கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படல் கூடம் இன்று 12 மணிமுதல் முதல் திறக்கப்பட்டுள்ளது என விமான நிலையம் அறிவித்துள்ளது.
இது குறித்து முகப்புத்தகத்தில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளதுடன் விமானப் பயணி ஒருவருடன் 3 பேர் வழியனுப்பல் கூடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புறப்படல் கூடத்திற்கு செல்பவர்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை குறிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றினை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் ஆம் திகதிக்கு முன்னர் திறப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
வத்தளை, நீர்கொழும்பு உள்ளூராட்சிசபை பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது,
“வௌிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவது எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குள் நிறைவுக்கு கொண்டு வரப்படும்.
நாட்டுக்கு இன்னும் 20,000 பேர் வருகை தரவுள்ளனர். ஏற்கனவே 10,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த செயல்முறையை மேலும் விரைவுபடுத்துவோம்.
அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர், சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் நுழைவதில் கவனம் செலுத்தப்பட்டும்.
அந்தவகையில் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, அவர்கள் பி.சி.ஆர் செய்து ஒரு அறிக்கையை கொண்டு வர வேண்டும்.
மேலும் அவர்களை, சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (எஸ்.எல்.டி.டி.ஏ) உன்னிப்பாக கண்காணித்து வரும். அவர்கள் எங்கு சென்றாலும் நாங்கள் அவர்களை கண்காணிப்போம்” என குறிப்பிட்டார்.