பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அல்-கய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை தியாகி என்று குறிப்பிட்டு பேசியுள்ளது சர்வதேச அளவில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டட தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்ட அல்-கய்தா அமைப்பின் முன்னாள் தலைவரும், பின்னாளில் அமெரிக்க படையினரானால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டவருமான ஒசாமா பின்லேடனை ‘தியாகி’ என்று நேற்று (வியாழக்கிழமை) நடந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

அமெரிக்க படைகள் தங்களுக்கு தகவல் கொடுக்காமலேயே பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமா பின்லேடனை கொன்ற பிறகு பல்வேறு நாடுகளும் தங்களை துஷ்பிரயோகம் செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டதாக தனது உரையின்போது இம்ரான் கான் கூறினார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்ததற்காக எந்த நாடும் சங்கடம் அடைந்திருக்காது என்றே நான் கருதுகிறேன். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோல்வியடைந்ததற்கும் பாகிஸ்தான்தான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டது.”

“உலகெங்கிலும் உள்ள பாகிஸ்தானியர்களைப் பொறுத்தவரை, அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்குள் வந்து ஒசாமா பின்லேடனை அபோதாபாத்தில் கொன்று, உயிர்த்தியாகம் செய்ய வைத்தது ஒரு சங்கடமான தருணம். அதன்பிறகு பல உலகம் நாடுகளும் எங்களை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கின. நமது நட்பு நாடு நம் நாட்டிற்குள் வந்து நமக்கே தகவல் தெரிவிக்காமல் ஒருவரைக் கொன்றது. மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரினால் 70,000 பாகிஸ்தானியர்கள் இறந்தனர்,” என்று இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது தெரிவித்தார்.


மேலும், பாகிஸ்தானியர்களுக்கு இதைவிட பெரிய துன்பம் இருக்க முடியுமா என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானில் ஒருபுறம் நாடாளுமன்றத்தில் ஒசாமா பின்லேடனை தியாகி என்று அந்த நாட்டின் பிரதமரே குறிப்பிடும் நிலையில், மறுபுறம் அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அல்-கய்தா அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் குஜாராவாலாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அல்-கய்தாவின் ஐந்து உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்துள்ளது.

அப்துல்லா உமைர், அகமது உர் ரஹ்மான், அசிம் அக்பர் சயீத், முகமது யாகூப் மற்றும் முகமது யூசுப் ஆகியோர் தண்டிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

குற்றவாளிகளுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஐந்து குற்றவாளிகளின் தனிப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் குஜராத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியபோது கைது செய்யப்பட்டனர்.

Share.
Leave A Reply