இலங்கை அரசியல் தற்போது ஓர் நிர்ணயமான காலத்திற்குள் பிரவேசித்திருக்கிறது. நாட்டைப் பீடித்துள்ள கொரொனா தொற்றுநோய் மக்களின் சுகாதாரத்தை மிகவும் பாதித்துள்ள நிலையில் அதன் பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேலும் பல வகைகளில் அன்றாட வாழ்க்கையை அச்சுறுத்தி வருகிறது.

மக்களின் போக்குவரத்து மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு தூர விலகி நிற்பது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் நாட்டின் பிரதான உற்பத்தித்துறைகள், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வருமானமும் பாதிப்படைந்துள்ள நிலையில் மக்கள் வாழ்வு மேலும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து செல்லும் அதே வேளை நாட்டின் அரச கட்டுமானங்களும் குறிப்பாக பாராளுமன்றம், ஜனாதிபதி செயலகம், நீதித்துறை போன்றன அதன் ஜனநாயக அடிப்படைகளை இழப்பதற்கான அறிகுறிகள் பலமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.

அரச கட்டுமானம் என்பது படிப்படியாக ராணுவ கட்டுப்பாட்டிற்குள் செல்வதற்கான ஏற்பாடுகள் தென்படுகின்றன.

இதனால் நாட்டின் அரசியல் அமைப்பின் அடிப்படையிலான செயற்பாடு சுருங்கி நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துச் செல்லப்படுகிறது.

அரசியல் அமைப்பு என்பது பிரதான அதிகார மையங்களான பாராளுமன்றம், நீதித்துறை, ஜனாதிபதி செயலகம் என்பவை ஒன்றிற்கொன்று அவற்றின் அதிகாரங்களை மீறாதவாறு செயற்படுவதை உறுதி செய்கிறது.

குறிப்பாக பாராளுமன்றம், ஜனாதிபதி என்பன மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவதால் அவை இரண்டும் தத்தமது அதிகாரங்களை மீறாதவாறு தடுப்பது நீதிமன்றம் ஆகும்.

ஆனால் தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி செயலகமே நாட்டின் நிர்வாகத்தை நடத்துகிறது.

தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகள் பலவும் பாராளுமன்றச் செயற்பாடுகளை மேலும் பலவீனமாக்கும் ஏற்பாடுகளை எடுத்துச் செல்வதால் தேர்தல் நடைபெற்றாலும் பாராளுமன்றம் வலுவுள்ளதாகச் செயற்பட வாய்ப்பு உண்டா? என்ற சந்தேகங்கள் ஏற்கெனவே எழுந்துள்ளன.

ஜனாதிபதியும் அவர் சார்ந்துள்ள கட்சியும் பாராளுமன்றம், ஜனாதிபதி செயலகம் என்பவற்றின் அதிகாரங்களை முழுமையாகக் கைப்பற்றும் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதால் குறிப்பாக நாட்டின் பல்லின, பன்மைத்துவ சகவாழ்வு நிலைப்பாடுகளை நிராகரிக்கும் விதத்தில் தனிச் சிங்கள பெரும்பான்மை உதவியுடன் ஆட்சியை நடத்துவதற்கான நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றனர்.

இப் பின்னணியில் நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக தற்போதைய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள 13வது திருத்தத்தின் எதிர்காலம் குறித்த பார்வைகளை நோக்கிய விவாதங்கள் எழுந்துள்ளன.

ஒரு புறத்தில் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கைப்பற்றுவதன் மூலம் சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் என்பன ஒரே கட்சியின் கட்டுப்பாட்டில் எடுத்துச் செல்வதற்கான நிலமைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான நெருக்கடியான பின்னணியில் தேசிய இனப் பிரச்சனையின் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகரித்துள்னன.

நாட்டின் பல்லின விருத்தியும், பன்மைத்துவ ஜனநாயகக் கட்டுமானமும் ஜனநாயகத்தின் அடிப்படையாகக் கருதப்பட்ட நிலை மாற்றமடைந்து அவை தனி இனத்தின் அடையாளமாக மாற்றமடையும் நிலை அதிகரித்துள்ளது.

இதனால் தேசிய இனப் பிரச்சனை என்பது பெரும்பான்மைப் பலம் காரணமாக ஒடுக்கப்படும் வழிகள் ஆரம்பித்துள்ளதால் தேசிய இனங்கள் மாற்று வழிமுறைகளை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன.

இக் கவலைகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதற்கான பின்னணி என்பது கடந்த கால நிகழ்வுகளிலிருந்தே ஆராயவேண்டியுள்ளது.

தமிழ் அரசியலில் மே, யூன், யூலை மாதங்கள் பிரிக்க முடியாத பகுதிகளாக உள்ளன. சகோதரப் படுகொலைகள், இந்திய – இலங்கை ஒப்பந்தம், இனக் கலவரங்கள் என பல உள்ளன.

இவற்றில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பது நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னதான தேசிய இனப் பிரச்சனையில் மிகப் பிரதானமான மைல்கல் ஆகும்.

இவ் ஒப்பந்தம் நிகழ்வதற்கான அரசியல் பின்புலம் தெளிவாக உணரப்பட்டால் மாத்திரமே அவ் ஒப்பந்தத்தின் இன்றியமையாத நிலை புலப்படும்.

தமிழரசுக்கட்சியால் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டை மாநாடு என்பது தமிழ் அரசியலில் மிக முக்கிய புள்ளியாகும்.

ஏனெனில் இம்மாநாடு அக் கட்சிக்குள் காணப்பட்ட உள்முரண்பாடுகளின் வெளிப்பாட்டை உணர்த்தியது.

மிதவாத சக்திகளுக்கும், தீவிரவாத சக்திகளுக்குமிடையேயான பலப்பரீட்சையின் விளைவை அடையாளப்படுத்தியது.

அத்துடன் பிளவுகளை ஆழப்படுத்திச் சென்ற தமிழ் மிதவாத அரசியலின் அப் போக்குத் தடுக்கப்பட்டதோடு ஐக்கியத்தின் அவசியம் வெளிப்படுத்தப்பட்டது.

ஒரு புறத்தில் இவை தமிழரசுக்கட்சிக்குள்ளிருந்த உள்முரண்பாடுகளை வெளிப்படுத்திய வேளையில் அதுவரை பாராளுமன்றத்திற்குள் மட்டும் பேசப்பட்டுத் தீர்க்கப்படும் பிரச்சனை என்ற நிலையிலிருந்து மாறி அதற்கு வெளியில் பேசப்பட்டுத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாக மாறியது.

சிங்கள அதிகார வர்க்கம் தமிழ் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை அடையாளம் காணத் தவறியிருந்தது. வெளிநாட்டுத் தலையீடுகளுக்கான வாய்ப்புகளை அவை ஏற்படுத்தலாம் என்ற முன்னுணர்வை இழந்திருந்தனர்.

தமிழ் அரசியலில் மிதவாத தலைமைக்கு எதிரான சக்திகள் மத்தியிலும் கூறுகள் காணப்பட்டன. தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுவதில் இணையும் சக்திகள் குறித்த பார்வையில் வேறுபாடுகள் இருந்தன.

குறிப்பாக ஒரு சாரார் விடுதலை என்பது சிங்கள ஆதிக்கத்திலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பது என்ற குறுகிய விளக்கத்திற்குள்ளும், இன்னொரு சாரார் விடுதலை என்பது உழைக்கும் மக்களின் அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்கான அல்லது அம் மக்களை முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து விடுவிப்பதாக கோரும் பரந்த விளக்கத்தையும் பெற்றிருந்தது.

எனவே தமிழ்த் தேசியவாதம் என்பது இந்த இரண்டு வகைப் போராட்டத்திற்குள்ளும் சிக்கியிருந்தது.

இந்த இரண்டு தரப்பில் சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுபட எண்ணிய சக்திகள் விடுதலைப்புலிகள் மற்றம் கிட்டத்தட்ட அதே இலக்குகளை வைத்திருந்த சக்திகளுக்கு விடுதலைப்புலிகளே தலைமைதாங்க, நாட்டின் முதலாளித்துவ அரசுக் கட்டுமானத்திற்கு மாற்றீட்டினை விரும்பிய சக்திகள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலும் இணைந்தனர்.

தமிழ் அரசியலின் மாற்றங்களை இவ்வாறாக அடையாளப்படுத்துவதன் நோக்கம் அவற்றின் வேறுபாடுகள் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையிலானது என்பது கவனிக்கத் தக்கது.

70களின் பிற்பகுதியில் தமிழ் அரசியலில் இம் மாற்றங்கள் ஏற்பட்டபோது சர்வதேச அரசியலும் ஏற்றவாறு மாற்றமடைந்திருந்தது.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியங்கள் தமது குடியேற்ற நாடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான போராட்டங்கள் பலமடைந்திருந்தன.

அவை ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதாகவும், தேசிய விடுதலையை நோக்கியதாகவும் அமைந்தன. இவற்றின் தாக்கங்கள் தமிழ் அரசியலிலும் பிரதிபலித்தன.

இதுவே விடுதலைப்புலிகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பவற்றின் அரசியல் அணுகுமுறைகளிலும் பிரதிபலித்தன.


இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னதான அரசியல் வரலாற்றில் தேசிய இனப் பிரச்சனையில் காத்திரமான மாற்றத்திற்கு அடிகோலியது இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

இந்த ஒப்பந்தத்திற்கு முன்னர் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் இலங்கை என்ற தேசத்தின் ஒரே அரசுக் கட்டுமானமாகிய பாராளுமன்ற செயன்முறையினூடவே முயற்சிக்கப்பட்டது.

இலங்கையின் பாராளுமன்ற ஆட்சிமுறையில் நிரந்தர பெரும்பான்மையும், நிரந்தர சிறுபான்மையினரும் அமைதியாக வாழவேண்டுமெனில் விட்டுக்கொடுப்பு அவசியம் என்பதை அப் பொறிமுறை பல தடவைகள் உணர்த்தியிருந்தது.

ஆனாலும் நிரந்தர பெரும்பான்மைப் பலத்தினையுடைய சிங்கள அரசியல் தலைமைகள் எப்போதுமே சகவாழ்வு அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்குப் பிராதான காரணமாக பாராளுமன்ற ஆட்சிமுறை என ஒரு சாராரும், இன்னொரு சாரார் சிங்கள அதிகார வர்க்கம் பௌத்த மதத்துடன் தமது அரசியலை நன்கு பிணைத்துக்கொண்டதால் பன்மைத்துவ சமூக வாழ்வை நிராகரித்துச் செல்வது அதன் தவிர்க்க முடியாத இயல்பாக மாற்றமடைந்ததன் விளைவே என இன்னொரு சாரும் விளக்கம் தருகின்றனர்.

சிங்களப் பெரும்பான்மையினர் நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்துச் செல்லும் நிலையில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது வெறுமனே வாய்வீச்சுத் தளமாகவே உள்ளது.

தனிச் சிங்களப் பெரும்பான்மை மூலம் பாராளுமன்ற அதிகாரத்தை அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கைப்பற்ற முடியும் என்ற நிலைக்கு அரசியல் மாற்றமடைந்துள்ளதால் இப் பிரச்சனையில் மூன்றாம் தரப்புத் தலையீடு என்பது தோல்வியடைந்து செல்லும் பாராளுமன்ற ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் தேவையை வற்புறுத்தி நிற்கிறது.

இங்கிருந்தே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் இன்றியமையாத தன்மையை ஆராயவேண்டியுள்ளது. 1987ம் ஆண்டு யூலை 29ம் திகதி ஏற்படுத்தப்பட்ட இவ் ஒப்பந்தம் மட்டுமே

இலங்கைத் தேசிய இனப் பிரச்சனையின் காத்திரமான இணைப்பாக உள்ளது. பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் யாவும் கருவிலேயே கொல்லப்பட்டுள்ளன.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் மட்டுமே பல்வேறு தடைகளுக்கும் மத்தியில் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிங்கள அரசியல் தம்மீது திணிக்கப்பட்ட ஒன்று என இதனை வர்ணித்தாலும் கடந்த 33 வருடங்களாக தேசிய இனப் பிரச்சனையின் முக்கிய பேசு பொருளாக இவ் ஒப்பந்தம் மட்டுமே உள்ளது.

இவ் ஒப்பந்தம் தொடர்பான அம்சங்கள் பற்றிப் பேசுவதாயின் அவ் ஒப்பந்தத்தின் முன்னரும் பின்னருமான சம்பவங்கள், பின்னணிகள் பற்றிய விபரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஏனெனில் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தினை அரசியல் யாப்பிலிருந்து நீக்கவேண்டுமெனவும், அத் திருத்தம் இந்திய அழுத்தங்களின் அடிப்படையில் எழுந்த ஒன்று எனவும், பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்பட்டது எனவும் சிங்கள அதிகார வர்க்கத்தினர் பேசி வருகையில் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபையின் தோற்றத்தின் அரசியல் பின்புலம் தமிழ் மக்களால் நன்கு புரிந்திருத்தல் அவசியமானது.

 

இலங்கையின் தமிழ் மக்களினதும், இதர தேசிய இனங்களினதும் ஜனநாயக உரிமைகளை மறுதலித்து தேசிய நீரோட்டத்திலிருந்து அம் மக்கட் பிரிவினரை ஒதுக்கிச் செல்லும் அதே வேளை பாராளுமன்ற ஜனநாயகம் என்பது அதன் பன்மைத்துவ இலக்கிலிருந்து விலகிச் செல்லுமாயின் மூன்றாவது தரப்பின் தலையீடு தவிர்க்க முடியாததாகிறது.

இன்றும் அதே புறநிலைகளே காணப்படுகின்றன. இங்கு இவ் விவாதம் வேறு காரணங்களால் நிராகரிக்கப்படும் நிலை காணப்படினும் யதார்த்த அடிப்படையில் நோக்கும்போது சர்வதேச தலையீடு அவசியம் என்பதை எவரும் ஏற்றுக் கொள்வர்.

இங்கு சர்வதேச தலையீடு என்பது தற்போது காணப்படும் பூகோள அரசியல் அணுகுமுறைகளோடு பார்க்கப்படுவது அவசியமாகிறது.

 

இப் பின்னணிகளிலிருந்தே வடக்கு – கிழக்கு மாகாணசபை உருவாக்கமும், அதற்கான தேர்தல்களில் அன்றைய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், இன்றைய சமூக ஜனநாயகக் கட்சியினது செயற்பாடுகள் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

 

இணைந்த மாகாணசபையில் சிங்கள மற்றும் முஸ்லீம் உறுப்பினர்கள் அதன் நிர்வாகத்தில் இணைக்கப்பட்ட ஏற்பாடுகள் மிகத் தெளிவாகவே ஐக்கிய இலங்கைக்குள் இதர தேசிய இனங்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படவேண்டும் என்ற உயரிய நெறி மிகவும் திட்டவட்டமாகவே அடையாளப்படுத்தப்பட்டது.

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான தமிழ் அரசியலில் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனக் கட்டமைப்பு என்ற வகையில் அதன் உருவாக்கம் மிகவும் கோட்பாட்டு அடிப்படையிலான கட்டுமானமானத்தின் ஆரம்பமாக அமைந்திருந்தது.

 

மிகச் சிறிய அரசியல் கட்சியாக இருந்த போதிலும் தமக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை தமிழ்ச் சமூகத்தினதும், நாட்டினதும் எதிர்கால நலன்களை முன்னிறுத்தியே மிக அதிக விலை கொடுத்து உருவாக்கினார்கள்.

எதிர்வரும் யூன் மாதம் 19ம் திகதி இக் கட்சியினது ஸ்தாபகர்களில் முக்கியஸ்தரான பத்மநாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 30 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் ஒரு கட்சியின் பிரதான தலைவர்கள் 14 பேர் அந்நிய மண்ணில் சக போராளிக் குழுக்களால் கொலைசெய்யப்பட்ட நிகழ்வு என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய சம்பவமாக இல்லை.

ஏனெனில் இவர்கள் மானிட விடுதலையைக் கோரியவர்கள், உழைக்கும் மக்கள் அதிகாரத்தைப் பெற விரும்பியவர்கள்.

இலங்கைத் தேசிய இனப் பிரச்சனையில் சிங்கள உழைக்கும் மக்களின் இணைந்த செயற்பாட்டில் தீர்வு காண விழைந்தவர்கள்.

பலத்த கொலை மிரட்டல்களுக்கு மத்தியில், தமிழரசுக்கட்சியும் ஏனைய விடுதலை இயக்கங்களும் இணைந்து நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக உருவாகிய இணைந்த மாகாணசபையின் தேர்தலில் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் போட்டியிட்டு நிர்வாகத்தை ஏற்றவர்களின் தீர்க்க தரிசனமிக்க செயற்பாடுகள் காலத்தால் அழியாதவை.

அன்றைய ஐ தே கட்சி ஆட்சியாளரால் முன்வைக்கப்பட்ட 13வது திருத்தம் உண்மையில் அதிகார பரவலாக்க வரைமுறைகளைக் கொண்டிருக்கிறதா? தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் அரசியல் அமைப்பு நெருக்கடிகளுக்கு மாற்றாக அமையுமா? எனவும், இம் மாற்றங்கள் தேசிய அளவிலான அமைதியையும், ஜனநாயக வாய்ப்புகளையும் திறக்குமா? என்ற சந்தேகம் பரவலாகக் காணப்பட்டது.

அத்துடன் முழுமையான அதிகார பரவலாக்கத்தினை மேலும் விருத்தி செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை இத் திருத்தம் கொண்டுள்ளதா? எனப் பல கேள்விகள் எழுந்தன.

 

அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்ற ஏற்பாடுகள் தொடர்பாக தமது எதிர்ப்புகளை வெளியிட்ட ஒரு சாரார் இத் திருத்தம் தமது தனி ஈழக் கனவுகளுக்கு வழி சமைக்குமா? தனிச் சுயாட்சியை நோக்கிய பயணத்திற்கு வித்திடுமா? என்ற கண்ணாடி வழியாகப் பார்த்தனர்.

ஆனால் இந்திய தரப்பினர் உள்நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான தற்காலிக ஏற்பாடாகவும், அப்போதிருந்த இலங்கைப் பாராளுமன்ற அரசியல் சூழலில் ஓரளவாவது அமைதியை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே கருதினர்.

ஒரு புறத்தில் 13வது திருத்தம் போதியளவு மாற்றத்தைத் தரவில்லை என்ற எதிர்ப்புகளும், மறுபுறத்தில் இலங்கை மண்ணில் இந்திய ஆதிக்கத்திற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மறு சாராரும் கருதினர்.

இன்னொரு சாரார் இலங்கையின் ஒற்றை ஆட்சிக் கட்டமைப்பில், மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஆட்சி நிலவுகையில், இப் பாரிய முரண்பாடுகளுக்கு மத்தியில் பரந்த அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்பவற்றை நிறைவேற்ற முடியாது என்பதால் மிகவும் வரையறுக்கப்பட்ட திருத்தம் என அதனை வர்ணித்தனர்.

இவ் விவாதங்களின் பின்னணியில் மிகவும் சிறிய கட்சியாக செயற்பட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இம் மாற்றங்களை மிக நீண்ட பார்வையில் நோக்கியது.

இலங்கை சுதந்திரமடைந்த கால அரசியல் வரலாற்றில் பெரும்பான்மை சிங்கள மக்கள் நாட்டில் ஜனநாயக ஆட்சி ஒற்றை ஆட்சித் தன்மையில் நிலவுவதை விரும்பினர்.

ஏனெனில் அவர்களது எண்ணிக்கைப் பெரும்பான்மை நாட்டின் கட்டுப்பாட்டை தர வல்லது எனக் கருதினர்.

ஆனால் பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கம் தமது அடையாளங்களை அழித்துவிடும் என்ற சந்தேகம் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலே காணப்பட்டது.

இதன் விளைவாகவே தமது பிரச்சனைகளுக்கு அரசியல் யாப்பு வழிகள் மூலம் பாதுகாப்பைத் தேடினர். இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் அரசியல் யாப்பு மாற்றங்களுக்கான பாதைகளைத் தாமாகவே அடைத்துள்ள நிலையில் மூன்றாம் தரப்பின் தலையிட்டால் மாற்றங்கள் ஏற்படும். எனவே தருணத்தை தவறவிட முடியாது என்ற நிலையை நோக்கிச் சென்றனர்.

அமிர்தலிங்கம்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினை உருவாக்கப் பின்னணியில் செயற்பட்ட பாரிய கட்சியான தமிழரசுக்கட்சி 13வது திருத்த பாராளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டது.

ஆனால் தேர்தல்களில் பங்குபற்றவில்லை. 1989ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவ் விவாதங்களின்போது அமிர்தலிங்கம் அவர்களின் உரை பின்வருமாறு அமைந்தது.

…… இன்று நாம் தற்போதுள்ள அரசியல் யாப்பின் கீழ் அதிகார பரவலாக்கம் என்பது பற்றித்தான் ஆராய்கிறோம். இன்றைய ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் 13வது திருத்தத்தின் மூலமாக அதிகார பரவலுக்கான ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

13வது திருத்தத்தின் மூலமாக தரப்பட்ட அதிகார பரவலாக்கல் போதுமானதா? அல்லவா? என்பது சம்பந்தமான கருத்து எமக்கு உண்டு. இதனை நாம் இரகசியமாக வைத்துக்கொள்ளவில்லை.

பரவலாக்கப்பட்ட அதிகாரம் கூட்டப்பட வேண்டும். 13வது திருத்தம் மூலமாக கொடுக்கப்படும் அதிகாரங்களிலும் பார்க்க மாகாணங்களுக்கு அதிகம் வழங்கப்பட வேண்டும்……..
எனத் தெரிவித்த அவர் அதே உரையில்

…….இந் நாட்டின இரு இனங்களுக்கு இடையேயான உறவு சம்பந்தமான பிரச்சனை இது. எனவே அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கல் என்னும் அடிப்படையில் இம் முயற்சியினை மேற்கொள்ள முற்படுவோம்.

இது பூரணமானது. திருப்திகரமானது என நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை நாம் கூறியுள்ளோம். இது திருத்தப்படலாம். திருத்தப்பட வேண்டும்.

எனவே இப் பிரச்சனைகளில் செயற்படுவோம். உண்மையில் எதிர்காலத்தில் அதிகார பரவலாக்கம் என்னும் திட்டம் முன்னேற்றம் அடையும் வேளையில் தெற்கிலுள்ள மாகாணசபைகளும் கூடுதலான அதிகாரங்களைக் கோரும்.

எனவே இதற்கான வழிகளுக்குத் தடைகள் போடாமல் இருப்போமாக……..
அமிர்தலிங்கம் அவர்களின் ஆருடம் போலவே தற்போது சிங்கள பகுதியில் செயற்படும் மாகாணசபைகள் மேலும் அதிகாரங்களைக் கோரும் நிலமைகளை நாம் அவதானிக்கலாம்.

தமிழ் மக்களின் அரசியலில் காத்திரமான பாகத்தை வகித்துள்ள ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணி தேசத்தின் பொருளாதார அடிப்படைகள் நவ தாராளவாத திறந்த பொருளாதார நடவடிக்கைகள் காரணமாகப் பாரிய சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கியுள்ளது.

இப் பாரிய சமூக ஏற்றத்தாழ்வு இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதால் சகல பிரிவினரும் இணைந்து செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலை தற்போது உலகம் முழுவதிலும் காணப்படுவதால் அரசியல் அணுகுமுறைகளும் மாற்றமடைந்துள்ளன.

திறந்த பொருளாதாரமும். கட்டுப்பாடற்ற வர்த்தகமும், மூலப் பொருள் சூறையாடலும் ஜனநாயக கட்டுமானங்களைப் பலவீனப்படுத்தியுள்ளன.

இதனால் மனித ஆற்றலைத் திறந்து விடுவதற்கான ஜனநாயக மாற்றங்கள் அவசியமாகின்றன. மனித இருப்பிற்கு அச்சுறுத்தலாக மாற்றமடைந்துள்ள சுற்றுப்புறச் சூழல் மாற்றம் காரணமாக ஏற்கெனவே காணப்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகள் மேலும் கூர்மையடைந்துள்ளன.

இந் நிலையில் விடுதலை என்பது சமூக ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களாக மாறியுள்ளன. சிறிய கட்சியானாலும் தூரநோக்குள்ள கட்சியாக, சமூக ஜனநாயகக் கட்சியாக இன்று மாற்றமடைந்துள்ளது.

மிகவும் தூரநோக்குள்ள தலைவர்களின் தியாகங்களைக் கொண்டுள்ள அக் கட்சி இம் மா மனிதர்களின் இழப்புகள் 30 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் தனது வரலாற்றுப் பங்களிப்பை மேற்கொள்வது சிறப்பு.

-வி.சிவலிங்கம்

Share.
Leave A Reply