பல்லாரி: கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது.
குறிப்பாக பல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி இருந்தார்கள். கடந்த 28-ந் தேதி 4 பேர் உயிர் இழந்திருந்தனர். ஒட்டு மொத்தமாக பல்லாரியில் மட்டும் 23 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா வைரசால் பாதித்து உயிர் இழந்தவர்களின் உடல்களை தரதரவென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் இழுத்து வந்து குழிக்குள் தூக்கி வீசும் காட்சிகளும், அதுவும் ஒரே குழிக்குள் 8 பேரின் உடல்களை போட்டு புதைக்கும் வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதித்து உயிர் இழந்தவர்களின் உடல்களை மனிதாபிமானம் இல்லாமல் தரதரவென்று இழுத்து வருவதுடன், அவர்களின் உடல்களை தூக்கி வீசும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உயிர் இழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
8 அடிக்கு குழி தோண்டி உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
ஆனால் பல்லாரியில் எந்த ஒரு வழிகாட்டுதல்களையும் ஊழியர்கள் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து பல்லாரி மாவட்ட கலெக்டர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
மேலும் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வராததால், ஊழியர்கள் இதுபோன்று ஒரே குழிக்குள் 8 பேரின் உடல்களை போட்டு புதைத்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் சொந்த ஊர் பல்லாரி ஆகும். அவரது மாவட்டத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கூறுகையில், “பல்லாரியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி பலியானவர்களை ஒரே குழிக்குள் வைத்து புதைத்தது தொடர்பாக என்னுடைய கவனத்திற்கு வரவில்லை. அதுபோன்று நடந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு வேலை அப்படி நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தவர்களுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிடுவேன்,”என்றார்.