“போர்க்காலத்தில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும் பாரதூரமான விடயமல்ல.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இரகசியத் தகவல்களை அவர் இறுதியில் வழங்கியதன் காரணமாகவே போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.”

– இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போர்க்காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினரால் விடுதலைப்புலிகள் அமைப்பினர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள்.

இராணுவத்தினருக்கு எதிராகவும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் பல்வேறு வழிமுறைகள் ஊடாகத் தாக்குதல்களை முன்னெடுத்தார்கள்.

போர்க்காலத்தில் கருணா அம்மான் கிழக்கு மாகாண படைத்தளபதி பொறுப்பாளராகச் செயற்பட்டார். இதன்போதே இதன்போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம்.

கருணா அம்மான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்துக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்கினார். இதன்பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் கருணா அம்மான் பல்வேறு இரகசியத் தகவல்களை அரசுக்கு வழங்கினார்.

இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டே இறுதிக்கட்டப் போர் குறுகிய காலத்தில் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆகவே, தற்போது இவர் குறிப்பிட்டுள்ள கருத்து இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றது.

எனவே, இவ்வாறான கருத்துக்களைக் குறிப்பிடுவதை இவர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இறுதிக்கட்டப் போரை மிக விரைவில் நிறைவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால் இவரது உதவியை அப்போது பெற்றுக்கொண்டோம்.

இறுதிக்கட்டப் போரில் இரண்டு தரப்பிலும் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. போரை நோக்கிப் பயணிக்கையில் இழப்புக்களை நிச்சயித்துக்கொள்ள வேண்டும் என்பது இராணுவத்தினருக்குச் சாதாரண ஒரு விடயமாகும்.

முப்பது வருட போரை நிறைவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாகவே இன்று தமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்” – என்றார்.

Share.
Leave A Reply