மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய் தெற்கு பகுதியினை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து , வயது 80 என்ற முதியவரே உயிரிழந்தவர் ஆவார்.
கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி முதியவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் எழுதுமட்டுவாழுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதன்போது இவர்கள் கோப்பாய் பாலத்திற்கு அருகில் வந்து கொண்டு இருந்த போது கடுமையான காற்று வீசியுள்ளது. காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் அருகில் இருந்த இரும்பு கம்பத்துடன் அடிபட்டு தலையில் காயமடைந்துள்ளார்.
உடனடியாக அவரை வீதியால் சென்றவர்கள் காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
மரண விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.