நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனபதய கொலனியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில், சிசுவொன்றை பிரசவித்து, மானாதோப்பில் புதைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை, 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதவான் நீதிமன்றம், இன்று (14) உத்தரவிட்டது.

குறித்த சிசுவின் சடலம், நேற்று (13) மீட்கப்பட்டிருந்தது.
கடந்த வௌ்ளிக்கிழமை (12), சிசுவொன்றைப் பிரசவித்துள்ள பெண் தொடர்பாக, 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவைக்குத் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த நோர்வூட் பொலிஸார், அப்பெண்ணை டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், பிரசவிக்கப்பட்ட சிசு புதைக்கப்பட்டமை தொடர்பாகக் கண்டறிந்த பொலிஸார், புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்ககன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த பெண், 26 வயதுடையவர் என்றும் இவருடைய ​தாயார் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில், தந்தையுடனேயே இவர் வசித்து வருகின்றார் என்றும், இப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஆண் சிசுவொன்று பிறந்து, அதை அவர் வளர்த்து வருகின்றார் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்புடைய விசாரணைகளுக்காக, குறித்த பெண்ணின் தந்தை அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் சிசுவின் சட்டபூர்வமான பிரேதப் பரிசோதனை, நாளை (15) முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply