உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 6 மாதங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று, முடிவுக்கு அருகில்கூட இல்லை என்பதே யதார்த்தமான உண்மையென உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
அவர் காணொளி காட்சி மூலம் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சீனாவின் வுஹான் நகர மக்கள் பலருக்கு காரணம் அறிய முடியாத வகையில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிக்கை கிடைத்து இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகிய நிலையில், உலகம் ஒரு கோடி பாதிப்புகளையும் 5 இலட்சம் இறப்புகளையும் சந்தித்துள்ளது.
இந்த புதிய வைரஸால் நம் உலகமும் நம் வாழ்க்கையும் எவ்வாறு கொந்தளிப்பில் தள்ளப்படும் என்பதை நாம் யாரும் நினைத்துகூட பார்த்ததில்லை. அதேசமயம் உலகெங்கிலும் நாம் நெகிழ்ச்சி, கண்டுபிடிப்பு, ஒற்றுமை போன்ற உணர்வுபூர்வமான செயல்களைக் கண்டோம். மற்றொரு புறம் தொற்றுநோயை பற்றிய களங்கம், தவறான தகவல் மற்றும் அரசியலாக்குவது போன்ற அறிகுறிகளையும் நாம் கண்டோம்.
இது முடிவடையவே அனைவரும் விரும்புகிறோம். நம் வாழ்க்கையைத் தொடர விரும்புகிறோம். ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இது முடிவுக்கு அருகில்கூட இல்லை. நாம் ஏற்கனவே நிறைய இழந்துவிட்டோம்.
ஆனால், நம்பிக்கையை இழக்க முடியாது. சமூகத்தை மேம்படுத்துவது, தொற்றை அடக்குவது, உயிர்களைக் காப்பாற்றுவது, ஆராய்ச்சிகளை விரைவுபடுத்துவது மற்றும் நாம் அனைவரும் விரும்பும் பாதுகாப்பான, சிறந்த, பசுமையான மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குவதற்கான நேரம் இது. அதற்காக நமது உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.