போர் நடைபெறவில்லை… இயற்கை பேரிடர் நிகழவில்லை… துரதிர்ஷ்டவசமான விபத்துகள் இல்லை… ஆனால் 5 லட்சம் உயிர் குடித்தும் அடங்காத கொரோனா.

போர் நடைபெறவில்லை… இயற்கை பேரிடர் நிகழவில்லை… துரதிர்ஷ்டவசமான விபத்துகள் இல்லை…

ஆனால் ஆயிரக்கணக்கில் மரணங்கள் மட்டும் நாளும் நிகழ்ந்தேறுகின்றன. அதுவும் பரந்து விரிந்த இந்த உலகின் ஏதோ ஒரு பகுதியில் எனறு இல்லை, ஒட்டுமொத்த உலகிலும் இந்த கொத்துக்கொத்தான மரணங்கள்தான் அன்றாடமும் பிரதான செய்தி.

அதுவும் எங்கோ ஒரு மூலையில் தோன்றிய கண்ணுக்கு தெரியா கொரோனா என்னும் ஒரு வைரஸ்தான் இன்று உலகம் முழுவதும் பரவி இத்தகைய மரணங்களை நிகழ்த்தி வருகிறது என்பது, எளிதில் ஜீரணிக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

கண்ணுக்கு தெரியும் எதிரிகளை அழிப்பதற்கு அணுகுண்டு முதல் உயிரியியல் ஆயுதங்கள் வரை கைவசம் வைத்திருக்கும் அரசுகளுக்கு, கண்ணுக்கு தெரியா இந்த வைரசை எதிர்கொள்ளும் திராணி இல்லாமல் போய்விட்டது. இந்த நிமிடம் வரை கொரோனாவை ஒழிக்கும் மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனால் ஒட்டுமொத்த மனித குலமும் வைரசிடம் சரணடைந்து கிடக்கிறது. அப்படி தனது காலடியில் கிடக்கும் மனிதர்களின் உயிர்களை நித்தமும் குடித்து வெறியாட்டம் போடுகிறது, கொரோனா. சார்ஸ், நிபா, எபோலோ என எத்தனையோ வைரஸ்களை பார்த்த மனிதனுக்கு, ‘நான் கொஞ்சம் வேறமாதிரி’ என சொல்லாமல் சொல்லி அடிக்கிறது இந்த ஆட்கொல்லி.

உண்மைதான்… சீனாவின் உகானில் தோன்றிய 6 மாதங்களில் ஒட்டுமொத்த உலகிலும் 5 லட்சத்துக்கும் அதிகமானோரை தனது கொடூர பசிக்கு இரையாக்கி இருப்பதில் இருந்தே, கொரோனாவின் வீரியத்தை அறிந்து கொள்ளலாம். சில நூறுகளில் தொடங்கிய சாவு எண்ணிக்கை, பின்னர் ஆயிரங்களாகி, தொடர்ந்து பத்தாயிரங்களாகி, இன்று 5 லட்சம் என்னும் மிகப்பெரிய எண்ணிக்கையை கடந்திருக்கிறது.

இன்றும் தனது கொடூரத்தை நிறுத்தாமல் அடுத்தடுத்த எண்ணிக்கைகளை நோக்கி வீறுநடை போடுகிறது, கொரோனா. இதனால்தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் எகிறுகிறது. உலகம் முழுவதும் 1 கோடிக்கும் அதிகமானோர் இந்த வைரசின் கொடிய கரங்களில் சிக்கியுள்ளனர்.

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் திளைக்கும் மனிதனுக்கு இந்த எண்ணிக்கைகள் ஒரு நல்ல செய்தி அல்ல.

உலகையே அடக்கியாள நினைக்கும் அமெரிக்காவால் கூட கொரோனாவை அடக்க முடியவில்லை. இந்த வைரசிடம் அதிக அடி வாங்கியிருப்பது என்னவோ, அந்த நாடுதான். உலக அளவில் 25 லட்சத்துக்கு மேற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை, 1¼ லட்சத்துக்கு மேற்பட்ட பலி எண்ணிக்கை என்ற மோசமான சாதனையை கைவசம் வைத்திருக்கிறது.

அடுத்ததாக அமேசான் காட்டுத்தீயால் உலக அளவில் சர்ச்சைக்குள்ளான பிரேசிலில், காட்டுத்தீ போல பரவுகிறது கொரோனா. அங்கு ஒட்டுமொத்தமாக 13 லட்சத்துக்கு அதிகமான பாதிக்கப்பட்டோரும், 57 ஆயிரத்துக்கு அதிகமான உயிரிழப்புகளும் பட்டியலிடப்பட்டு உள்ளன.

இதைப்போல இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோ போன்ற நாடுகளும் தலா 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிரிழப்புகளை கொண்டிருக்கின்றன. இந்தியாவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்களை கொண்டிருக்கிறது. இங்கும் சாவு எண்ணிக்கை விரைவில் 20 ஆயிரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் 1,89,077 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இது முந்தைய 24 மணி நேரத்தைவிட சுமார் 10 ஆயிரம் அதிகமாகும். இந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா மற்றும் பிரேசிலில் முறையே 44,458 பேர் மற்றும் 46,860 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

6 லட்சத்துக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களையும், 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிரிழப்புகளையும் கொண்ட ரஷியாவிலும் கொரோனாவின் வேகம் குறையவில்லை. நாட்டின் தலைவராக தனது பதவிக்காலத்தில் இதுபோன்ற ஒரு மோசமான சூழலை ஒருபோதும் எதிர்கொள்ளவில்லை என அதிபர் புதின் வாய்விட்டு புலம்பி உள்ளார்.

இப்படி ஆட்சியாளர்களும், தனது அன்புக்குரியவர்களை பறிகொடுத்த குடிமக்களும், ‘மனிதனுக்கு சாவை பரிசளிக்கும் கொரோனாவே, உனக்கு ஒரு சாவு வரவில்லையே…’ என கதறுகின்றனர். ஆனால் கொரோனாவோ எந்தவித சிக்கலும் இல்லாமல் வேகமாக பூமிப்பந்தை ஆக்கிரமிக்கிறது.

Share.
Leave A Reply