கேரளாவில் அன்னாசிபழத்துக்குள் வெடியை வைத்து யானையை கொன்றதுக்கு நாடு முழுவதும் கடும்கண்டனங்கள் எழுந்தன.

வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே தெலுங்கானாவில் குரங்கை தூக்கில் தொங்க விட்டு கொன்ற கொடூர சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது.

தெலுங்கானாவின் கம்மம் மாவட்டம் சதுபதி வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் வசிக்கின்றன. இந்த குரங்குகள் அருகில் உள்ள அம்மாபாளையம் கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள பழத்தோட்டங்களை நாசமாக்கி வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்களை சேர்ந்த 3 பேர் கடந்த 26-ந்தேதி ஒரு குரங்கை பிடித்தனர். பின்னர் அதனை தூக்கில் தொங்க விட்டு கொடூரமாக கொன்றனர்.

தூக்கில் தொங்கிய குரங்கை, நாய்கள் கடித்து குதறும் கொடூர காட்சிகளை செல்போனில் படம் எடுத்த 3 பேர், அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த கொடூர காட்சி வைரலாகி வருகிறது. இதனை அறிந்த வனத்துறையினர் 3 பேர் மீதும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மற்ற குரங்குகளை பயமுறுத்தவே குரங்கை தூக்கில் தொங்க விட்டு கொடூரமாக கொலை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Share.
Leave A Reply