கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் சந்தேகநபரான வைத்தியரை கைது செய்ய உதவிய அரச புலனாய்வு பிரிவின் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (11) வேலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பம்பலப்பிட்டி, ஹெவ்லொக் வீதியிலுள்ள சம்புத்த ஜயந்தி இலத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்னால், டிபென்டர் வாகனமொன்று ​​அவரது மோட்டார் சைக்கிளில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலன்னறுவையைச் சேர்ந்த 22 வயதான சித்தும் அளகப்பெரும என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் கடந்த 09ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில், வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டடத்தில் காசாளர் பிரிவிற்கு வந்த, சந்தேகநபரான குறித்த வைத்தியர், ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு, சம்பளம், மேலதி சேவைக்கான கொடுப்பனவிற்காக வைத்திருந்த ரூ. 79 இலட்சம் கொள்ளைச் சம்பவத்தில் குறித்த கான்ஸ்டபிளுடன் மற்றுமொரு புலனாய்வு சேவையிலுள்ள கான்ஸ்டபிள் ஆகியோர் சந்தேகநபரை பின்தொடர்ந்து சென்று, சந்தேகநபரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

போலி சிகை அணிந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் காசாளரை போலி துப்பாக்கியால் அச்சுறுத்தி குறித்த சந்தேகநபர் குறித்த பணத்துடன் முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்றிருந்தார்.

சந்தேகநபரை அரச புலனாய்வு சேவையின் இரு பயிற்சி காபின்ஸ்டபிள்கள் பின்தொடர்ந்து சென்றதோடு, குறித்த சந்தர்ப்பத்தில் மாத்தறை குழந்தைகள் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் அதிகாரி வருணி போகஹவத்தவுடன் இணைந்து கொள்ளையரை கைது செய்தனர்.

கைதான ஹொரணையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், மற்றுமொரு வைத்தியசாலையில் மருத்துவராக கடமையாற்றும் நிலையில், விசேட வைத்திய நிபுணத்துவ பயிற்சிக்காக தேசிய வைத்தியசாலையில் பட்டப் பின்படிப்பு பயிற்சிக்காக இணைக்கப்பட்ட வைத்தியர் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சந்தேகநபரான வைத்தியருக்கு எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply