கொரோனாவையும் விடப் படு பயங்கரமாக இருக்கிறது தேர்தல் பரப்புரை. தாம் எப்படியாவது வெற்றியைப் பெற்று விட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அரசியல்வாதியும் படுமோசமாக நடந்து கொள்கிறார்கள்?
படு கேவலமான முறையில் குத்துக்கரணமடிக்கிறார்கள்? வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள்? சனங்களை முட்டாளாக்குகிறார்கள். வரலாற்றை அப்படியும் இப்படியுமாக தங்களுடைய வசதிக்கேற்றமாதிரித் திருப்பிப் போடுகிறார்கள்.
“நீலன் திருச்செல்வம்
பாருங்கள், இரண்டு நாட்களுக்கு முன் நடந்திருக்கும் ஒரு சம்பவத்தை – “நீலன் திருச்செல்வம் போன்ற அறிஞர்களைத் தமிழ்ச்சமூகம் இழந்து விட்டது.
நீலன் இருந்திருந்தால் 2002 இல் ரணில் விக்கிரமசிங்க – புலிகள் பேச்சுவார்த்தைக் காலத்தில் முன்வைக்கப்படவிருந்த தீர்வு யோசனைகளுக்கு உதவியாக இருந்திருக்கும்” என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் (கவலைப்பட்டுக்) கூறியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார். இதற்கு ஆதாரமான வீடியோ இப்பொழுது யுடியூப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
நீலன் திருச்செல்வத்தின் மரணத்துக்குக் காரணமானவர்கள் யார்? என்று எல்லோருக்குமே தெரியும். அதற்குக் காரணம் என்ன என்பதும் எல்லோரும் அறிந்ததே. அந்தக் கொலை பற்றிய விவாதம் வேறு. அதைச் செய்தவர்கள் பற்றிய உண்மை வேறு.
நீலனைக் கொன்ற குற்றச்சாட்டில் வழக்கு, விசாரணை, தண்டனை என்று தொடரும் நடவடிக்கைகள் அனைத்தும் புலிகள் தரப்பை முன்னிறுத்தியே நடந்தன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆக மொத்தத்தில் புலிகளே நீலனைக் கொன்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
தாம் தண்டனை வழங்கியதையும் தம்மால் தண்டனை வழங்கப்பட்டவர்களைப் பற்றியும் பின்னர் ஒருபோதும் புலிகள் மறுபரிசீலனை செய்து பேசியதில்லை. அதுவும் பிரபாகரன் அப்படிப் பேசும் இயல்புள்ளவரில்லை.
அதிலும் நீலனின் மரணத்தைக் குறித்தோ அவருடைய இழப்பைக் குறித்தோ புலிகள் இறுதிவரையில் வருந்தியதில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை.
அப்படியிருக்கும்போது இப்பொழுது எதற்காக இப்படி ஒரு அண்டப் புரளி? அல்லது பெரும் புரட்டு? அதுவும் பிரபாகரனை முன்னிறுத்தி?
வேறு எதற்காக? தேர்தல் வெற்றிக்காகவே. அதுவும் சுமந்திரனை வெற்றியடைய வைக்க வேண்டும் என்பதற்காகவே. சுமந்திரனை வெற்றியடைய வைத்தால் மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின்) நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதற்காகவே.
சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் (யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில்) வெற்றியடைய வைக்க வேண்டும் என்றால், அவரை நியாயப்படுத்த வேண்டும். அவர் தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையானவர் என்று சொல்ல வேண்டும்.
அவர் அரசியலறிஞர் என்று கூற வேண்டும். அவரால்தான் அரசியலமைப்பை வெற்றிகரமான முறையில் உருவாக்க முடியும்.
அல்லது தவறான அரசியலமைப்பையும் அரசியல் நடவடிக்கைகளையும் எதிர்க்க முடியும் என்று நிரூபிக்க வேண்டும்.
அப்படியென்றால்தான் அவரைத் தமிழ்ச்சமூகம் ஏற்றுக் கொள்ளும். இல்லையென்றால், தூக்கித் தூர வீசிவிடும். இதற்காகவே இந்த நியாயப்படுத்தல்கள்.
இது ஏனென்றால் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளுக்குள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றவர் சுமந்திரனே. (மற்றவர் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன்).
குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற – புலிகளின் முன்னாள் எதிரித் தரப்புகளான புளொட் – சித்தார்த்தனையும் ரெலோ செல்வத்தையும் விடச் சுமந்திரனே புலிகளின் ஆதரவாளர்களாலும் ஏனைய தமிழ்த்தேசிய வாதிகளாலும் விமர்சிக்கப்படுகிறார்.
அதுவும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் சுமந்திரனையும் சம்பந்தனையும் முன்னிறுத்தியே கஜேந்திரகுமார் – கஜேந்திரனின் தமிழ்த் தேசிய முன்னணி, விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கத்தின் தமிழ்த்தேசியக் கூட்டணி, ஐங்கரநேசனின் பசுமைக்கட்சி உள்ளிட்ட தரப்புகள் தமது எதிர்ப்பரப்புரையைச் செய்கின்றன.
அந்தளவுக்குச் சுமந்திரனுடைய அரசியல் குத்துக் கரணங்கள் அல்லது அரசியல் ஏமாற்றுகள் தமிழ்ச்சமூகத்தைக் கோபமூட்டியுள்ளன.
இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு எதிர்த்தரப்புகள் முயற்சிக்கின்றன.
இதைச் சமனிலைப்படுத்த வேண்டும் என்றால் புலிகளையும் பிரபாகரனையும் துணைக்கிழுக்க வேண்டும்.
ஏற்கனவே தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக புலிகளையும் (மாவீரர்களையும்) பிரபாகரனையும் தாராளமாகப் பயன்படுத்தி வருவோருக்கு இதுவொன்றும் புதியதல்ல.
ஆனால், இந்தத் தடவை இது உச்சத்துக்குப் போயிருக்கிறது. அதனால்தான் எந்தக் கூச்சமும் இல்லாமல் நீலனின் இழப்பையிட்டுப் பிரபாகரனே வருந்தியதாகச் சிறிதரன் சொல்ல வேண்டி வந்திருக்கிறது.
அந்தளவுக்குக் கூட்டமைப்பும் சுமந்திரன் – சம்பந்தன் தலைமையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.
இதேவேளை இப்படியொரு நியாயப்படுத்தலை சுமந்திரன் விரும்புவாரா என்பதும் கேள்வியே? தேர்தல் வெற்றியைக் குறி வைத்துச் சுமந்திரன் சிந்திப்பாராக இருந்தால், சிறிதரனின் நியாயப்படுத்தலைப் பற்றி எதுவும் கூற மாட்டார். இல்லையெனில் சுமந்திரனுக்கு இது சற்றுக் கூச்சத்தையே உண்டாக்கும்.
ஏனெனில் சரி பிழைகளுக்கு அப்பால், சுமந்திரன் ஆளுமை மிக்கவர். துணிச்சலானவர். அரசியல் விளக்கமுடையவர். கெட்டிக்காரர். தனித்து நின்றே எதையும் யாரையும் எதிர்கொள்ளக் கூடிய சுய நம்பிக்கை உள்ளவர்.
இதுவே ஏராளமான விமர்சனங்கள், கடுமையான கண்டனங்களின் மத்தியிலும் அவரைப் பலரும் விரும்பக் காரணம்.
இளைய தலைமுறையினரில் ஒரு தொகுதியினர் இப்போது சுமந்திரனை வெளிப்படையாக ஆதரித்து நிற்கின்றனர்.
இதற்கு அவர் செய்யும் தாராளாச் செலவுகளும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர் மீதான கவர்ச்சி என்பது 1950, 60, 70 களில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்துக்குத் தமிழ்ச் சமூகத்தில் இருந்ததை ஒத்தது.
“என்னதானிருந்தாலும் பொன்னன் (ஜீ.ஜீ.பொன்னம்பலம்) கெட்டிக்காரன் என்று சொல்வதைப்போலவே இப்போது பலரும் சுமந்திரனைப் பற்றியும் சொல்கிறார்கள்.
இப்பொழுது அதிகம் அறியப்பட்டவராகச் சுமந்திரன் இருக்கிறார். அதிகதிமதிகம் விவாதிக்கப்படுகின்றவராகவும் (கதைக்கப்படுகின்றவராகவும்) இருக்கிறார்.
இது அவருக்கு இரண்டு வகையான தொழிற்பாடுகளைச் செய்கிறது. ஒன்று ஆதரவு – அனுகூலம் (Advantages). மற்றது எதிர்ப்பு, பிரதி கூலம் (Disadvantages). இதனை அவர் கடந்த பத்தாண்டுகளில் தன்னைச் சுற்றி உருவாக்கியுள்ளார்.
பெரும்பாலான அரசியல் ஆளுமைகள் இந்த உபாயத்தைக் கைக் கொள்வது வழமை. அதுவும் தேர்தல் அரசியலுக்கு இது அவசியம். ஜெயலலிதா தொடக்கம் மோடி வரையில் ஏராளம் உதாரணங்கள் உண்டு.
இந்தியப் பிரதமர் மோடி அதிகமதிகம் விமர்சிக்கப்படுகின்றவராக இருந்தே அரசியல் வெற்றிகளைப் பெற்றவர். அதிகமதிகம் விமர்சிக்கப்படுகின்றவராக இருப்பதென்பது அதிகமதிகம் அறிப்படுகின்றவராகும் வாய்ப்பை அளிக்கிறது.
அதிகமதிகம் அறியப்பட்டவராக இருப்பது வெற்றிக்கான ஒரு வாய்ப்பாகும். இன்றைய பொது உளவியல் என்பது ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப்பற்றி அதிகமாகப் பேசப்படுவதன் மூலமாக உண்டாகும் கவர்ச்சியாகும். இது விளம்பரமில்லாத அறிமுகம். கட்டணமில்லாத விளம்பரம்.
அப்படியென்றால், எதற்காகச் சிறிதரன் சுமந்திரனுக்காகப் பேச வேண்டும். சுமந்திரனின் வெற்றிக்காக நியாயப்படுத்தல்களைச் செய்ய வேண்டும்?
சிறிதரனின் ஆதரவு மட்டுமல்ல, வேறு யாருடைய ஆதரவும் இல்லாமல் வெற்றியடையக் கூடிய சூழல் சுமந்திரனுக்குண்டு.
ஏனைய தரப்புகளின் பலவீனமும் சுமந்திரனின் துணிச்சலான நடவடிக்கைகளும், சர்ச்சைகளை எதிர்கொள்ளும் விதத்தில் உண்டான கவர்ச்சியும் அவருக்கான வெற்றி வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
சிறிதரன் போன்றோரின் ஆதரவு ஏன் அவருக்கு வழங்கப்படுகிறது என்றால், எதையும் எவரையும் தீர்மானிக்கக் கூடியவராக தமிழரசுக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்பிற்குள்ளும் சுமந்திரனே இருக்கிறார்.
ஆகவே எதிர்கால அரசியல் ஆதாயத்தைக் குறித்துச் சிந்திப்போர் நிச்சயமாக சுமந்திரன் புகழ் பாடவும் அவரைச் சார்ந்து நிற்கவுமே முற்படுவர்.
அந்த வகையிலான ஒரு தேவையின் பாற்பட்டதே நீலனின் இழப்பைக் குறித்துப் பிரபாகரன் புலம்பியதான இந்தக் (கட்டுக்) கதையும் புனைவும்.
இப்படி இன்னொரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார் மாவை சேனாதிராஜா. ஜனாதிபதி கோட்டாபயவின் ஏற்பாட்டில் 20000 ஆயிரம் இராணுவப் புலனாய்வாளர்கள் வடக்குக் கிழக்கில் இறக்கப்பட்டுள்ளதாகச் சொல்லியிருக்கிறார் மாவை.
இதற்கான தகவல் மூலம் குறித்தோ, இதைப்பற்றிய ஆதாரங்களைப் பற்றியோ அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
அப்படி எதையும் விஞ்ஞான பூர்வமாகக் கதைக்கும் மரபு அவருக்கு ஒரு போதுமே இருந்ததுமில்லை. எனவே இந்தத் தேர்தல் சூழலையும் தமக்கு வாய்ப்பாக்கிக் கொள்வதற்கு இந்த மாதிரிக் கதைகளை (உல்டாக்களை) விடத் தொடங்கியிருக்கிறார் மாவை.
இதையெல்லாம் சில தமிழ் ஊடகங்கள் தங்களுடைய தலைப்புச் செய்திகளாக்கிக் கொண்டிருக்கின்றன என்பது துயரம். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் மிகக் கவனமாக இருங்கள். சற்றுக் கண்ணை மூடினால்போதும் உங்களைக் கூடக் கொள்ளை அடித்து விடுவார்கள்.
இப்போதே இப்படியென்றால், இன்னும் தேர்தலுக்கு ஏறக்குறைய 40 நாட்கள் உள்ளன. அதற்குள் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ! இதற்கெல்லாம் எப்படித் துணிந்தார்கள்?
இந்தச் சுத்துமாத்துகளை எல்லாம் எங்கே கற்றுக் கொண்டார்கள்? பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சமூகம் எப்படியிருந்தது? அன்றைய இளைய தலைமுறை எப்படிச் செயற்பட்டது? அன்றைய இளையோரின் மனநிலை எப்படியாக இருந்தது?
தங்கள் வாழ்வை மட்டுமல்ல, உயிரையே மக்களுக்காகவும் தேசத்துக்காகவும் வழங்கியவர்களின் குருதி ஈரம் காய முன்னரே இப்படியொரு சுயநல எழுச்சியா?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதனை நினைக்கையில்….
கருணாகரன்