இன்றைய திகதியில் கொரோனா வைரஸ் தொற்று 90 மில்லியன் மக்களை பாதித்து, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து அவர் தும்மும் போதோ அல்லது இருமும் போதே வெளியேறும் நீர்த்திவலைகள், சளி, எச்சில்.. ஆகியவற்றின் வழியே பரவுகிறது என்று இதுவரை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று கழிவுநீர் வழியாகப் பரவுகிறது என்பதை கண்டறிந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் கழிவுநீரில் எந்த அளவிற்கு வைரஸ் பரவி இருக்கிறது என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தொடும் இடங்களில் வைரஸ் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வைரஸ் அனைவருக்கும் பரவும் என்று சொல்வது முழு உண்மையல்ல. ஏனெனில் வைரஸ் பாதித்த ஒருவரிடமிருந்து, அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கே தொற்று ஏற்படுகிறது.
ஒருவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்படும் பி சிஆர் பரிசோதனையில், ஒரே ஒரு வைரஸ் இருந்தாலும் தெரிந்துவிடும். அதே போல் பி.சி.ஆர் பரிசோதனையில் வைரஸின் ஆர். என். ஏ தெரிகிறதே தவிர, மற்றபடி வைரஸ் உயிருடன் இல்லை என்று சிலருக்கு தெரிந்தது. இதனால் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று முடிவு வந்தாலும், அவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் என்பதற்கு உறுதியான ஆதாரம் ஏதுமில்லை.
மனிதர்களுக்கு டி.என்.ஏ என்ற மரபணு இருப்பதை போன்று வைரஸிற்கு ஆர்.என்.ஏ என்பது இருக்கும் பரிசோதனையின் போது இது தெரிந்தாலே வைரஸ் உயிருடன் இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதேபோல் ஆர்.என்.ஏ அழியாமல் இருப்பதை வைத்து, வைரஸ் தாக்கம் பரவும் என்பதையும் உறுதியாக சொல்ல இயலாது.
ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த பின்பும், அவரின் சளி மாதிரியில் ஆர்.என்.ஏ தென்படலாம். அதே போல் சந்தை மற்றும் பொதுமக்கள் அதகளவில் ஒன்று கூடும் பொது இடங்களிலும் வைரஸ் இறந்த பின்பும் அதன் ஆர்.என்.ஏ இருக்கும். அதனால் அலட்சியம் காட்ட வேண்டாம். ஏனெனில் இந்த கொரோனா வைரசிற்கான ஆர்.என்.ஏ பல நாட்கள் ஒரே இடத்தில் இருக்கும்.வெப்பநிலையைப் பொறுத்துஅதன் ஆயுள் இருக்கும்.
குறிப்பிட்ட திகதிகளுக்கு பிறகு வைரஸ் உயிர்ப்புடன் இருக்காது என்று கருதி, மருத்துவமனைகள் மற்றும் கூட்டம் அதிகமுள்ள இடங்களிலிருந்து தொற்று பரவாது என்று தவறாக நினைக்க வேண்டாம். இத்தகையஆர்.என்.ஏக்களை பரிசோதனை கூடத்தில் வைத்து, பரிசோதித்த பின்புதான் அவை பரவுமா? பரவதா? அல்லது உயிருடன் இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
அதேபோல் பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால், நோய்க்கிருமி இல்லை என்று உறுதியாக சொல்ல இயலாது. ஏனெனில் அறிகுறிகள் இல்லாமல் கூட தொற்று ஏற்பட்டு, சிகிச்சை ஏதுமில்லாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் நோய் பரவுவது, அறிகுறி இருப்பவரிடமிருந்து மட்டுமல்லாமல், அறிகுறி ஏதுமில்லாதவர்களிடம் இருந்தும் பரவும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்தான் முக கவசம் அணிவது கட்டாயம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
கழிவுநீரில் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் பயன்படுத்திய கழிவறையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால், இதன் காரணமாகவும் வைரஸ் பரவக்கூடும்.