அமெரிக்காவில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த ஒருவருக்கு 11 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 20 கோடியே 91 இலட்சம் இலங்கை ரூபா, சுமார் 8 கோடியே 52 இலட்சம் இந்திய ரூபா) அதிகமான பில் அனுப்பப்பட்டுள்ளது.

வொஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரைச் சேர்ந்த மைக்கல் ப்ளோர் என்பவருக்கே இக்கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

 

70 வயதான மைக்கல் ப்ளோர், 62 நாட்கள் வைத்தியசாலையில் இருந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த மார்ச் 4 ஆம் திகதி அவர் இஷாக்கா நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மைக்கல் ப்ளோர், 29 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 4 ஆம் திகதி அவர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். மருததுவ உத்தியோகத்தர்கள் கரகோஷம் செய்து அவரை வழியனுப்பினர்,

 

அவருக்காக வசூலிக்கப்படவுள்ள கட்டணம் 1,122,501.04 அமெரிக்க டொலர்களாகும். 181 பக்கங்களில் கட்டண விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தீவிர சிகிச்சைப் பிரிவு அறைக்கான ஒருநாள் செலவு 9,736 டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 42 நாட்களுக்கு 408912 டொலர்கள் வசூலிக்கப்படுகிறது. 29 நாட்கள் வென்டிலேட்டர் பயன்படுத்தியமைக்காக 82,000 டொலர்களும், அவரின் உயிர் ஆபத்தான நிலையிலிருந்த இரு தினங்களுக்காக 100,000 டொலர்களும் வசூலிக்கப்படுகின்றன.

மனைவி எலிஸா டெல் ரொசாறியோவுடன் மைக்கல் ப்ளோர்

உலகில் மருத்துவச் செலவு மிக அதிகமாகவுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.ஆனால், மேற்படி பில் தொகையை மைக்கல் ப்ளோர் செலுத்த வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காரணம், அவர் மெடிகெயார் எனும் முதியோருக்கான அரச மருத்துவ காப்புறுதியைப் பெற்றுள்ளார்.

தனது சிகிச்சைக்கான கட்டணம் அரச காப்புறுதி ஊடாக,பொதுமக்களின் வரிப்பணத்திலேயே இக்கட்டணத்தில் பெரும்பகுதி செலுத்தப்படும் என்பதை அறியும்போது தனக்கு குற்ற உணர்வு ஏற்படுவதாக மைக்கல் ப்ளோர் கூறுகிறார்.

 

Share.
Leave A Reply