2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் பணத்திற்காக கோப்பையை இந்தியாவிற்கு தாரைவார்த்ததாக அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மஹிந்தானந்த அளுத்கமகே தன்னிடம் உள்ள அனைத்து சாட்சியங்களையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஊழல் மற்றும் பாதுகாப்பு பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அப்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரா கூறியுள்ளார்.

இந்தியாவின் மும்பை நகரில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின.

இறுதிப் போட்டியில் கோப்பையை தன்வசப்படுத்துவதற்கு இலங்கை அணிக்கு இயலுமை காணப்பட்ட போதிலும், பணத்திற்காக கோப்பை இந்தியாவிற்கு தாரைவார்க்கப்பட்டமையை தான் பொறுப்புடன் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எவ்வாறான விவாதம் நடத்தப்பட்டாலும், தான் அந்த விவாதங்களில் கலந்துகொண்டு விடயங்களை தெளிவூட்ட தயார் என அவர் கூறியுள்ளார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இருந்த போதிலும், போட்டியை சிலர் காட்டிகொடுத்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நடவடிக்கைகளுக்கு விளையாட்டு வீரர்களை தொடர்புப்படுத்தாது, சில தரப்பினரே தொடர்புப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் இறுதிப் போட்டியில் பங்குப்பற்றும் வீரர்களின் பட்டியலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு பட்டியலிட்டு, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு வழங்கி அதற்கான அனுமதியை பெற்றிருந்ததாக முன்னாள் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

எனினும், இறுதிப் போட்டிக்காக தாம் இந்தியாவிற்கு சென்று பார்க்கும் போது 4 வீரர்கள் புதிதாக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டமையை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் அனுமதி வழங்கப்பட்ட அணி போட்டியில் விளையாடாது, புதிய நான்கு வீரர்களுடன் போட்டி நடைபெற்றதாக அவர் தெரிவிக்கின்றார்.

இறுதித் தருணத்தில் இலங்கையிலிருந்து புதிதாக இரண்டு வீரர்கள் அணியில் இணைத்துகொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த இரண்டு வீரர்களை அணியில் இணைத்துகொள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் அனுமதி கோரப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

ஷாமர சில்வா, ரங்கன ஹேரத், அஜந்த மென்டீஸ், எஞ்ஜலோ மெத்திவ்ஸ் ஆகியோருக்கு பதிலாக, ஷாமர கபுகெதர, திஸர பெரேரா, சுராஜ் ரன்தீவ், நுவன் குலசேகர ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

இறுதியில் விளையாட்டு வீரர்கள் மாற்றப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற விதத்தில் தனக்கு அப்போது பல முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த ஆட்ட நிர்ணயம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இலங்கையில் ஆட்ட நிர்ணய சட்டம் காணப்படவில்லை எனவும், உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்தவுடன் ஆட்ட நிர்ணய சட்டத்தை தான் கொண்டு வர நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் தமது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமைத்துவம் வழங்கிய குமார் சங்கக்கார தனது ஃபேஸ்புக் தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

”முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தன்னிடம் உள்ள அனைத்து சாட்சியங்களையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஊழல் மற்றும் பாதுகாப்பு பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனூடாகவே விசாரணைகளை முழுமையாக விசாரணை செய்ய முடியும்,” என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவும் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

”தேர்தல் காலம் என்பதனால் அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளனர். பெயர்கள் மற்றும் சாட்சியங்களை வெளிப்படுத்துங்கள்” என மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply