இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் எனவும் அதுதான் இலங்கை என்றும் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

“இலமுரியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள். அந்தக் கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்தக் கண்டம் வெடித்துச் சிதறியபோது அதில் உருவாகிய ஒரு தீவுதான் இலங்கை. எனவே சிங்கள மக்களாக இருந்தாலும், பௌத்த மதமாக இருந்தாலும் சரி இந்த நாட்டிற்கு வந்தேறு குடிகளே” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில், தமிழர்களுக்கு ஓர் அடி நிலம்கூட சொந்தமில்லை என ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தைக் கண்டித்து ஊடகங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “இலங்கை தீவு சிங்கள, பௌத்த மக்களுக்குரியது என்றும் இங்கு ஆங்காங்கு தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு இது அடையாளமல்ல என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையிலே, நாங்கள் பௌத்த பிக்குகளை மதிக்கின்றோம் என்ற அடிப்படையிலே அவர் சிறந்த கல்விமானாக இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். ஒரு கல்விமானாக இருக்கின்ற ஒருவர் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டியவராக இருக்க வேண்டும். பௌத்தம் என்பது எவ்வாறு உருவாகியது, எவ்வாறு இலங்கைக்கு வந்தது என்பதையெல்லாம்கூட நாங்கள் எங்கள் இளம் மாணவர்களுக்குக் கூட கற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

ஒருகாலத்திலே சோழ மன்னருடைய விருத்தியின் காரணமாக சோழர்கள் இங்கு படையெடுத்து வந்தது என்பது உண்மைதான். எல்லா நாடுகளுக்கும் படையெடுத்து வந்ததைப்போல இலங்கைக்கும் படையெடுத்து வந்தார்கள். ஆனால் இலங்கையிலே சோழர்கள் வருவதற்கு முன்பே தமிழர்கள் இருந்தார்கள். அவர்கள் பௌத்தர்களாகவும் ஒரு காலத்திலே இருந்திருக்கின்றார்கள்.

மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற நூல்கள் பௌத்த நூல்களாக இருக்கின்றன. பௌத்தத்தை தமிழர்கள் வழிபட்டார்கள். இலக்கியம் உருவாகுவதற்கு அவர்கள் அடிப்படையாக இருந்தார்கள் என்பதெல்லாம் சிலப்பதிகாரத்திலே பௌத்த துறவிகள் பற்றி கூறப்படுகின்றது. ஆகவே தமிழர்கள் ஒரு காலத்திலே பௌத்தத்தை தமது மதமாக கொண்டிருந்தது உண்மை.

அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கிலே இருக்கின்ற புத்த தொல்லியல் விடயங்கள் ஆதாரங்களை அது தமிழர்களுடைய பௌத்தம், தமிழ் பௌத்தர்களுடைய ஆதாரங்களாக இருக்கின்றதே தவிர இவை எந்த வகையிலும் சிங்கள பௌத்த ஆதாரங்களாக இருக்கமுடியாது.

வைத்தியர், இந்திரபால தொடக்கம் பல ஆராச்சியாளர்கள் நிரூபித்திருக்கின்றர்கள். கலாநிதி பத்மநாதன் இவைகளை சிறந்த ஆதாரங்களுடன் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். ஆகவே உண்மைகளை மூடிமறைப்பதில் இந்த நாடு எந்தவிதமான நன்மையையும் அடையப் போவதில்லை.

இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழர்கள் பூர்வீகமானவர்கள். நாங்கள் நாகர்களுடைய பரம்பரையில் வந்தவர்கள். புத்தர் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே நாகர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.

கதிரவெளியிலே கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் இந்தியாவிலே திருநெல்வேலி மாவட்டத்திலே பொன்பெரிப்பிலே இருக்கின்ற முதுமக்கள் தாழிகளை ஒத்தவையென்றும் அந்த திருநெல்வேலி மாவட்டத்திலே இருந்த நாகர்களும் கதிரவெளியிலே இருந்த நாகர்களும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் வரலாறு சொல்லியிக்கின்றது.

புத்தர் வருவதற்கு முன்பே எங்களுடைய நாகர் மூதாதைகள் இந்த நாட்டிலே வாழ்ந்தர்கள். அவர்களுடைய பரம்பரையாக நாங்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த அடிப்படையில் இன்னும் ஒரு படிமேலே போவாமாயின் புவியியல் ரீதியாக பார்ப்போமாயின் இலமூரியா கண்டம் ஒன்று இருந்த நிலையில் அதில் ஆதிக்குடிகள் தமிழர்கள் இருந்தார்கள்.

இந்தக் கண்டத்திலே பல்வேறு நாடுகள் இருந்தன. அந்த நாடுகள் எல்லாம் கூட்டாட்சி அடிப்படையிலே இருந்தன. அந்த நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. இந்தக் கண்டம் வெடித்துச் சிதறியபோது நாடுகள், கண்டங்கள், தீவுகளாக உருவாகின. இதில் ஒரு தீவு தான் இலங்கை. அவ்வாறு உருவாகிய இந்த இலங்கை தீவு தமிழகத்திலே இருக்கின்ற தாமிரபரணி ஆற்றின் அடுத்த தொடர்சிதான் மன்னாரில் இருந்து தொடங்குகின்ற தம்பபன்னி அல்லது பொம்பரிப்பூ என்று சொல்லப்படுகின்ற இடம்.

புத்தளத்திலே இருக்கின்ற பொம்பரிப்பூதான் பொன்பரிப்பு பரப்பின் ஆறு. தமிழகத்திலே இருக்கின்ற தாமிரபரணியும் புத்தளத்திலே இருக்கின்ற பொம்பரிப்பூவும் ஒன்று.

கி.மு. 547 இல் விஜயன் வந்ததைத் தொடர்ந்தூன் இங்கு ஒரு வேற்று இனம் உருவாகியது. விஜயன் ஆண்டிய இளவரசிகளைத் திருமணம் செய்ததன் காரணமாகத்தான் சிங்களம் தோன்றியது. லாலா நாட்டிலே இருந்து வந்த வடமொழியும் பாண்டிநாட்டிலே இருந்து வந்த தமிழ் மொழியும் சேர்ந்து உருவாகியது தான் சிங்கள மொழி.

இதனைப் பாடப் புத்தகத்தில்கூடப் படித்திருக்கின்றோம். “ஆரியபாடி அப்பனருகினன் அருந்தமிழ்பாடை அன்னை தந்தால் சீரிய இவ்விரு பாடைதன்னை சிங்களபாடை தொன்றானதன்றே” என சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார். ஆக, தமிழ் மொழியும் ஆரிய மொழியும் சேர்ந்து உருவாகியதுதான் சிங்களம். அது இங்கு மட்டும்தான் உருவாகியுள்ளது.

ஆகவே, ஞானசார தேரர் தனது அறிவை இன்னும் கூர்மையாக்கி தீட்டிப்பர்க்க வேண்டும். அவ்வாறு தீட்டிப்பார்க்கும் போது உண்மை விளங்கும். இலங்கை தமிழர்கள், சிங்களவர்கள் முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் இங்கு வாழும் சிறுபான்மையினருக்கும் உரிய நாடே தவிர சிங்களவர்களுக்கான தனித்துவமான நாடு அல்ல.

21ஆம் நூற்றாண்டில் இருந்துகொண்டு இவ்வாறான பொய்யான மாயையான கருத்துக்களைச் சொல்வது உங்களுடைய அறிவு தொடர்பான கேள்வியையும் ஜய்யப்பாட்டையும் ஏற்படுத்தக் கூடும் எனச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

புத்தர் அமைதியானவர், சாத்வீகமானவர். அவர் யாரையும் வெறுத்து ஒதுக்கியவரல்ல. எல்லா மக்களையும் சமமாகப் பேணுபவர். அவ்வாறு ஒரு மதத்தைப் பின்பற்றுகின்ற நீங்கள், இல்லாத பொய் உரைகளைச் சொல்லக்கூடாது. அவ்வாறு சொல்வதன் மூலம் நீங்கள் நிதானமிழந்தவராக அடையாளப்படுத்தப்படுவீர்கள்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply