கொரோனா வைரஸ் பரவல், வெட்டுக்கிளி படையெடுப்பு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் 2020 ம் – ஆண்டு மிகமிக மோசமாக ஆண்டாக மாறியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சதிக் கோட்பாட்டாளர்கள் ஜூன் 21 – ம் திகதியோடு உலகம் அழிந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இணைய தளத்தில் இந்த புதுக் கோட்பாடானது வைரலாகப் பரவிவருகின்றது.

பூமி சூரியனைச் சுற்றுவதன் அடிப்படையில் கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிரிகோரியன் காலண்டருக்கு முன்பு ஜூலியன் காலண்டர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், ஜூலியன் காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது 11 நாள்களை நாம் இழந்துவிட்டதாகக் கூறுகிறார்கள் நிபுணர்கள்.

கணக்கீட்டில் இழந்த அந்த 11 நாள்களையும் கிரிகோரியன் காலண்டரில் சேர்த்துக் கணக்கீடு செய்தால் இப்போது நாம் 2020 – ல் இல்லாமல் 2012 – ல் இருப்போம் என்கிறார்கள்.

விஞ்ஞானி பாலோ டாகலோகின் வெளியிட்டுள்ள ட்விட்டில் , “ஜூலியன் காலண்டரைப் பின்பற்றினால் தொழில்நுட்ப ரீதியில் இப்போது நாம் 2012 – ல் இருப்போம்.

ஜூலியன் காலண்டரை கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் மாற்றம் செய்த போது நாம் 11 நாள்களை இழந்துவிட்டோம்.

268 ஆண்டுகளாக கிரிகோரியன் காலண்டர் பயன்படுத்தப்படுகிறது.

(1752 – 2020 ) 268 வருடங்களில், ஒவ்வொரு வருடத்துக்கும் 11 நாள்களைச் சேர்க்கும்போது 2948 நாள்கள் நமக்குக் கிடைக்கும். 2948 / 365 = 8 வருடங்கள்” என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு கணக்கிட்டால் ஜூன் 21, 2020 ம் திகதி தான் டிசம்பர் 21, 2012 ஆக இருக்கும்.

இந்த 2012, டிசம்பர் 21 – ம் திகதியை யாராலும் எளிதாக மறந்துவிட முடியாது. மாயன் காலண்டர் அடிப்படையில் உலகில் உள்ள சதிக்கோட்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டிசம்பர் 21, 2012 என்ற தினத்தை உலகின் இறுதி நாள் என்று கூறியிருந்தார்கள்.

அதனால் தற்போது, மாயன் காலண்டர் அடிப்படையில் உலகம் அழியப்போகிறது என்ற சதிக் கோட்பாட்டுத் தகவல்கள் மீண்டும் வைரலாகத் தொடங்கியிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நாசா அதிகாரி ஒருவர், “உலகின் இறுதி நாள் எனும் சதிக் கோட்பாடானது பூமிக்கு வடக்கே, சுமேரியன்களால் இருப்பதாகக் கருதப்பட்ட நிபுரு கிரகத்தின் அடிப்படையில் முதன் முதலில் தொடங்கியது.

உலகின் பேரழிவு முதன் முதலில் மார்ச், 2003 – ல் நடக்கும் என்றார்கள். அப்படி எதுவும் நடக்காததால் மாயன் காலண்டர் அடிப்படையில் டிசம்பர் 2012 – ல் நடக்கும் என்று தெரிவித்தார்கள்.

2012 ம் ஆண்டும் எதுவும் நடக்காததால் இப்போது 2020 – க்கு வந்திருக்கிறார்கள்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே மக்கள் கொரோனா பீதியில் உறைந்துபோய் இருக்கும் சூழலில் ஜூன் 21 – ம் திகதி தான் உலகின் கடைசி நாள் என்று பரவுகிறது சதிக் கோட்பாடு. ஜூன் 21 – க்கு இன்னும் 6 நாள்களே இருப்பது குறிப்பிடத்தக்கது!

Share.
Leave A Reply