கொரோனா வைரசின் உறவு வைரசால் சார்ஸ் வைரஸ் தொற்று பரவியபோதும், இந்த வகை ரத்த பிரிவு உடையவர்களுக்கு குறைவான பாதிப்பு ஏற்பட்டதை காண முடிந்தது…

கொரோனா வைரசின் உறவு வைரசால் சார்ஸ் வைரஸ் தொற்று பரவியபோதும், ஓ வகை ரத்த பிரிவு உடையவர்களுக்கு குறைவான பாதிப்பு ஏற்பட்டதை காண முடிந்தது…

ஒவ்வொரு கணமும் யாருக்கேனும் இந்த பூமிப்பந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

ஏறத்தாழ 200 நாடுகளில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி இந்த தொற்று மொத்தம் 83 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து இருக்கிறது, சற்றேறக்குறைய 4½ லட்சம் பேரின் உயிரைப்பறித்தும் இருக்கிறது என்று கணக்கு சொல்கிறது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம்.

தப்பி விட ஆசை…

ஒவ்வொருவருக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பி விடத்தான் ஆசை இருக்கிறது.

உலகளவில் விஞ்ஞானிகள், இந்த தொற்று யாருக்கு வரும், யாரை அதிகமாக பாதிக்கும், யார் தொற்றில் இருந்து தப்ப முடியும் என்றெல்லாம் விதவிதமாக ஆராய்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளின் மரபணுக்களை ஒப்பிட்டு இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை நியு இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த ஆய்வுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளையும், நோய் பாதிப்பில்லாமல் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்கிற மற்றும் கொரோனாவின் லேசான அல்லது அறிகுறிகள் அற்றவர்கள் என பல்லாயிரகணக்கானோரை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்து இருக்கிறார்கள்.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள முக்கிய உண்மை, கொரோனா வைரஸ் தொற்று ‘ஏ’ வகை ரத்த பிரிவை சேர்ந்தவர்களை அதிகளவில் தாக்கி இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் ‘ஓ’ வகை ரத்த பிரிவை கொண்டவர்களுக்கு மிக குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதுவும் அம்பலமாகி உள்ளது.

இதெல்லாம் சீனாவின் முந்தைய ஆய்வுகளை உறுதிப்படுத்துவதாக அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி விஸ்கான்சின் மருத்துவ கல்லூரியின் ரத்த நிபுணர் டாக்டர் பரமேஷ்வர் ஹரி கூறும்போது, “ முதலில் சீன ஆய்வு முடிவு பெரிய அளவில் அடிப்படை ஏதுமின்றி (கச்சா ஆய்வு) வந்தது.

 

எனவே அதை நாங்கள் கணக்கில் கொள்ளவில்லை. ஆனால் இப்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வை நான் நம்புகிறேன். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையக்கூடும்” என்கிறார்.

அதே நேரத்தில் மற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கையுடன் இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கிறார்கள் என்பதையும் பதிவு செய்தாக வேண்டியதிருக்கிறது,,

சாண்டீகோவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எரிக் டோபோல், “ரத்த வகைக்கான பங்களிப்பு சான்றுகள் தற்காலிகமானது. ஒரு சமிக்ஞையை உறுதிப்படுத்த இது போதுமானதாக இல்லை” என்று கருத்து கூறுகிறார்.

அதே நேரத்தில் ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள், 6 மரபணுக்களில் உள்ள மாறுபாடுகளை கடுமையான நோய்க்கான சாத்தியக்கூறுகளுடன் பொருத்திப் பார்த்து இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய ரத்த வகைகளையும் பொருத்தி பார்த்துள்ளனர்.

“இது போன்ற பெரும்பாலான மரபணு ஆய்வுகள் மிகப்பெரியவை. எனவே மற்ற விஞ்ஞானிகள் இதேபோன்று இணைப்புகளை நோயாளிகளின் மற்ற குழுக்களிடம் பார்க்க முடியுமா என்பதையும் ஆராய வேண்டியதிருக்கிறது என்று டாக்டர் எரிக் டோபோல் சொல்கிறார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் ஏன் மிகவும் நோய்வாய்ப்படுகிறார்கள், ஒரு சிலர் மட்டும் லேசான பாதிப்புக்கு ஆளாவது எப்படி என்பதற்கான தடயங்களை பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

அதோடு, வயதானவர்கள் அல்லது ஆண்கள் அதிகமான பாதிப்புக்கு ஆளாகிறார்கள்; எனவே வைரசின் தீவிர தன்மைக்கு காரணிகளை தேடி வருகிறார்கள்.

ஆனால் சர்வதேச ரத்தம் மற்றும் மஜ்ஜைமாற்று ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் தலைவர் டாக்டர் மேரி ஹோரோவிட்ஸ் கூறுவதுவும் கவனிக்கத்தக்கது.

அவர், “ஏ, பி, ஏபி, ஓ என முக்கியமாக 4 வகை ரத்த பிரிவுகள் இருக்கின்றன. இது உங்கள் ரத்த சிவப்பணுக்களின்மேற்பரப்பில் உள்ள புரதங்களால் நிர்ணயிக்கப்படுகிறது” என்கிறார்.

இது பற்றி விஸ்கான்சின் மருத்துவ கல்லூரியின் ரத்த நிபுணர் டாக்டர் பரமேஷ்வர் ஹரி சொல்லும்போது, “ஓ வகை ரத்த பிரிவு உடையவர்களுக்கு, சில புரதங்களை அயலானாக அடையாளம் காண முடிகிறது. இது வைரஸ் மேற்பரப்புகளில் உள்ள புரதங்களுக்கும் பொருந்தும்” என்கிறார்.

அது மட்டுமல்ல, கொரோனா வைரசின் உறவு வைரசால் சார்ஸ் வைரஸ் தொற்று பரவியபோதும், ஓ வகை ரத்த பிரிவு உடையவர்களுக்கு குறைவான பாதிப்பை ஏற்பட்டதை காண முடிந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

காலரா, சிறுநீர்பாதை நோய்த்தொற்றுகள் போன்றவற்றிலும்கூட ரத்த வகை தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மரபணு மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டேவிட் வேலி குறிப்பிடுகிறார்.

அவர் தொடர்ந்து சொல்லும்போது, “ இது தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆய்வு. இது வெளியிடுவதற்கும், வெளியே செல்வதற்கும் மதிப்பு வாய்ந்தது.

அதே நேரத்தில் இன்னும் கூடுதலான நோயாளிகளின் தரவுகளை கொண்டு இது சரிபார்க்கப்பட வேண்டும்” என்று முடிக்கிறார்.

இந்த ஆய்வு முடிவு உணர்த்தும் உண்மை, கொரோனா தாக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் உணர்த்தியுள்ள நிலையில் ஏ ரத்த வகை பிரிவினர் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.

ஓ வகை ரத்த பிரிவினர் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம், ஆனாலும் அவர்களும் கவனமாக இருக்கத்தான் வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

Share.
Leave A Reply