– ஒரு புறத்தில் முரண்பட்டும் மறுபுறத்தில் இணங்கியும் செல்வதற்குமான இரண்டு தீவிரப் போக்குகளுக்கிடையே சுமந்திரனின் “ மத்திய பாதை” மிகவும் சாத்தியமானது.

– சரவணபவன் தனது “உதயன்” பத்திரிகை வழியாக சுமந்திரன் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

– மேற்குலகிலுள்ள நன்கு அறியப்பட்ட “புலி ஆதரவு” ஊடக அமைப்புகள் சுமந்திரன் எதிர்ப்புக் களத்தில் உள்ளுர் முகவர்களின் உதவியுடன் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் பரபரப்பான இலங்கை அரசியல் புயலின் மத்தியில் ஏ. சுமந்திரன் அகப்பட்டிருந்தார்.

56 வயதுள்ள அவர் ‘உண்மையுடன் சமுதிதா’ என்ற நிகழ்ச்சிக்கு வழங்கிய சிங்கள மொழியிலான கேள்வி – பதில் அடிப்படையிலான நேர்காணலின் சில பகுதிகளை ஒரு தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

இத் தமிழ்த் தொலைக்காட்சியின் வெளியீட்டிற்கும் வட பகுதியின் அரசியல்வாதி ஒருவரினது சம்பந்தம் இருந்ததாக அறியப்படுகிறது.

சுமந்திரனின் வார்த்தைகளை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் தவறாகவே மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ் வெளியீடு இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள பிரதான தமிழ் மற்றும் சமூக வலைத் தளஙகளில் ஆத்திரமூட்டும் குரல்களை எழுப்ப வழி வகுத்தது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழரசுக்கட்சியினதும் உத்தியோகபூர்வ பேச்சாளரான அவரது பதில்களே அவ்வாறான நிலமைகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

சுமந்திரனுக்கு எதிரான அரசியல் தாக்குதல்கள் எதுவும் புதிதல்ல. ஒப்பீட்டளவில் மிதவாத கருத்துக்களைக் கொண்டுள்ள சட்டத்தரணி கடந்த காலங்களில் நாட்டின் இனப் பிரிவுகளின் இரு புறங்களிலுமுள்ள “கழுகு”களின் பார்வைக்கு இலக்காகவே இருந்து வருகிறார்.

இதிலுள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவெனில் பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், குறிப்பாக தமிழரசுக்கட்சியிலிருந்தும் அதிக தாக்குதல்கள் எழுவதுதான் அந்த வியப்பான மாற்றம் ஆகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் சக பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட பல சகாக்கள் தமது கருத்துக்களின் பெறுபேறுகளை சரிபார்க்க தமது முன்னாள் சக பா. உறுப்பினருடன் தொடர்புகளை மேற்கொள்ளாமல் சுமந்திரனை விமர்ச்சித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

இவற்றின் பின்னர் கூட்டமைப்பின் முன்னாள் பா. உறுப்பினர்களிடையெ சேனாதிராஜா மேற்கொண்ட தொடர்ச்சியான ஆலோசனைகளில் கட்சியின் பேச்சாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் அகற்றுவதற்கான பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.

இப் பிரச்சனைகளின் மத்தியில் சுமந்திரன் சுமார் 12 நிமிட யூ ரியூப் மூலமாக தன்னிலை விளக்கத்தை வெளியிட்டிருந்தார்.

அதில் தனது செவ்வி சம்பந்தமாக உண்மையில் என்ன நடந்தது? என்பதையும், தனது சிங்கள மொழியிலான உரையாடலை அவரை இழிவுபடுத்துவதற்கும், தாக்குவதற்கும் பயன்படுத்தினார்கள் என விளக்கினார்.

தமிழரசுக்கட்சித் தலைவர் சேனாதிராஜாவும், அவரது சகாக்களும் தம்மை வெளிப்படையாக ஒருதலைப்பட்ச விமர்சன அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு தன்னிலை விளக்கத்தைப் பெறும் மரியாதைக்குரிய செயற்பாட்டினை மேற்கொள்ளவில்லை எனவும் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

நேர்காணல் தொடர்பாக தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்தார்.

அவரது மறுப்புகள் பலரது ஆதரவினை அவர் பக்கம் திருப்பியதோடு குற்றம் சுமத்தியவர்கள் முகங்களில் முட்டைகளை வீசவும் தயாராக உள்ளார்கள்.

அத்துடன் சிங்கள மொழியிலான அந் நேர்காணல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இவை பிரதான ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் போன்றவற்றிலும் வெளியாகின. இதனால் சுமந்திரனுக்கு எதிரான தாக்குதல்கள் நியாயமற்றவை என்பதைப் பலரும் புரிந்துள்ளனர்.

இதனால் சுமந்திரனுக்கு ஆதரவான “அனுதாப அலை” உருவாகியது. அதேவேளை சுமந்திரனை விமர்ச்சித்த பலர் அவரை ஆதரிக்கும் நிலைக்கு மாறினர்.

 தேநீர் கோப்பையில்  சூறாவளி

இச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு மே 16ம் திகதி வெளியாகிய ‘டெய்லி மிறர்’ பத்திரிகையில் இக் கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“ சுமந்திரன் எதிர்ப்பு புயல் படிப்படியாக கூட்டமைப்பு என்ற தேநீர் கோப்பைக்குள் ஒரு சூறாவளியாக மாறும் எனத் தோன்றுகிறது.

அதனால் சுமந்திரனுக்கும், சில தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்” என எழுதப்பட்டிருந்தது.

இதுவே இன்று நடந்ததாகத் தெரிகிறது.

கொரொனா வைரஸ் தாக்குதலின் கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பில் முடங்கியிருந்த சுமந்திரன் சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.

தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகையில் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளார்.

அவர் அங்கு மிகவும் அமைதியுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும் காணப்பட்டார்.

சுமந்திரனுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தவர்கள் அவரைக் கட்சியின் பேச்சாளர் பதவியிலிருந்த அகற்றவேண்டும் என்பதையே முன்வைத்திருந்தனர்.

ஆனால் அவ் வேளையில் அக் கோரிக்கை அடங்கிவிட்டதாகவே காணப்பட்டது. இருப்பினும் இக் கட்டுரையாளர் முன்னர் குறிப்பிட்டது போல சுமந்திரனுக்கும், அவரது அரசியல் சாகாக்களுக்குமிடையேயான உறவு எதிர்காலத்தில் பலவீனமடையாவிடினும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றே கருதவேண்டும்.

கடந்த காலங்களைப் போல் அல்லாது சுமந்திரன் தொடர்பான இச் சம்பவம் இலங்கையின் தமிழ் அரசியலின் வெவ்வேறு பக்கங்களை ஆர்வத்தோடு அவதானிக்கும்பலர் இச் சம்பவங்களின் பின்னர் மேலும் தூண்டுதல் அடைந்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சுமந்திரன் மீது ஏன் தாக்குதல் தொடுத்தார்கள்? என்பது குறித்தே கவனம் திரும்பியுள்ளது.

 

இவை ஏன்? எவ்வாறு ஆரம்பமாகின? என அறிவதில் ஆர்வம் காட்டினர். இலங்கையின் பல்வேறு இனக் குழுமங்களைச் சார்ந்த நண்பர்கள், அறிமுகமானவர்கள் இந்த விடயத்தை ஆராய்ந்து உண்மையில் என்ன நடந்தது? என விளக்கவேண்டுமென என்னைக் கேட்டார்கள்.

அதேவேளை தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்களை வழங்கினர்.

அவர்களில் பலர் இச் சம்பவங்களைச் “சுமந்திரனுக்கு எதிரான சதி” என அழைத்தே முழு விபரங்களையும் வெளியிடுமாறு என்னை வலியுறுத்தினர்.

“மாவை” என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா

இதில் எனது பிரதான ஆர்வம் மாவை ஏன் சுமந்திரனுக்கு எதிராக திரும்பினார்? கூட்டமைப்பின் முன்னாள் எம் பிக்களும், முக்கியஸ்தர்களும் சேனதிராஜா தனது அறிக்கையை வெளியிட்ட பின்னரே சுமந்திரனுக்கு எதிரான தமது அறிக்கைகளை வெளியிடுவதற்கான தைரியத்தைப் பெற்றதாகத் தெரிகிறது.

சுமந்திரனுக்கும் மாவைக்குமிடையே நீண்ட காலமாக நல்லுறவு நிலவியதை நான் நன்கு அறிவேன் என்பதால் இப் பிரச்சனை எனக்கும் குழப்பமாக இருந்தது.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சும்பந்தன் அவர்களுடன் மிக நெருக்கமாகவும், முக்கிய உதவியாளராகவும், நம்பகமான துணைத் தலைவராகவும் செயற்பட்டாலும், அவர் தமிழரசுக்கட்சித் தலைவர் சோனதிராசாவுடன் இணக்கமான பணி உறவை அவர் தொடர்ந்து பேணி வருகிறார்.

சுமந்திரனைத் தேசியப் பட்டியலில் இணைப்பதற்கு சேனாதிராஜாவே உதவினார். இரண்டாவது தடவையும் அவ்வாறான உதவியைச் செய்தார்.

ஒருமுறை ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட பின்னரும், அடுத்து ‘ஈழவேந்தன்’ என அழைக்கப்படும் எம். கனகேந்திரன் ராஜினாமாச் செய்த வேளையிலும் இச் சந்தர்ப்பத்தில் சுமந்திரன் அதனை ஏற்க மறுத்த போதிலும் வற்புறுத்தியிருந்தார்.

அதன் பின்னர் 2010ம் ஆண்டு மாவை, சம்பந்தன் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய தேசிய பட்டியல் மூலமாக உறுப்பினரானார்.

சேனாதிராஜாவின் இரண்டு முக்கிய வழக்குகளில் தலைமை ஆலோசகராகவும் சுமந்திரன் செயற்பட்டுள்ளார்.

இவ் வழக்குகளில் ஒன்று வலிகாமம் வடக்குப் பிரிவில் ராணுவம் ஆக்கிரமித்த இடங்களை மீளப் பெறவது பற்றியது.

மற்றொன்று சமஷ்டி அரசியல் என்பது பிரிவினை வாதத்தை ஆதரிப்பதில்லை என உ யர் நீதிமன்றம் அளித்த வரலாற்றுத் தீர்ப்பு தொடர்பான வழக்கு ஆகும்.

சம்பந்தன், சேனாதிராஜா ஆகிய இருவருக்கும் சமமான மரியாதையை சுமந்திரன்  எப்போதும் வழங்கி வருகிறார்.

சம்பந்தன் அவர்களை ‘ஐயா’ என விழிப்பதும், சேனாதிராஜாவை ‘அண்ணா’ என விழித்துச் செயற்படுகிறார்.

2015ம் ஆண்டு தேர்தலில் சுமந்திரனின் தேர்தல் பிரச்சாரங்களில் மாவை மிகவும் உற்சாகத்தோடு ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் இவர்களது உறவில் விரிசல்களை யார் ஏற்படுத்தினார்கள்?

இதன் பின்னணியில்தான் கூட்டமைப்பிற்குள் எற்பட்டுள்ள இக் கொந்தளிப்புக் குறித்த  விசாரணையை நான் மேற்கொண்டேன்.

இவ் விசாரணைகளின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் “சுமந்திரனுக்கு எதிரான சதி” பற்றிய சுவாரஷ்யமான தகவல்களைக் கண்டுபிடித்தேன்.

யாழ். மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இம் மோசமான நாடகத்தின் சூத்திரதாரி என்பது தெரியவந்தது.

இருப்பினும் இப் பிரச்சனையில் தொடர்புடைய சில விபரங்களைத் தெரிவிப்பதற்கு முன்பதாக ஏற்கெனவே பலருக்கும் தெரிந்த ஒரு உண்மையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

சுமந்திரனும், நானும் உறவினர்கள். நாங்கள் இரண்டாம் மைத்துனர்கள். எங்கள் பாட்டிகள் சகோதரிகள் ஆவர்.

சுமந்திரன் எனக்குப் 10 வயது இளையவர். தற்செயலாக 10 வருடங்களுக்கு முன்னர் அரசியலுக்குள் நுழைந்தார்.

ஆனால் எனது பத்திரிகை நுழைவு 40 ஆண்டுகளுக்கு முன்னதானது. தனிப்பட்ட முறையில் அதுவும் சோகம் நிறைந்த போருக்குப் பின்னர் தமிழ் அரசியலின் போக்கை மிகவும் நடைமுறை சார்ந்ததாகவும், மற்றும் யதார்த்த அடிப்படையில் ஒத்துழைப்பு நிறைந்த வழிகளிலும் செல்வதை விரும்புகிறேன்.

இருப்பினும் நடைமுறை யதார்த்தத்தின் நிலமைகளைக் கவனத்தில் எடுத்தால் ஒருபுறம் சமரச அரசியலின்  இரண்டு துருவ நிலைப்பாடுகளுடனும், மறுபுறம் முரண்பாட்டு அரசியலுடனும் ஒப்பிடும்போது ‘மத்தியவழிப் பாதை’ மிகவும் சாத்தியமானது என்பதை நான் உணர்கிறேன்.

இதனால் நான் அவரின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக உள்ளேன். ஏனெனில் அவர் இதுவரை செய்துவரும் அரசியல் எனக்கு மிகவும் ஏற்புடையதாக உள்ளது.

எதிர்காலத்தில் அவரின் போக்கில் முரண்பாடுகள் காணப்படின் அதனை ஆக்கபூர்வமான விமர்சன்ங்களுடன் முன்வைப்பேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் காணப்படும் உள் முரண்பாடுகள் என்பது ஒரே கட்சியிலுள்ள தேர்தல் பட்டியல் வேட்பாளர்கள் மத்தியில் காணப்படும் போட்டி  நிலமைகளிலிருந்து காணலாம்.

விருப்பு வாக்குகளைப் பெறும் வழிகளில் ஏற்பட்டுள்ள போட்டிகள் இம் மோதல் போக்குகளை நன்கு வெளிப்படுத்துகிறது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் என்பது நிர்வாக அலகுகளான கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என்பன இணைந்தவைகளாகும்.

இவை இரண்டும் இணைந்த பிரதேசத்திலிருந்து 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

2015இல் இடம்பெற்ற தேர்தலில் கூட்டமைப்பிலிருந்து 5 பேரும், ஈ பி டி பி, ஐ தே கட்சி என்பவற்றிலிருந்து தலா ஒருவரும் தெரிவு செய்யப்பட்டனர்.

2018ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பார்க்கையில் கூட்டமைப்பின் வாக்குகள் 2015ம் ஆண்டுத் தேர்தலோடு ஒப்பிடுகையில் குறைவான வாக்குகளே பெறப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 2020ம் ஆண்டு வரவுள்ள தேர்தலை நோக்குகையில் கூட்டமைப்பினர் 4 ஆசனங்களையே தக்கவைக்க முடியுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இக் கணிப்புச் சரியானது என எடுத்துக்கொண்டால், யாழ்ப்பாண உறுப்பினர்களில் ஒருவர் தோல்வியடைய வாய்ப்பு உண்டு.

2015ம் ஆண்டு தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட கூட்டமைப்பின் 5 யாழ். மாவட்ட உறுப்பினர்களின் விருப்பு அடிப்படையிலான வாக்குகளை நோக்குமிடத்து பின்வருமாறு காணப்படுகிறது.

எஸ். சிறீதரன்
எஸ். சேனாதிராஜா
எம். ஏ. சுமந்திரன்
டி. சித்தார்த்தன்
ஈ. சரவணபவன் என்ற ஒழுங்காகும். இவர்களில் சித்தார்த்தன் புளொட் அமைப்பைச் சார்ந்தவர்.  ஏனையோர் தமிழரசுக்கட்சியினர்.

ஒரு காலகட்டத்தில் தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை 2020 தேர்தலில் போட்டியிடமாட்டார் எனக் கருதப்பட்டது.

2013ம் ஆண்டில் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவியில் மாவை கவனம் செலுத்திருந்தார் என்பது பலரும் அறிந்ததே.

இருப்பினும் சம்பந்தன் ஓய்வுபெற்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனை வேட்பாளராக நிறுத்திய|போது சுமந்திரன் அதற்கு உதவினார்.

அதனால் சேனாதிராஜா ஏமாற்றமடைந்தார். ஆனால் அங்கு காணப்பட்ட தவிர்க்கமுடியாத சூழலை அவர் ஏற்றே பின்வாங்கினார்.

விக்னேஸ்வரன் பாரிய ஏமாற்றத்தை தனது திறனற்ற நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தியிருந்தார்.

வடமாகாண சபையைத் தனது திறமையற்ற நிர்வாகத்தின் மூலம் அழித்த பின்னர் சம்பந்தனின் முதுகில் குத்திய பின் வெளியேறி கூட்டமைப்பிற்கு எதிராக ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கினார்.

இவ்வாறான பின்புலத்தில் மாவை மீண்டும் வடக்கு முதல்வர் பதவிக்கு தனது கவனத்தை முன்வைத்தார்.

இம் முயற்சிளைப் பலரும் பொதுவாகவே ஏற்றுக்கொண்டனர். வடமாகாணசபைக்கான தேர்தல்கள் இடம்பெற்றால் அவர் தனது தனது பதவியை விட்டு வெளியேறி மாகாண வாக்கெடுப்பில் போட்டியிடுவார் என்பது தெரியவந்தது.

2018ம் ஆண்டு மாகாணசபை கலைக்கப்பட்ட போதிலும் இதுவரை தேர்தல் இடம்பெறவில்லை. இவ் வேளையில் சேனாதிராஜாவின் மூத்த மகனும் அரசிலிற்குள் நுழைந்தார்.

இங்கிலாந்தில் பொறியியலாளராகப் பணிபரிந்து இலங்கை திரும்பிய அவரது மூத்த மகன் கலைஅமுதன் 2018ம் ஆண்டு பெப்ரவரியில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினரானார்.

தனது மகனின் நுழைவுடன் அவரது போக்கிலும்  மாற்றங்கள் தென்பட்டன. தான் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகவும், தனது மகன் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பாக தனது காய்களை நகர்த்தினார்.

இதன்வழியாக அவரது மகன் கலைஅமுதன் மாகாண அமைச்சராவது என்ற விளையாட்டச் சீட்டில் இடம்பெற்றது.

இத்தகைய அரசியல் சூழலில்தான் சரவணபவனுக்கும், மாவைக்குமிடையே புதிய உறவு மலரத் தொடங்கியது.

முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய சரவணபவன் முன்னர் ‘சப்ரா’ என்ற நிதி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார்.

அவர் அந்த நிறுவனத்தை சுமார் 35 ஆண்டுகளக்கு முன்னர் திவாலாகியதாக அறிவித்தார்.

இவ் அறிவித்தல் காரணமாக யாழ். குடியிருப்பாளர்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையம் அக் கம்பனியில் முதலீடு செய்த நிலையில் கம்பனி வங்குறோத்து அறிவித்து அம் மக்கள் மீது பெரும் துன்பங்களைச் சுமத்தியவர்.

சரவணபவன் தனது மைத்துனரான வித்தியாதரனின் நல்லுறவு கிட்டியமையால் 2010ம் ஆண்டில் கூட்டமைப்பின் வேட்பாளராக நியமனம் பெற்றார்.

வித்தியாதரன்

இது இன்னொரு சந்தர்ப்பத்தில் தரவேண்டிய மற்றொரு கதை.

இந்த இரு மைத்தனர்களும் தற்போது விரோதிகளாக அல்லது போட்டியாளர்களாக மாற்றமடைந்து வித்தியாதரன் “காலைக் கதிர்” என்னும் பத்திரிகையின் அசிரியராக உள்ளார்.

2010ம் ஆண்டு தேர்தலில் சரவணபவன் போட்டியிட்ட வேளை தம்மை “ உள்நாட்டு பிரச்சனைகள் குறித்து உலகிற்கு உணர்த்திய ஊடகப் போர்வீரன்” எனத் தம்மை மார்தட்டிக்கொண்டார்.

ஒருபுறத்தில் தம்மை ஊடகவியலாளனாக காட்டிக்கொண்ட போதிலும், மறுபுறத்தில் அதனைத் தனது தொழில்களை, செல்வாக்குகளை வளர்ப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தினார்.

2019ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சரவணபவனின் செய்தித் தாள்கள் கோதபாய ராஜபக்ஸவை கடுமையாக விமர்ச்சித்தன.

ஆனால் தேர்தலின் பின்னர் புதிய ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட ஊடகத் தலைவர்கள், ஆசிரியர்கள் மாநாட்டில் தாம் ஒரு செய்தித்தாளின் உரிமையாளராக கலந்துகொண்டார்.

அவர் தனது அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது தொழிற்சாலைக்கு கடந்த மைத்திரி தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசு வரிவிலக்கு அளித்ததுபோல கோதபாயவிடமும் தனது கோரிக்கையை முன்வைத்தார்.

ஆனால்  கோதபாய அவரது  கோரிக்கையை திசைதிருப்பி நிதி விடயங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் கையாளப்படுவதால் அவரை நோக்கி வழிகாட்டினார்.

இதன் பின்னர் சரவணபவன் பிரதமர் மகிந்தவோடு தொடர்புகொண்டார். ஆனால் பிரதமரோ, வரவு- செலவுத் திட்டம் வரை பொறுத்திருக்குமாறும் வேறு பல காரணங்களைக் கூறி தட்டிக் கழித்தார்.

சரவணபவன் பற்றிய இக் கதைகள் நகரில் சிலகாலமாகப் பேசப்படும் விடயங்களாகும்.

2020ம் ஆண்டில் இடம்பெறும் தேர்தலில் யாழ். மாவட்டத்திலிருந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நால்வர் தெரிவு செய்யப்படுவார்களாயின் சரவணபவன் மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

அவரது வெற்றியை உறுதிசெய்வதற்கான ஒரே வலுவான வழி இன்னொரு கூட்டமைப்பின் வேட்பாளருடன் இணைந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவது, அவரது நிழலில் தாம் வெளிச்சம் பெறுவது போன்றனவே  தனது வண்டியை நட்சத்திர அந்தஸ்தை நோக்கித் தள்ளும் வழியாக உள்ளது.

இந்த நிர்ப்பந்தமே முதலில் சேனாதிராஜாவின் மகனையும், பின்னர் அவரது தந்தையுடனும் இணைந்து செல்லும் பயணத்திற்கு உதவியது.

ஐம்பது அண்டுகளுக்கு முன்னர் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைமையை மாவை ஏற்றமையால் கட்சியில் தமது அரசியற் பற்களை இழந்தார்.

தற்போது கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராக வருவதில் கலைஅமுதன் ஆர்வம் காட்டியபோது தந்தை மாவை மகிழ்ச்சியடைந்தார்.

 

இப் பின்னணியில் கலைஅமுதனின் தேவைக்கென ஒரு வாகனத்தை ஒதுக்கி, வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கான வழமையான பயணங்களுக்கு சரவணபவன் நிதியுதவி அளிப்பதாக கூறப்படுகிறது.

இந்த உதவிகளால் மிகவும் பூரிப்படைந்துள்ள மாவை எதிர்காலத்தில் பரஸ்பரம் நன்மையளிக்கும் துறைகளுக்கான விதைகள் தற்போது தூவப்படுவதாகவே எண்ணுகிறார்.

சுமந்திரனுடன் ஏற்பட்ட முரண்பாடு

ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று இளைஞர் அணி விவகாரங்களே இம் முறுகல் நிலையின் ஆரம்பமாகும்.

கட்சிக்குள் இளைஞர்  மற்றும் பெண்கள் விவகாரங்களில் அதிக பங்களிப்பிற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.  அத்துடன் அவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கி ஊக்குவிப்பதில் சுமந்திரன் அதிக ஆர்வம் காட்டினார்.

இதன் காரணமாக இளைஞர் பிரிவின் செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதிலும், ஒழுங்கமைப்பதிலும், புத்துயிர் வழங்குவதிலும் அவரது ஈடுபாடு அதிகரித்திருந்தது.

இதனால் சரவணபவனின் ஆதரவுடன் கலைஅமுதன் தமிழரசுக்கட்சியின் இளைஞர் பிரிவைக் கைப்பற்ற முயன்ற வேளையில் பல இளைஞர்கள் சுமந்திரனிடம் முறையிட்டனர்.

இதற்கு அமைய அவர் மிகவும் வெளிப்படையாகவே தனது ஆதரவை அவர்களுக்கு வழங்கினார்.

இளைஞர் பிரிவின் தலைமைத்துவத்தை எட்டுவதற்கான தேர்தலில் வெற்றிபெறுவது மிகத் தூரத்தில் உள்ளதை உணர்ந்த மாவையின் மூத்த புதல்வர் கலைஅமுதன் பரம்பரை அரசியல் என்ற குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள தமக்கு அப் பதவி தேவையில்லை என்ற நாடகத்தை இறுதி நேரத்தில் அரங்கேற்றி போட்டியிலிருந்து பின்வாங்கினார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த ‘சேயோன்’ என்ற இளைஞர் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். அதேவேளை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞர் அணிப் பொதுச் செயலாளராக கலைஅமுதன் தேர்வானார்.

சேனாதிராஜாவிற்கும், சுமந்திரனுக்கும் இடையேயான முறுகல்நிலை மோசமடைவதற்கு மேலும் இரு பிரச்சனைகள் தொடர்பான தவறான புரிந்துணர்வே காரணமாகும்.

முதலாவது, தமிழரசுக்கட்சி, கூட்டமைப்பு ஆகியவற்றில் இளைஞர்கள், பெண்கள் என்போரிற்கான அதிக பங்களிப்பைச் சுமந்திரன் வற்புறுத்தினார்.

இவ் வற்புறுத்தலை மாவையின் ஆதரவாளர்கள் வேறுவிதமாகத் திரித்தனர். அதாவது தமிழரசுக்கட்சியிலிருந்து மாவையை ஒதுக்குவதற்கான ஆட்டத்தின் ஒரு பகுதியாகவே அதனை வர்ணித்தனர்.


சேனாதிராஜாவின் விசுவாசிகள் பலர் யாழ். மாட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் தவறாமல் சந்திக்கின்றனர்.

இவ் ஆதரவுக் குழுவிலுள்ளவர்களை தமிழரசுக்கட்சியின் இளைய பிரிவினர் ‘மாட்டின் றோட் மாபியாக்கள்’ என ஏளனமாக அழைப்பர். இக் குழுக்களில் சரவணபவனும் நெருக்கமாக இணைந்துள்ளார்.

இரண்டாவது தவறான புரிதல் எதுவெனில் வேட்பாளர் தெரிவிற்கான நடைமுறையில் திருத்தங்கள் தேவை என சுமந்திரன் முன்மொழிந்தார்.

தற்போது  பின்பற்றப்படும் நடைமுறை என்னவெனில் தற்போதுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மறு நியமனத்தை நிச்சயம் பெறுவார்கள் என்ற நியதி வழக்கில் உள்ளது.

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்பது நியமனப் பட்டியலில் மீதமுள்ள இடங்களை நிரப்புவதாக மட்டுமே அமைகிறது. ஏனைய கட்சிகள் பலவற்றிலும் இந்த நடைமுறையே உள்ளது.

சுமந்திரனின் நிலைப்பாடு வேறுவிதமாக அமைந்தது. அவர் வேட்பு மனுக்கள் புதிதாகக் கோரப்பட்டு அதாவது பதவியில் இருப்பவர்களும், புதிதாக வரும் வேட்பாளர்களும் புதிதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தெரிவுகள் என்பது தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் தனது விளக்கத்தை வழங்கியிருந்தார்.

இதன்மூலம் தகுதி வாய்ந்த இளைஞர்கள் பலரை அரசியலிற்கு எடுத்து வர முடியும் என்றார்.

அரசியலில் நுழையும் திறமையும், தகுதியும் வாய்ந்த இளைஞர்கள் வருகையை அதிகரிக்க முடியும் என்ற வாதத்தை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் கட்சிக்குள் அதிக, படித்த, திறமையான இளைஞர்கள் தேவை என்பதால் அவரும் ஒப்புதல் அளித்தார்.

வேகத்தை அதிகரித்தமையால் வாகனம் மோதுண்டதைப் போல சுமந்திரனின் பரிந்துரைகள் கிட்டத்தட்ட அனைத்து தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் கடுமையான நிலைக்குத் தள்ளியது. தாம் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக இவர்கள் உணர்ந்தனர்.

இதற்கு வசதியாக இவருக்கு எதிராக ஏற்கெனவே செயற்பட்ட சேனாதிராஜா தலைமையிலான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வேட்பு நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் இயற்றினர்.

புதிய வேட்பு மனுக்கள் என்பது காலியான இடங்களை நிரப்புதல் மட்டுமே என்றாகியது.
எனவே சுமந்திரனின் பதிய ஏற்பாடு கிட்டத்தட்ட அனைத்து கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஆத்திரமூட்டச் செய்தது.

சரவணபவன்

சரவணபவனைப் பொறுத்த வரையில் தனது ‘உதயன்’ பத்திரிகை மூலம் சுமந்திரன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தார்.

சுமந்திரனும், அவரின் கீழ் பணியாற்றும் சட்டத்தரணிகள் பலரும் அவரது பத்திரிகை தொடர்பான பல வழக்குகளில் இலவசமாகவே தமது சேவைகளை வழங்கியிருந்தனர்.

சில வழக்குகளில் வெற்றிபெற்ற போதிலும் மேலும் பல நிலுவையில் உள்ளன. இருப்பினும் சுமந்திரன் மீதான சரவணபவனின் ஊடகங்களின் தாக்குதல்கள் தொடர்கின்றன.

அத்துடன் இப் பிரச்சனையில் சுமந்திரனுக்கு நெருக்கமாக இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது.

நியமனங்கள் தொடர்பான கட்சியின் குழுக் கூட்டத்தில் சுமந்திரன் இப் பிரச்சனையை எழுப்பியதோடு சரவணபவனை பரிந்துரை செய்ததற்கு எதிராக சுமந்திரன் வாதிட்டார்.

ஏனெனில் அவரது பத்திரிகை தமிழரசுக்கட்சியைச் சார்ந்தவர்களையே தாக்கியது. ஆனால் இவ் வாதங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கான காரணமாக பதவியிலுள்ள அனைத்து பாராளுமன்ற உறப்பினர்களக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற முடிவின் காரணமாகவே இது மீறப்பட்டதாக கூறினர்.

சரவணபவானும், மாட்டின் றோட் மாபியாக்களும்

இப்படியான பிரச்சனைகளின் புறச் சூழலின் பின்னணியில்தான் சுமந்திரனின் பிரச்சனைக்குரிய நேர்காணல் தமிழ் அரசியல் களத்தில் வெடித்தது.

இதற்கான வேளைக்காக காத்திருந்த கூட்டமைப்பின் சுமந்திரன் எதிர்ப்புக் கூறுகள் தருணத்தை நன்கு பயன்படுத்தின.

சுமந்திரனைக் கண்டித்து ஒரு காட்டமான அறிக்கையை வெளியிடும் வேலையைச் செய்வதற்கு முதலில் சேனாதிராஜாவை வழைத்துப்போட வேண்டும்.

இதனைச் சரவணபவன் மற்றும் ‘மாட்டின் றோட் மாபியாக்கள்’ என்போருக்கு மிக எளிதான விடயமாக அமைந்தது.

தமிழரசுக்கட்சியின் தலைவரான மாவை தனது விமரசனத்தை சுமந்திரனுக்கு எதிராக வைத்ததும் ஏனையோர் அதன் வழி சென்றனர்.

சில சமயங்களில் கூட்டமைப்பினதும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை “ யு-நோ- கூ” எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஒருவர் அணுகி சுமந்திரனுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடும்படி தூண்டினார்.

சுமந்திரனை விமர்ச்சிக்கும் அறிக்கைகளை வெளியிடுவதற்கான நபர்களைக் கட்டாயப்படுத்த சேனாதிராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டது.

மேற்குலகில் நன்கு அறியப்பட்ட புலி சார்பு ஊடக அமைப்பும் சுமந்திரன் எதிர்ப்பு வலையில் இணைந்து பல விமர்சன அறிக்கைகளை உள்ளுர் முகவர் மூலம் பெற்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் சிலரான சம்பந்தன், சிறீதரன், துரைரத்னசிங்கம், கோடீஸ்வரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் இச் சுமந்திரன் எதிர்ப்பு அலைகளில் சிக்கவில்லை.

சுமந்திரனின் நிலைப்பாட்டை ஆதரித்து நியாயப்படுத்தும் அறிக்கையினை சம்பந்தன் வெளியிட்டார். சரவணபவனும் சுமந்திரனை விமர்ச்சித்து அறிக்கை எதனையும் வெளிப்படையாக விடவில்லை.

இருப்பினும் அந்த வேலையை அவரது பத்திரிகைகள் தாராளமாகச் செய்தன. அத்துடன் சம்பந்தனின் அறிக்கையைக்கூட  திருத்திய பின்னரே வெளியிட்டனர்.

மாவைக்கும், சுமந்திரனுக்குமிடையே ஒரு சில தொலைபேசி உரையாடல்கள் பின்னர் இடம்பெற்றிருப்பினும், நிலமைகள் மோசமடைந்துள்ளதாகவே உள்ளன.

அவ் உரையாடல்களின்போது சில பிரச்சனைகளில் தெளிவு ஏற்பட்டிருந்தது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் தாம் சுமந்திரனோடு தொடர்பு கொள்ளாதமை, அவரது தரப்பு நியாயத்தைப் பெறத் தவறியதும் தமது தவறே என்பதை சேனாதிராஜா ஏற்றுக்கொண்டார்.

சித்தார்த்தன், சம்பந்தன், சேனாதிராஜாவுடன் இணைந்து சுமந்திரனுடன் கொழும்பில் நடத்திய வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் நிலமைகளைக் குளிர் நிலைக்குத் தள்ளியுள்ளன.

இந் நிலைமைகள் தொடர்பான எதிர்கால எதிர்வுகூறல்களை மேற்கொள்வது மிக ஆரம்பநிலை என்பதாலும், இருப்பினும் நல்ல நிலை தற்போது காணப்படுவதாகவும் கூட்டமைப்பு – தமிழரசு உள் நெருக்கடி தணிந்துள்ளதாகவும் தெரிகிறது.

சுமந்திரனின் தற்போதைய யாழ்ப்பாண பயணமும், ஊடக சந்திப்பும் கூட்டமைப்பிற்குள் எழுந்த புயலின் தாக்கம் தற்போதைக்குக் குறைந்தள்ளதாகவே இவை உணர்த்துகின்றன.

தமிழரசுக்கட்சியின் தலைவர் சேனாதிராஜா தாம் எவ்வாறு கையாளப்பட்டார்? என்பதை உணர்ந்து எதிர்காலத்தில் தகுந்த தீர்வை நோக்கி நடவடிக்கை எடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

 

டி பி எஸ். ஜெயராஜ் – ‘டெய்லி மிறர்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரை
தமிழில் – வி. சிவலிங்கம்

Share.
Leave A Reply