இந்திய சீன எல்லையில் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சர்ச்சை வாசகம் அடங்கிய பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லடாக்கின் பாங்கோங் ஏரியை ஒட்டிய பகுதியில் Fight To Win எனும் வாசகம் அடங்கிய இந்திய ராணுவத்தின் பேனர் புகைப்படம் சமூக வலைதளங்களில், ‘சீனா நிறுவிய எச்சரிக்கை பேனர்’ எனும் தலைப்பில் வைரலாகி வருகிறது.
முன்னதாக லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக இருநாட்டு எல்லை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேனர் புகைப்படம், ‘லடாக்கில் சீனா நிறுவிய பேனர், மோடிக்கு தெளிவான தகவல்’ எனும் தலைப்பில் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், இதே புகைப்படம் அடங்கிய பழைய செய்தி தொகுப்புகள் இணையத்தில் கிடைத்தன.
உண்மையில் இந்த புகைப்படம் அக்டோபர் 5, 2012 அன்று எடுக்கப்பட்டது ஆகும். மேலும் இந்த பேனரை இந்திய ராணுவம் லடாக் எல்லை பகுதியில் நிறுவி இருப்பதும் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று, பேனர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீனா நிறுவவில்லை என்பது தெளிவாகி விட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.