பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது மாமா குற்றம்சாட்டி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34. மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது தாய்வழி மாமா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாட்னாவில் உள்ள சுஷாந்தின் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அவரது மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதுபோல் தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தவேண்டும்’ என்றார்.
சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவும் கூறி உள்ளார்.