கருணா அம்மான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்பரை விடுத்துள்ளார்.
இந்நிலையில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக விளங்கியவரும் தமிழர் மகாசபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அம்பாறை மத்திய முகாமில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் சந்திப்பின்போது பேசிய கருணா அம்மான்,
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் என்னைக் கொடியவன் என்று கூறியுள்ளார் .கொரோனாவினால் 11 பேர் உயிரிழந்தனர் நாங்கள் ஒரே இரவில் ஆனையிறவில் 3000 இராணுவத்தை கொன்றவர்கள் என்று கூறியதை அடுத்து அது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், பலரும் இந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு பணிப்பரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த நாட்டில் அனைவரும் அறிந்ததும் நிகழ்ந்து நிறைவேறியதுமான விடயங்களையே நான் கூறியிருந்தேன்.
அவ்வாறிருக்கையில் என்னை விமர்சிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க உட்பட எவருக்கும் அருகதையே இல்லை என்று தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.