உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களில், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கையேற்ற சந்தேக நபர்களை விசாரித்த போதே, இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் மர்மம் துலக்கப்பட்டதாக சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க தெரிவித்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்ட ரிவோல்வர்களில் ஒன்று நிந்தவூர் பகுதியில் வீடொன்றின் சமயலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தன்னால் மீட்கப்பட்டதாகவும் மற்றைய ரிவோல்வர் புத்தளம் – வனாத்துவில்லு, லக்டோ தோட்டத்தில் ஆயுத பீப்பாய்க்குள் இருந்து கண்டுபிடிக்கப்ப்ட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்றது.
ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக்க டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.
இதன்போது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில் சாட்சியத்தை பதிவு செய்யும் போதே, பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க மேர்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.
இதன்போது அவரது சாட்சியத்தில் ஒரு பகுதி இரகசியமாகவும் ஆணைக் குழுவுக்கு வழ்னக்கப்பட்டது.
பிரசித்தமாக அவர் வழங்கிய சாட்சியின் சுருக்கம் வருமாறு,
‘ கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி நான் மட்டக்களப்பில் இருந்தேன். சியோன் தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பிலான விசாரணைகளில் சி.சி.ரி.வி. ஊடான அறிவியல் தடயங்களை மையப்படுத்திய விசாரணைகள் அப்போது இடம்பெற்றன.
மாலை 4.30 மணியளவில் அப்போது சி.ஐ.டி. பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாகமுல்லவும் எனக்கு தொலைபேசியில் அழைத்தனர்.
அவர்கள், காத்தான்குடி பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகவும், அவரை போய் பொறுப்பேற்குமாறும் எனக்கு ஆலோசனை வழங்கினர்.
அதன்படி நான் மாலை 4.45 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்றேன். 5.00 மணியாகும் போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தை அடைந்தேன்.
நான் செல்லும் போது அங்கு பொலிஸ் பொறுப்பதிகாரி இருக்கவில்லை. அவர் ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்ததாக உப பொலிஸ் பரிசோதகர் மொஹம்மட் ஊடாக அறிந்தேன்.
மாலை 6.05 மணியாகும் போது, பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஸ்தூரி ஆரச்சி அங்கு வந்தார். அவரிடம் விடயத்தை தெளிவுபடுத்தி சந்தேக நபரை பொறுப்பேற்றேன்.
அன்றைய தினம் அதிகாலை 5.00 மணியளவில் கிடைத்த தகவலுக்கு அமைய அந்த சந்தேக நபரை நண்பகல் 12.00 மணியாகும் போது கைதுசெய்து அழைத்து வந்ததாக அறிந்துகொண்டேன்.
புதிய காத்தான்குடி – 3 இனைச் சேர்ந்த மொஹம்மட் சரீப் ஆதம்லெப்பை என்பவரே அந்த சந்தேக நபராவார். அவரை இரவு 7.25 மணியாகும் போது, சி.ஐ.டி.யின் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணைக்கு உட்படுத்தினோம்.
அப்போது விஷேட தகவல் ஒன்று வெளிப்படுத்தப்பட்டது. அது வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் கொலையுடன் தொடர்ப்பட்ட விடயமாகும்.
இந் நிலையில் அது சார்ந்த தடயம் ஒன்றினை தேடி அந்த சந்தேக நபரையும் கூட்டிக்கொன்டு, நிந்தவூர் நோக்கி சென்றோம்.
போகும் போது சந்தேக நபர், அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அதிரடிப் படையின் உதவியும் பெறப்பட்டது. அவ்வாறு செல்லும் போது எமது பயணத்துக்கு சாய்ந்தமருது பகுதியில் தடங்கல் ஏற்பட்டது.
சாய்ந்தமருதினை அடைந்த போது அங்கு இராணுவம் அதிரடிப் படை குவிக்கப்பட்டு, கவச வாகனங்கள் வீதியில் மறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு ஒரு யுத்த களமாக அப்பகுதி காட்சியளித்தது.
அதற்கு அப்பால் செல்வது தொடர்பில் கடினமாக உணரப்பட்டது. அங்கு ஏதோ நடக்கின்றது என்பதை அறிந்தோம்.
அங்கிருந்த அதிரடிப் படை கட்டளை அதிகாரியான பொலிஸ் அத்தியட்சரிடம் நாம் எமது பாதுகபபுக்கு வந்த அதிரடிப் படையின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்கவும் சென்று விடயத்தை தெளிவுபடுத்தினோம். அதனையடுத்து தடைகள் அகற்றப்பட்டு எமது பயணத்தை தொடர வாய்ப்பளிக்கப்பட்டது.
இந் நிலையில் நிந்தவூரை அடைந்த நாங்கள், சந்தேக நபரின் வழிகாட்டலுக்கு அமைய, மஸ்ஜிதுல் முஸ்தகீம் வீதியூடாக பயணித்து சர்வதேச பாடசாலை ஒன்றின் அருகே திரும்பி, 214 ஆம் இலக்க வீட்டை அடைந்தோம். அவ்வீட்டை நாம் முழுமையாக சோதனையிட்டோம். அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழிமுறைகளை அதற்காக பயன்படுத்தினர்.
அதன்போது வீட்டின் சமயலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரிவோல்வர் ஒன்றினையும் அதற்கு பயன்படுத்தும் 4 தோட்டாக்களையும் கண்டுபிடித்தோம்.
ஒரு துப்பாக்கிக்கு இரு வேரு இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த ரிவோல்வரில் ஒரு இடத்தில் உள்ள இலக்கம், அதாவது பொலிசார் கடமைக்கு எடுத்துச் எல்லும் போது குறிப்பீடு செய்யும் இலக்கம் அழிக்கப்பட்டிருந்தது.
அந்த வீட்டிலிருந்து 3 மடிக் கணினிகள், சுவிட்ச் ரக கையடக்கத் தொலைபேசி, உடைகள் அடங்கிய 5 பொதிகள், புத்தகங்கள், சி.டி.க்கள், எந்தரமுல்ல, வத்தளை முகவரியைக் கொண்ட வீடொன்றின் 2019.02.19 ஆம் திகதியைக் குறிக்கும் நீர், மின்சார கட்டணப் பட்டியல் ஆகியன எமது பொறுப்பில் எடுக்கப்ப்ட்டன.
இந் நிலையில் அங்கிருந்து நாம் மீள மறுநாள் அதாவது, 2019.04.27 அதிகாலை 1.45 மணியாகும் போது காத்தான்குடியை அடைந்தோம்.
அங்கு ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய நாம் அப்துல் மனார் மொஹம்மட், ஹம்ஸா மொஹிதீன் மொஹம்மட் இம்ரான் ஆகிய சந்தேக நபர்களைக் கைதுசெய்தோம்.
அவர்களிடமும் ஏற்கனவே நாம் பொறுப்பேற்ற சந்தேக நபர்களிடமும் முன்னெடுத்த விசாரணைகளில் சியோன் தேவாலய தற்கொலைதாரிக்கும் தாம் உதவி ஒத்தாசை புரிந்தமையை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந் நிலையில் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது, புத்தளம் வனாத்துவில்லு, லக்டோ தோட்டத்தில் உள்ள ஆயுதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்தது.
அதன்படி சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைய நாம் புத்தளம் சென்று அங்கிருந்து அதிரடிப் படை பாதுகாப்புடன் லக்டோ தோட்டம் பகுதிக்கு 2019.04.28 ஆம் திகதி மாலையாகும் போது போது சென்றோம்.
ஏற்கனவே 2019.ஜனவரி மாதம் அங்கு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட விடயத்தை நான் அறிந்திருந்தேன். பிரதான பொலிஸ் பரிசோதகர் மாரசிங்கவின் குழு அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
இந் நிலையில் வனாத்துவில்லு லக்டோ தோட்டத்திற்கு சென்ற நாம், அங்கு புதைக்கப்பட்டிருந்த பீப்பாய் ஒன்றிலிருந்து ஆயுதங்களை மீட்டோம்.
அன்றைய தினம் மாலை 6.05 மணிக்கு லக்டோ வத்தையை அடைந்த நாம், அங்கிருந்த வீடொன்றுக்குள் பின்னார், சந்தேக நபர்களின் வழிகாட்டலுக்கு அமைய தோண்டினோம்.
அப்போது ஒன்றரை அடி தோண்டும் போது கறுப்பு நிற மூடி ஒன்று வெளிப்பட்டது. தொடர்ந்தும் தோண்டி, நீல நிற பீப்பாய் ஒன்றினை வெளியே எடுத்தோம்.
அதில் இருந்து ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் மெகசின் தோட்டாக்கள் இருந்தன. அத்துடன் வவுணதீவு பொலிஸாரை கொலைசெய்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக நம்பப்படும் இரண்டாவது பொலிஸ் ரிவோல்வர் அந்த பீப்ப்பாயினுள் இருந்தது.
இதனைவிட உள் நாட்டு தயாரிப்பு ரிவோல்வர்கள் 4, அரை தயாரிப்பில் இருந்த துப்பாக்கிகள், பல்வேறு தோட்டாக்கள் என பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
நிந்தவூரில் கண்டுபிடிக்கப்பட்ட ரிவோல்வரும், வனாத்துவில்லுவில் கண்டறியப்பட்ட ரிவோல்வரும் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலைசெய்த பின்னர் கொள்ளையிடப்பட்ட ரிவோல்வர்கள் என்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்தது.’ என சாட்சியமளித்தார்.
அதன் பின்னர் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்கவின் சாட்சியம் இரகசியமாக பதிவு செய்யப்பட்டது.
குறித்த சாட்சியத்தை பதிவுசெய்ய முன்னர் வவுண தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கொலைசெய்யப்பட்ட 2018.11.29 ஆம் திகதி அப்பொலிஸ் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆரியசேன மற்றும் கொலையின் பின்னர் ஸ்தல தடய ஆய்வினை முன்னெடுத்த பிரதான பொலிஸ் பரிசோதகர் கிருஷ்ணபிள்ளை ரவிச்சந்திரன் ஆகியோரின் சாட்சியங்களையும் ஆணைக் குழு பெற்றது.