இனி தமிழரசுக்கட்சியின் கடந்தகாலப் பிரச்சனைகளுக்கு அக் கட்சியின் பிரதான பேச்சாளர் சுமந்திரன் அளிக்கும் பதில்களைப் பார்க்கலாம்.

இவர் அரசியலுக்கு 2010ம் ஆண்டு அறிமுகமாகிறார். அறிமுகமாகி சில காலங்களிலேயே அவர் கட்சியின் தலைவரான இரா. சம்பந்தனுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறார்.

இவர் மூன்று மொழிகளிலும் பேசும் வல்லமை உடையவர் மட்டுமல்ல, அரசியலமைப்பு விவகாரங்களிலும் ஆழ்ந்த அறிவு உள்ளவர்.

இவ்வாறான தகுதி வாய்ந்த எவரும் கட்சிக்குள் இல்லை. 2010ம் ஆண்டின் பின்னர் தமிழரசுக்கட்சி சர்வதேச அளவில் தனது செயற்பாடுகளை மேற்கொள்கிறது.

குறிப்பாக இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சுமந்திரனே பிரதான பாத்திரத்தை வகித்தார்.

இதன் காரணமாக உள்நாட்டிலுள்ள அரசியல் உயர் மட்டத்திலும் அவரது செல்வாக்கு உயர்ந்தது.

குறுகிய காலத்தில் அவரது வளர்ச்சியும், சம்பந்தன் அவர்களின் அனுக்கிரகமும் கிடைத்த காரணத்தால் அவை கட்சிக்குள் உள்ள பழைய முக்கியஸ்தர்களுக்குப் பெரும் இடராகவே காணப்பட்டது.

இவர்களது செல்வாக்கு வடக்கில் மட்டும் முடங்கி இருக்கையில் இவர் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் முக்கிய ஒருவராகக் கருதப்பட்டார்.

இவரது சமீபகால அரசியல் கருத்துக்கள் முஸ்லீம் மக்கள் மத்தியில் குறிப்பாக நாட்டின் இன்னொரு பலமான சிறுபான்மை இனத்தவரான அம் மக்கள் மீது இனவாத சக்திகளின் கவனம் திரும்பியுள்ளது.

அவை அம் மக்களின் மத உணர்வுகள், சமூக இருப்புகள் என்பவற்றை அச்சுறுத்துவது மட்டுமல்ல, ஈஸ்ரர் ஞாயிறு சம்பவங்களின் பின்னர் தேசிய நல்லிணக்க வாழ்வுக்கு அச்சுறுத்தல் தரும் இனமாக அடையாளம் காட்டும் வகையில் ஒட்டுமொத்த பாதுகாப்பு படைகளின் கவனமும் திருப்பப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய தேசிய ஆபத்துக்களை நன்கு உணர்ந்து மிகவும் காத்திரமான வகையில் அபிப்பிராயங்களை வெளியிடுவதோடு, நீதி தொடர்பான பிரச்சனைகளில் முஸ்லீம் அறிஞர்கள் தயங்கிச் செயற்படும் வேளையில் இவர் தாமே இதில் நேரடியாக ஈடுபட்டிருப்பது முஸ்லீம் கல்வியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அத்துடன் இவர் 2010ம் ஆண்டில் தேசியப் பட்டியலின் வழியாக பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்திலும் இவரது விவாதங்கள் கவனிக்கப்படும் நிலைக்கு வளர்ந்தமையால் தமிழரசுக் கட்சி மற்றும் ஏனைய கூட்டமைப்பினர் மத்தியில் தாழ்வு மனப்பான்மை வளரத் தொடங்கியது.

இதனால் இவரது வருகையைப் பின்கதவு வழியாக உள்ளே நுழைந்தவர், கொழும்பு பின்னணியுடையவர், தமிழ் மக்களின் போராட்ட வாழ்வை அல்லது வடக்கு- கிழக்கு மக்களின் யதார்த்த வாழ்வு நிலமைகளை அறியாதவர் என்ற பிரச்சாரங்கள் தமிழ்ப் பகுதிகளில் தொடர்ந்தன.

இவை அவரது செல்வாக்கை மறைமுகமாக மேலும் உயர்த்த உதவியது. ஏனெனில் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக ஆழமாகப் பேசும் ஒருவராகவே அவர் கருதப்பட்டதால் எதிர்ப் பிரச்சாரங்கள் எடுபடவில்லை.

அது மட்டுமல்ல, 30 ஆண்டுகாலப் போர் பற்றிய விமர்சனங்கள் பற்றிய விவாதங்களில் தமிழரசுக்கட்சியின் அல்லது ஆயுதப் போராட்டத்திலிருந்து ஜனநாயக வழிக்குத் திரும்பிய ஜனநாயக சக்திகள் என அவர்கள் தம்மை வர்ணித்த போதிலும் அவர்கள் விடுதலைப்புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் குறித்து மிகவும் அடக்கிப் பேசினர்.

அவர்களின் கவனம் புலிகள் ஆதரவு வாக்கு வங்கிமேல் இருந்தமையால் வெறுமனே தமது அரசுக்கு எதிரான பிரச்சாரங்களாகவே மனித உரிமை மீறல் தொடர்பான அம்சங்களை முன்வைத்தனர்.

குறிப்பாக இலங்கையில் ‘ஜெனொசைட்’ அதாவது பாரிய மனிதக் கொலை நடைபெற்றது எனவும், அதற்கான சர்வதேச விசாரணைகள் அவசியம் எனவும் கட்சியின் இதர உறுப்பினர்கள் பேசும்போது இவரது கருத்துக்கள் சற்று வித்தியாசமாகவே அமைந்தன.

அதாவது இலங்கை ராணுவத்தின் குற்றங்கள் மட்டுமல்ல, விடுதலைப்புலிகளின் குற்றங்களும் விசாரிக்கப்படவேண்டும் என அவரது கருத்துக்கள் அமைந்தன.

அவர் சட்டத்தரணி என்ற வகையில் விசாரணை என்பது சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணை என்பதால் சகல தரப்பினரது குற்றங்கள் விசாரணை செய்யப்படவேண்டும் என்றார்.

ஆனால் கட்சியின் ஏனையோர் விடுதலைப்புலிகள் அனைவரும் மரணித்துள்ளதால் அவர்களை விசாரணை செய்ய வாய்ப்பில்லை என்பதாலும், ராணுவம் என்பது அரசு தரப்பு என்பதாலும் அதனை அரசின் குற்றம் என வாதாடினர்.

இவ்வாறான விவாதங்களில் காணப்பட்ட உண்மைகள் எதுவெனில் சுமந்திரன் இந்த அரசியல் பயணத்தில் சமீபத்தில் இணைந்தவராகும்.

கடந்தகால அரசியல் குறித்து அவர் பங்காளியாக இல்லாத காரணத்தாலும், அந்த முடிவுகளில் அவர் சம்பந்தப்படாமையாலும் அவை அவரது அபிப்பிராயங்களாக மட்டுமே இருந்தன.

அத்துடன் அவரது அரசியல் பாராளுமன்ற ஆசனங்கள் பற்றிய கவலைகள் அற்றதாக இருந்தன.

ஆனால் ஏனையோர் கடந்த காலத் தவறுகளுக்குப் பொறுப்புக் கூறுபவர்களாகவும், பாராளுமன்றக் கதிரைகளை எதிர்நோக்கி இருப்பவர்களாகவும் காணப்பட்டதால் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு இன்னமும் மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகக் கருதி புலிகள் தொடர்பான விமர்சனங்களை முழுமையாகத் தவிர்த்தனர்.

அத்துடன் சுமந்திரனின் விமர்சனங்கள் தமது வெற்றி வாய்ப்புகளுக்கு மிகவும் பாதகமானவை எனவும் கருதினர். இதனால் தம்மால் முடிந்த அளவிற்கு சுமந்திரன் தொடர்பான விமர்சனங்களை மறைமுகமாக உற்சாகப்படுத்தினர்.

இப் பின்னணியிலிருந்தே எதிர்வரும் 2020 ம் ஆண்டு தேர்தலை நோக்கவேண்டியுள்ளது.

தற்போது சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, கட்சியின் பிரதான பேச்சாளராகவும் மாற்றமடைந்துள்ளார்.

இவர் பிரச்சனைகளை மிகவும் வெளிப்படையாகப் பேசும் நிலை காரணமாகவும், இதர முக்கியஸ்தர்கள் அரசியல் குறித்து காத்திரமான கருத்துக்களைப் பேசுபவர்களாக இல்லை என்பதாலும் இவரது உரைகள் தனது கட்சியைப் பற்றிய மறைமுக விமர்சனங்களாகவும், கொள்கை அறிவிப்புகளாகவும், ஏனைய அரசியல் சக்திகளுடன் உரையாடல்களை மேற்கொள்பவராகவும் காணப்படுகிறார்.

மிகவும் திறந்த விதத்தில் இவரது கருத்துக்கள் வெளிவருவதால் கட்சியின் உட்கட்டுமானத்தின் பலவீனங்கள், உள் முரண்பாடுகள், எதிர்கால நோக்கம் குறித்த பார்வையின் சாத்தியப்பாடுகள், குறிப்பாக இலங்கை அரசியற்கட்டுமானத்தின் ஜனநாயக அடிப்படைகளைப் பாதுகாக்க உதவுவதாகக் கூறும் இக் கட்சி, உட்கட்சி ஜனநாயகத்தைத் தொலைத்துவிட்ட நிலமைகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன.

அவ்வாறான நிலமைகளைத் தொடர்ந்து பார்க்கலாம்.
சமீபத்தில் குறிப்பாக 2020ம் ஆண்டு பெப்ரவரி இறுதி வாரங்களில் தமிழரசுக்கட்சி பல்வேறு மக்கள் சந்திப்புகளை ஏற்பாடு செய்தது.

இதன் பிரதான பேச்சாளராக சுமந்திரனே காணப்பட்டார். இவை தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக இருந்த போதிலும் அவ் அறிவிப்பிற்கு முன்னதாகவே கட்சிகள் வௌ;வேறு பின்னணிகளில் பிரச்சாரங்களை முடுக்கியிருந்தன.

தமிழரசுக்கட்சியின் இக் கூட்டங்களில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான நிலமைகள் முன்னெப்போதும் இருந்ததில்லை. கட்சித் தலைமைகளை நோக்கிக் கேள்விகள் கேட்க முடிவதில்லை.

அவை கேள்வி கேட்பவரை அவமானப்படுத்துவதாக அல்லது அச்சுறுத்துவதாகவே முடிவடையும்.

இதனால் கட்சி ஆதரவாளர்களுடன் மட்டும் இச் சந்திப்புகள் முடிவடையும். ஆனால் இக் கூட்டங்களில் சுமந்திரன் மட்டுமே பங்கு கொள்வதால் அவரே மிக முக்கிய கருத்துக்களைத் தெரிவிக்க வல்லவர் என்பதால் சிவில் அமைப்புகளும் அவ்வாறான சந்திப்புகளை மதிக்கின்றன.

அவரது உரைகள் அக் கட்சிக்குள் பொதுவான நிலமைகளைத் திறந்த மனதோடு பேச முடியாத நிலமைகள் காணப்படுவதை அவரது பல உரைகள் கோடிட்டுக் காட்டியுள்ளன.

ஏனெனில் கட்சிக் கட்டுப்பாடு மிகவும் தளர்ந்துள்ளதால் முக்கியமான பிரச்சனைகளின் விவாதங்கள் உடனடியாகவே ஊடகங்களை எட்டுகின்றன.

கட்சியில் உள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதால் உறுப்பினர்களே அவற்றைக் கசிய விடுகின்றனர். இதனால் கூடிய அளவில் குறைந்த தொகையினரால், மூடிய கதவுக்குள் நடத்தப்படும் உரையாடலாகவும் முடிவடைகிறது.

சுமந்திரனின் விவாதங்கள்

இவை சுமந்திரன் போன்றவர்களின் நடைமுறை அரசியலில் ஒருவகை உள் அழுத்தங்கள் என்றே உணரப்படுகிறது.

உதாரணமாக, கூட்டமொன்றில் அவரது உரை பின்வருமாறு வருகிறது.
….. கட்சிக் கூட்டத்தை மூடிய அறைக்குள் சில விடயங்கள், உத்திகள் குறித்துப் பேசவேண்டுமெனச் சிலர் கூறினர்.

அது தேவைதான். அதனைச் செய்வதற்கு முன்னர் பொதுப் பரப்பில் மக்கள் மத்தியிலே எங்களைச் சாராதவர்கள், புத்திஜீவிகள், அரசியல் சிந்தனையாளர்கள் மத்தியிலே எப்படியான சிந்தனைகள் காணப்படுகிறது? என்பதை நாம் முதலில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இதனை உபயோகப்படுத்துகிறோம். மூடிய அறைகளுக்குள் பேசுவதற்கு பொருள் வேண்டும்.

நாம் எமது சிந்தனைகளை மட்டும் வைத்துப் பேசுவதைத் தவிர்த்து எப்படியான விமர்சனம் வெளியில் உள்ளது? எங்களைச் சாராதவர்கள் ஏன் எம்மில் குற்றம் காண்கிறார்கள்? அதில் நியாயம் இருக்கிறதா? என்ற விடயங்களை அலசி ஆராய்ந்து அது குறித்துச் சிந்திக்க வேண்டிய முக்கிய கடப்பாடு உள்ளது. …..

இதனை நன்கு உற்று நோக்கினால் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டின் அரசியல் வங்குறோத்து நிலை புலப்படுகிறது.

மக்களிடமிருந்து அல்லது பொது அரசியல் அபிப்பிராயங்களைப் பெறும் வழி வகைகளிலிருந்து வெகு தூரம் தள்ளி நிற்பதும், கட்சிக்கு வெளியிலுள்ள அபிப்பிராயங்கள் எதனையும் மதிப்பதற்கு அக் கட்சி தயாராக இல்லை என்பதும் அதனை எடுத்துக்காட்டுவதற்கு அவர் உபயோகித்த வார்த்தைகள் தெளிவாக்குகிறது.

13வது திருத்தம் தொடர்பாக அவர் தரும் விளக்கங்கள் மேலும் குழப்பத்தைத் தருவனவாகவே உள்ளன.

அரசியல் அமைப்பின் 6வது திருத்தம் காரணமாக பாராளுமன்றத்திலிருந்து வெளியேறினார்கள்.

பின்னர் இந்திய – இலங்கை ஒப்பந்தம் காரணமாக மீண்டும் இணைந்தார்கள். இவர்கள் ஏதாவது காரணங்களுடன் மீண்டும் பாராளுமன்றம் செல்வார்கள் என்பது பொதுவான அபிப்பிராமாக இன்று வரை உள்ளது.

கடந்த காலத்தில் இடதுசாரிகள் பாராளுமன்ற அரசியலை நிராகரித்தார்கள். பின்னர் பாராளுமன்ற வழிமுறைகளைக் கருவிகளாக்கி தமது அரசியலை முன்னெடுக்கப் பயன்படுத்தப் போவதாக தெரிவித்தே பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைந்தார்கள்.

அவ்வாறான விளக்கத்தின் முடிவு இடதுசாரிகளின் பாராளுமன்றத் தோல்வியுடனும், இடதுசாரிக் கட்சிகளின் பலவீனமாகவும் முடிவடைந்தது. இதே விளக்கங்களே தற்போது சுமந்திரன் கையிலெடுத்துள்ளார்.

அவரின் கருத்து பின்வருமாறு
….. பாராளுமன்ற ஆசனங்கள் எமது இலக்காக இருந்ததும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. அது எங்களுடைய கருவியாக இருக்க முடியுமே தவிர அது எங்களது இலக்காக ஒருபோதும் இருக்க முடியாது.

எங்களது இலக்குகளை அடைவதற்கான ஒரு முக்கியமான கருவியாகும். அதனை உபயோகிக்கப் பார்த்தோம். முடியவில்லை. வெளியேறினோம்.

ஆனால் 1987ம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அக் கட்டமைப்பு மூலமாக கொடுக்கப்பட்ட அதிகாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளாத போதிலும் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் காரணமாக அந்த முயற்சி வீணாகிப் போகக்கூடாது என்பதற்காக, இந்தியா எடுத்த முயற்சி வீண்போகாமல் இருப்பதற்காக நாங்கள் திரும்பவும் பாராளுமன்றத்திற்கு வருகிறோம் என அமிர்தலிங்கம் கூறினார். அந்த நிலமை இன்றும் உள்ளது. ….

.
இக் கருத்து நிலை பல முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது. பாராளுமன்றப் பதவி என்பது கருவி எனக் கருதினால் அப் பதவியில் ஒருவர் ஏன் பல காலம் உட்கார வேண்டும்? அக் கருவியைச் சரியாகப் பயன்படுத்த ஒருவரால் முடியாவிடில் இன்னொரு ‘மெக்கானிக்’ இடம் அந்தக் கருவியை ஒப்படைப்பது தானே முறை.

அரசியலமைப்பு பாராளுமன்ற ஆட்சிமுறை பிரச்சனைகளைத் தீர்க்காது என அடிக்கடி கூறுபவர்கள் அதாவது மாகாணசபைக்கு போதிய அதிகாரங்கள் இல்லை என்பதால் போட்டியிடாதது போல பாராளுமன்றம் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்காது என நம்பினால் தேர்தலிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

ஆனால் ஒரு போதும் விலகவில்லையே ஏன்? கருவி என்பதா? பதவி மோகம் என்பதா? முன்னாள் மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அவர்களின் படுகொலை மரணத்தின் பின்னர் அப் பதவிக்கு இரா. சும்பந்தன் பல உட்கட்சிப் போராட்டங்களை நடத்தினார்.

நீலன் திருச்செல்வத்தின் படுகொலை

அதே போலவே நீலன் திருச்செல்வத்தின் படுகொலையின் பின்னர் அப் பதவிக்கு தன்னை நியமிக்கவேண்டுமென மாவை. சேனாதிராஜா பெரும் போராட்டம் நடத்தினார். இதனாலேயே ஆனந்தசங்கரி மேல் வெறுப்புநிலை தொடர்ந்தது.

இவற்றை பாராளுமன்ற ஆசனம் என்பது கருவி எனக் கொள்வதா? கடந்த 70 ஆண்டு காலமாக சில குறிப்பிட்டவர்களே அப் பதவியில் ஒட்டியிருப்பது அப் பதவியைக் கருவி என்ற பதத்திற்குள் உள்ளடக்குவது மிகவும் பலவீனமான உண்மைகளைத் திரிக்கும் விவாதமாகும்.

அடுத்து, 1987 இல் உருவான மாகாணசபைக் கட்டமைப்பின் அதிகாரங்கள் போதாமையால் தாம் ஏற்கவில்லை என விளக்கம் அளிக்கும் அவர், அவ் அதிகாரமற்ற கட்டுமானத்தில் யார் உட்காரவேண்டும்? என எண்ணினார்கள்.

கட்டுமானம் உருவானால் மட்டும் போதுமா? அதனை யார் நடத்துவது? இதற்கான முடிவு குறித்து மௌனமாக இருந்திருப்பது வேறு காரணங்களே என்பது தெளிவாகிறது.

ஆனால், மேலும் மேலும் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பின்னர் மாகாணசபை நிர்வாகத்தில் ஏன் ஈடுபட்டார்கள்? இடையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? ஏன் முதலமைச்சாராக முன்வந்தார்கள்?

நாட்டின் அரசியலமைப்பு தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளுக்கு இடமளிக்கவில்லை என ஒரு புறத்தில் எதிர்ப்பதும், பின்னர் அதில் இணைந்து செயற்பட்டு அதனை நியாயப்படுத்த முயல்வதும் எவ் வகையில் தவறானதோ அதே வகையில் மாகாணசபைக்கு போதிய அதிகாரம் இல்லை என எதிர்ப்பதும், பின்னர் அதில் இணைவதும் மக்கள் சார்ந்த முடிவுகளாக இல்லை.

 

எவ்வாறு சிங்கள சிறீ எதிர்ப்பு, போட்டி தபால் சேவை, உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் போன்றன மக்கள் விரோதமாக மாறியதோ அதே நிலையே இம் முடிவுகளிலும் வெளிப்படுகிறது.

எனவே தமிழ் மக்களின் நலன்களிலிருந்து இம் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பது தொடர்ந்தும் தெளிவாகிறது.

சுமந்திரனின் இக் கருத்துக்கள் அக் கட்சியின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. இங்கு இன்னொரு அனுபவத்தை நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

அதாவது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக எழுந்த 13வது திருத்தத்தின் அடிப்படையில் மாகாணசபைகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் கூட்டமைப்பு 13 வது திருத்தத்தை ஏற்றுக் கொள்வில்லை.

ஆனால் அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்கின்றனர். அவ்வாறானால் அக் கட்டமைப்பின் தொழிற்பாடு தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் பற்றி அவர்கள் கவலைகொள்ளவில்லை என்பது அப் பதில்களின் முடிவுப் பொருளாகக் காணப்படுகிறது.

ஆனால் காலப் போக்கில் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு நிர்வாகங்களையும் கைப்பற்றுகின்றனர். இக் குழப்பான நிலைப்பாட்டிற்கு அவர் தரும் விளக்கம் மேலும் பல முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது. உரை இவ்வாறு ஆரம்பமாகிறது

……… சில கசப்பான உண்மைகள் சில. எமது கட்சியையும் இது பாதிக்கும். கட்சியைப் பாதித்தாலும் பரவாயில்லை. வெளிப்படையாக எனது பாங்கில் குறிப்பிடுகிறேன்.

1988ம் ஆண்டு இணைந்த மாகாணசபையில் நாம் போட்டியிடவில்லை. ஏன் போட்டியிடவில்லை? 13வது திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அது எங்கள் கொள்கை நிலைப்பாடாக இருந்தது. மக்களும் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடாக இருந்தது.

2007ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்தபோது அங்கு நாம் போட்டியிடவில்லை.

ஆனால் 2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டோம். பின்னர் 2013ம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டோம்.

ஒருவரும் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. உங்கள் கொள்கைக்கு என்ன நடந்தது? கொள்கைகளை மீள் பரிசீலனை செய்தீர்களா? ஒருவரும் அவ்வாறு கேட்கவில்லை. கட்சி மீள் பரிசீலனை செய்யவே இல்லை. எனக்கு நன்கு தெரியும். ஏனெனில் 2010 இலிருந்து கட்சியிலிருக்கிறேன்…….

2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலிலும், பின்னர் 2013ம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும் போட்டியிட்டபோது ஏன் முன்னர் போட்டியிடாது தவிர்த்தீர்கள்? என எவரும் கேட்கவில்லை.

கட்சியும் கொள்கைகளை மீள் பரிசோதனை செய்யவில்லை எனத் தெரிவிக்கிறார். கட்சிக்குள் அவ்வாறான விவாதங்களுக்கான களம் இல்லை என்பதனால்தான் கட்சியைப் பாதித்தாலும் பரவாயில்லை என்ற பீடிகையுடன் கட்சிக்கு வெளியிலுள்ள மக்களும், புத்திஜீவிகளும் என்ன கருதுகிறார்கள்? என்பதை அறியவே இக் கூட்டம் என்கிறார்.

அவ்வாறெனில் யாரும் தம்மைக் கேள்வி கேட்கவில்லை எனக் கூறுவது எந்த வகையில் நியாயமானது? கட்சிக்குள் மீள் பரிசீலனை செய்யப்படவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார் எனில் கட்சிக்குள் அவ்வாறான பொறிமுறை இருக்கவில்லை என்பதே அதன் உட்பொருள்.

கட்சிக்கு வெளியில் காத்திரமான மாற்று சிவில் அமைப்பு, அல்லது அரசியல் கட்டமைப்பு செயற்படாததன் விளைவே இக் கட்சி தன்னிச்சையான முடிவுகளை மூடிய கதவிற்குள் எடுப்பது சாத்தியமாகிறது.

இனி இத்தகைய மாற்று முடிவை எடுப்பதற்கான காரணம் அரசியல் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததே என பின்வருமாறு நியாயம் கற்பிக்கிறார்.

…..நிலமையில் என்ன மாற்றம் இருந்தது? ஏன் போட்டியிட்டோம்? மிக முக்கியமான கொள்கை. நாம் ஒரு கலந்துரையாடலும் நடத்தவில்லை. எங்களது மக்களும் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள்.

ஒருவரும் ஒரு கேள்வி கேட்கவில்லை. ஒரு கொள்கைப் பிடிப்பின் காரணமாக வடக்கு- கிழக்கு இணைந்திருந்தபோது நீங்கள் அதில் பங்கு கொள்ளாமல் இருந்தீர்கள்.

கிழக்கு மாகாணசபையின் முதலாது தேர்தலில் பங்கு கொள்ளாமல் இருந்தீர்கள். அத் தேர்தலை நிறுத்துவதற்காக கட்சி நீதிமன்றம் சென்றது.

நானே அவ் வழக்கில் ஆஜரானேன். ஒரு சில வருடங்களில் நாங்களும் போட்டியிடுகிறோம்.

பாரிய எழுச்சி வடக்கு மாகாணசபைத் தேர்தல் வந்த வேளையில் காணப்பட்டது. நாம் ஏற்றுக்கொள்ளாத கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டோம்.

அதற்கென ஓரு விமர்சனம் இருந்ததா? ஒரு விமர்சனமும் இல்லை. பல்கலைக்கழகமும் விமர்ச்சிக்கவில்லை. புத்திஜீவியும் விமர்ச்சிக்கவில்லை. ஒருவரும் விமர்ச்சிக்கவில்லை.

அப்போது நிலமை மாறியிருந்தது. அதற்கும், இதற்குமிடையே நடந்தது 2009ம் ஆண்டு. அதுதான் அந்த மாற்றம்……

தமிழ்ப் பகுதிகளில் காணப்பட்ட அரசியல் சூனிய நிலையை அவர் தமது நியாயமாகப் பயன்படுத்துகிறார்.

ஆனால் நிலமை வேறானது. இணைந்த மாகாணசபைத் தேர்தலின்போதும், கிழக்கு முதலாவது மாகாணசபைத் தேர்தலின்போதும் விடுதலைப்புலிகளின் கிடுக்குப் பிடியில் தமிழரசுக்கட்சி கிடந்தது.

இங்கு கொள்கைப் பிடிப்பு என்பது புதிய சந்ததிக்கான விளக்கமாக அமையலாம். இங்கு உண்மை மறைக்கப்படுகிறது.

அது மட்டுமல்ல, முப்பது ஆண்டு காலப் போர்ச் சூழலில் சகல ஜனநாயக எதிர்ப்புக் குரல்களும் ஒடுக்கப்பட்டன அல்லது ஒழிக்கப்பட்டன. கூட்டமைப்பினரும் விடுதலைப்புலிகளின் ஊதுகுழலாக மாற்றமடைந்திருந்தார்கள்.

தமிழ்ப் பகுதிகளில் புலி ஆதரவு சக்திகள் தவிர்ந்த ஏனைய ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் குரல்வழைகள் ஒடுக்கப்பட்ட நிலையில் தமிழரசுக்கட்சி மட்டுமே ஈனக் குரலில் பேசிவந்தது.

இந் நிலையில் யாரும் கேள்வி கேட்கவில்லையே என முறையிடுவது உண்மைகளை மூடி மறைப்பதாகும். போர் முடிவடைந்து மூன்று வருடங்களுக்குள்ளாகவே கூட்டமைப்பு அதன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது.

ஏனெனில் அதற்கென ஜனநாயக கட்டமைப்பு எதுவும் இருந்ததில்லை. ஒரு சிலரின் ஆதிக்கத்திற்குள் இருந்தமையால் விவாதங்களோ, மீள் பரிசீலனைகளோ தேவையில்லாமல் இருந்தது.

இவற்றை மறைத்து தமது முடிவுகள் குறித்து யாரும் குரல் எழுப்பவில்லையே எனச் சப்பைக்கட்டுப் போடுவது மக்கள் மத்தியிலே மாற்று அமைப்பு அற்றதன் விளைவாகும்.

தாம் 2009ம் ஆண்டின் பின்னர் மேற்கொண்ட அடிப்படை மாற்றத்திற்கான விளக்கத்தை இவ்வாறு தருகிறார்.

…… 2007ம் ஆண்டு வரை ஒரு நிலமை. 2012ம் ஆண்டிற்குப் பின்னர் வேறொரு நிலமை. இடையில் நடந்தது 2009ம் ஆண்டு. ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருந்தது.

அந்த மாற்றத்தின் பின்னரான அரசியல் பற்றியே பேசுகிறோம். அந்த மாற்றத்திற்குப் பின்னரான அடையக்கூடிய வழிகள் குறித்தே நாங்கள் சிந்திக்கிறோம்.

அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட அந்த அடிப்படை மாற்றத்தை எமது மக்கள் விளங்கியிருந்தார்கள். எல்லோருமே விளங்கியுள்ளார்கள்.

2009ம் ஆண்டிற்கு முன்னர் எமது இலக்கு வேறு. எமது அணுகுமுறை வேறு. தற்போது வித்தியாசமான அணுகுமுறை. இது உண்மை. பலரும் ஏற்றுக்கொண்டது.

பலர் வெளியில் கூறமாட்டார்கள். ஆனால் இது சகலருக்கும் தெரிந்த விடயம். தனிநாடு இலக்கு.

தொடரும்…

வி. சிவலிங்கம்
நன்றி. தமிழ்மிரர்

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும்!(பகுதி-2)-வி.சிவலிங்கம்

 

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும்!! (பகுதி-1)-வி. சிவலிங்கம் (கட்டுரை)

Share.
Leave A Reply