யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுவரை 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கொரோனா வைரஸ் பரபல் என்பது இலங்கையில் குறைந்தளவே காணப்படுகின்றது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இவ் வைரஸின் தாக்கம் பெரிதளவில் காணப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோய்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கொரோனா, காச நோய் மற்றும் எயிட்ஸ் நோய்களே இவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.
கொரோனா நோய் தொற்று அல்லது பரவல் தொடர்பில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால், அந்த நோய் பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தக்கூடியவாறு உள்ளது.
ஆனால் கொரோனா அறிகுறி போன்று இருமல் உள்ளவர்களிடம் இருந்து காச நோய் வேறு பலருக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது. காச நோய்யும் கொரோனா போன்று மக்கள் வழிப்புணர்வுடன் இருந்து கட்டுப்படுத்த வேண்டிய ஒரு கொடிய நோயாகும்.
கடந்த 3 நூற்றாண்டு காலமாக உலகெங்கும் காச நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. 2018 ஆம் ஆண்டு 1.2 மில்லியன் மக்கள் காச நோயால் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 1.1 மில்லின் சிறுவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உலகளாவிய ரீதியில் 2020 ஆம் ஆண்டு தொடக்கும் 2021 ஆம் ஆண்டுகளில் 10 மில்லியன் மக்கள் காச நோயால் பாதிக்கப்படுவார்கள். இதில் 3 மில்லியன் மக்கள் தாங்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமலே அந்த நோயுடன் வாழ்வார்கள்.
மேலும் ஒரு மில்லியன் மக்கள் எதிர்வரும் ஒரு வருடத்தில் உயிரிழக்க வேண்டி நேரிடலாம். எனவே காச நோய் தொடர்பான வழிப்புணர்வும், அதற்கான சிகிச்சையும் மிகவும் இன்றியமையாதது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்தில் இன்றுவரை 90 காச நோயாளர்கள் இனங்காணப்படுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுகின்றது. மேலும் 20 காச நோயாளர்கள் இன்னமும் இனங்காணப்படாமல் சமூகத்தில் உள்ளார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் காரணமாக காச நோயாளர்களை இனங்காணப்படுவதில் தடை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படுத்தப்படும் வறுமையும் காச நோய் பெருக்கத்தை ஏற்படுத்தும்.
இருவாரமாக தொடர் இருமல், மாலை வேளைகளில் காய்ச்சல், நெஞ்சு நோ, உடல் மெலிவு, உணவில் விருப்பமின்மை, சளியுடன் குருதி வெளியேறுதல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள வைத்திய சாலைக்கு சென்று சளிப்பரிசோதனை செய்ய வேண்டும்.
காச நோய்க்கு உள்ளான ஒருவருக்கு 6 மாத தொடர் சிகிச்சை மூலமாக அவரை முழுமையாக குணப்படுத்திக் கொள்ளலாம் எனவே இதை கண்டு அஞ்சத் தேவையில்லை என்றார்.