இருந்து எம்.பி.க்கள் வெளியேறுவதைத் தடுத்தது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் மாத்திரமே பதவிவிலகல் கடிதத்தை கையளிக்காத ஒரேயொரு அரசாங்கத்தரப்பு எம்.பி.யாவார்.

1982 சர்வஜனவாக்கெடுப்பு ஜே.ஆரின் மிகப்பெரிய ஜனநாயக விரோதச் செயலாகும்.1977 இல் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இன்னொரு 6 வருடங்களுக்கு  நீடிப்பதற்காக நடத்தப்பட்ட அந்த நாடளாவிய சர்வஜனவாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றார். பொதுத்தேர்தல் 1983 இல் நடத்தப்பட்டிருக்கவேண்டும்.அதற்கு பதிலாக சர்வஜனவாக்கெடுப்பின் மூலமாக பாராளுமன்றம் 1989 வரை நீடிக்கப்பட்டது.ஜே.ஆரின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையும்வரை ஐ.தே.க.வின் ஆறில் ஐந்து பாராளுமன்றப் பெரும்பானமைப் பலத்தை தொடர்ந்து பேணுவதற்கே அவ்வாறு செய்யப்ட்டது.

பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 1975 இல் இருந்து 77 வரை இரு வருடங்கள்  நீடித்த சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையை அதே ஜே.ஆரே எதிர்த்தார் என்பது விசித்திரமானதாகும்.ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கென்று கூறிக்கொண்டு  தனது கொழும்பு தெற்கு ஆசனத்தில் இருந்து பதவிவிலகிய அவர் 1975 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெருவெற்றி பெற்றார். பிறகு தனது ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 6 வருடங்களுக்கு நீடிப்பதில் எந்தவிதமான மன உறுத்தலையும் கொண்டிருக்கவில்லை.

இரு பகுதிகளைக்கொண்ட இந்த கட்டுரையின் முதல் பகுதி ஜே.ஆரினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி பதவியின் தோற்றுவாயை ஆராய்ந்ததுடன் தனது உறுதியான கட்டுப்பாட்டில் இருந்த பாராளுமன்றத்தின் ஊடாக செயற்பட்ட ஜே.ஆர்.எவ்வாறு ஒரு அரசியலமைப்பு ரீதியான ‘ சர்வாதிகாரியாக ‘ மாறினார் என்பதையும் விபரித்து முடிவடைகிறது.இரண்டாவது பகுதி ” பாராளுமன்றத்தின் மீது தங்கியிராத தனியான ” ஒரு ஜனாதிபதியாக இன்று இருக்கும் கோதாபய ராஜபக்சவின் செயற்பாடுகளின் பின்புலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் வளர்ச்சி பற்றி விபரிக்கும்.

Share.
Leave A Reply