கொரோனா பரவலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாலர் பாடசாலைகள் , ஆரம்ப வகுப்புக்கள் , தேசிய கல்வியியற் கல்லூரிகள் , ஆசிரியர் கலாசாலைகள் என்பவற்றை ஆரம்பிக்கும் தினங்கள் குறித்து இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

பாலர் பாடசாலைகள் , ஆரம்ப வகுப்புக்கள்

சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாலர் பாடசாலைகள் மற்றும் முதலாம் இரண்டாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய நாடளாவிய ரீதியில் பாலர் பாடசாலைகள் மற்றும் முதலாம் இரண்டாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாடசாலைகளில் கிருமி நீக்கல் செயற்பாடுகள் பற்றி மிகுந்த அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சினால் மாகாண கல்வி அமைச்சிற்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கினார்.

கல்வியியற் கல்லூரிகள்  

அனைத்து தேசிய கல்வியியற் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு (2017/2019 வருட ஆசிரிய பயிலுனர்கள்) ஆசிரியர் பயிலுனர்களுக்கான வதிவிட கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் 31 வரை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரிகளின் இரண்டாம் ஆண்டு கற்றலை நிறைவு செய்த (2016/2018 வருட ஆசிரிய பயிலுனர்கள் ) ஆசிரியர் பயிலுனர்களுக்கு இம் மாதம் 7 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை உள்ளக செயற்பாட்டு பயிற்சிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்களுக்கான (2017/2019 வருட ஆசிரிய பயிலுனர்கள்) உள்ளக பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளன.

2018/2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரிய பயிலுனர்களின் வதிவிட கற்றல் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

ஆசிரியர் கலாசாலைகள்

அத்தோடு அனைத்து ஆசிரியர் கலாசாலைகளிலும் முதலாம் , இரண்டாம் ஆண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளையும் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply