திருமணம் முடிந்த அடுத்தநாளே மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.
முன்னாள் நடிகையும் கடந்த ஆண்டின் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார், நேற்று பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்தார்.
லாக்டெளன் காரணமாக அவரது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது.
வனிதாவின் கணவர் பீட்டர் பால் சினிமாவில் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநராகப் பணியாற்றிவருகிறார்.
வனிதா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தானவர். முதல் கணவருடன் ஒரு மகனும் இரண்டாவது கணவர் மூலம் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். மகன் மட்டும் முதல் கணவருடன் இருக்கும் நிலையில், மகள்கள் வனிதாவுடன்தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் மூன்றாவது திருமணம் குறித்து கிசுகிசுக்கப்பட்டு செய்தியை முதன்முதலாக விகடன் மூலமாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் வனிதா.
தனக்குத் திருமணம் நடைபெற இருப்பது பற்றியும், கணவர் பீட்டர் பால் பற்றியும் அப்பேட்டியில் பேசியிருந்தார் வனிதா.
இந்நிலையில்தான் நேற்று மாலை இவர்கள் திருமணம் நடந்தது. வனிதா – பீட்டரின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமண நிகழ்வில் சினிமாத்துறையில் இருந்து நடிகைகள் அம்பிகாவும், ரேகாவும் நேரில்சென்று வாழ்த்தியிருந்தனர்.
இதற்கிடையே இன்று காலை பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளியானது.
இப்புகாரில், “எனக்கும் பீட்டருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் முறைப்படி என்னிடம் இருந்து விவாகரத்து பெறாமல் வனிதாவைத் திருமணம் செய்திருக்கிறார்”’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இந்தப் புகார் 10 நாட்களுக்கு முன்பாகவே வடபழனி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பீட்டரின் முன்னாள் மனைவி புகார் குறித்து வனிதாவிடம் பேசினேன். “எங்கள் திருமணம் நேற்றுதான் நல்லபடியாக நடந்துமுடிந்திருக்கிறது.
நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் திருமணத்துக்கு முதலில் என்னுடைய சைடிலிருந்துதான் ஏதாவது பிரச்னை வரும் என எதிர்பார்த்தேன்.
ஆனால், பீட்டரின் முதல் மனைவியிடமிருந்து பிரச்னை வந்திருக்கிறது. இது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இல்லை.
நிறைய நலம் விரும்பிகள், வனிதா ஏமாந்துவிட்டார்’ போன்ற கமென்ட்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
நான் ஏமாறவில்லை. பீட்டர் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியும். பீட்டரும் அவரது முதல் மனைவியும் எட்டு வருடதுக்கு முன்பே பிரிந்து விட்டார்கள்.
இருவரும் தனித்தனியாகத்தான் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தது.
இந்தப் பிரச்னையை முழுக்க முழுக்க எங்களுடைய வழக்கறிஞர்களிடம் கொடுத்துவிட்டோம்.
இனி அவர்கள் இதை டீல் செய்துகொள்வார்கள். நாங்கள் பயந்துவிடுவோம் என நினைக்கிறார்கள்.
அது நடக்காது. ஒரு கோடி ரூபாய் கேட்பதாகச் சொல்கிறார்கள். 1 கோடி ரூபாய்கெல்லாம் நான் எங்கே போவது.
என்னிடம் அந்த அளவுக்கெல்லாம் பணம் இல்லை. இந்தப் புகாரால் எங்கள் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இல்ல. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.
இதைச் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றவரிடம் நீங்கள் எது செய்தாலுமே அதில் ஏதாவது ஒரு பிரச்னை வருகிறேதே?” எனக் கேட்டேன்.

“சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நடக்குற பர்சனல் விஷயங்கள்கூட சர்ச்சையாகுறதைத் தவிர்க்க முடியாது.
பணம் புடுங்குறதுக்காக இப்படி பண்றாங்க. இதுல எந்த உண்மையும் இல்ல” என்றார் வனிதா.
இதுகுறித்து பீட்டரின் மனைவி எலிசபெத்துடன் பேச முயற்சி எடுத்தோம். அவரை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. எலிசபெத் எப்போது பேசினாலும் அவரது பதிலையும் இங்கே பதிவிடத் தயாராக இருக்கிறோம்.