இந்த நூற்றாண்டின் பேரனர்த்தமாக மனித இனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டது.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் உருவாகியிருந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று அசுர வேகத்தில் பரவி சில மாதங்களிலேயே உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் தீவிரம் குறையாமல் அடுத்தடுத்து பல நாடுகளில் வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 5 இலட்சத்தை எட்டியுள்ளது.
இதேவேளை, கொரோனா பெருந்தொற்றில் இருந்து 54 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தும் உள்ளனர்.
எனினும், வைரஸ் தொற்றினால் நாளுக்கு நாள் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகி வருவதுடன் ஒவ்வொரு நாளும் ஒன்றரை இலட்சம் பேர் புதிய நோயாளர்களாக கண்டறியப்பட்டு வருகின்ற நிலையில் கொரோனா பேரனர்த்தம் தொடர்கின்றது.
இந்த வைரஸ் பெருந்தொற்றினால் மனித இழப்புக்கள் மட்டுமன்றி உலகப் பொருளாதாரமும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் முடக்கம் அநேக நாடுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் பொருளாதார பேரிழப்பிலிருந்து ஓரளவு மீள்வதற்காக மக்கள் முடக்கத்தை பல நாடுகள் தளர்த்தி வருகின்றன.
இதேவேளை, இந்த வைரஸ் பெருந் தொற்றுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்புக்கள் இன்னும் முதல் கட்டத்திலேயே இருக்கின்ற நிலையில் அதன் தீவிர பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.