தமிழகத்தில் புதிதாக 1,989 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 தொற்றால் மேலும் 30 நபர்கள் இறந்துள்ளனர். இது மரணங்களின் எண்ணிக்கையில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச உயர்வாகும்.

இதுவரை தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்று இறந்த 30 நபர்களில், 12 நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும், 18 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.

இறந்தவர்களில் மூவரை தவிர மற்றவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள். இறந்தவர்கள் பெரும்பாலானவர்களுக்கு நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, பல்லுறுப்பு செயலிழப்பு, மூச்சுத் திணறல் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பாதிப்புக்கு உள்ளான நபர்களில் 33 நபர்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், எத்தியோப்பியா, கத்தார், ஓமன், வங்கதேசம் ஆந்திரப் பிரதேசம், கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,444ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரத்தில் இன்று ஒரே நாளில் 1,503 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்த, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும் 79 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 6, 91,817 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 17,911 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1,362 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,409 ஆக உயர்ந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி

முன்னதாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நபர்கள், வீட்டை விட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை நகரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில் விதிகளை மீறி பொது இடங்களுக்கு சென்ற 40 நபர்கள் மீது முதல் தகவலறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”எந்தவொரு அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட சில நபர்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்துதலையும் மீறி வெளியில் செல்லும் போது பிற நபர்களும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே சென்ற 40 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி – நான்கு நாட்களில் நான்கு மரணங்கள்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இதில் 76 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், தற்போது 91 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, நேற்றுவரை இந்நோய்த்தொற்றினால் மூன்று நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், “புதுச்சேரியில் கடந்த 10 நாட்களில் தினமும் 6 முதல் 10 நபர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

3 அல்லது 4 நபர்கள் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இதனால், புதுச்சேரியில் தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. மருத்துவ ஆய்வாளர் கணிப்பின்படி, இம்மாத இறுதிக்குள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என்று கூறுகின்றனர்,” என்றார்.

Share.
Leave A Reply