பிகாரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த ஒரு நாளில் மணமகனும் உயிரிழந்துள்ளார்.

பிகார் மாநில தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பொறியாளருக்குக் கடந்த ஜூன் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஏறத்தாழ 350 பேர் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த ஒரு நாளில் மணமகன் திடீரென்று மரணமடைந்தார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே இறந்த மணமகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா பாதிப்பு உறுதியானதாக பாட்னா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், திருமணத்தின் போதே மணமகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தது தெரியவந்துள்ளது.

அவர் திருமண சமயத்தில் வயிற்றுப்போக்கால் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால், சாதாரண மருந்துகளை உட்கொண்டு திருமண சடங்குகளைத் தொடர்ந்துள்ளார்கள்.

இந்த வழக்கினை விசாரித்த பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் ஶ்ரீ குமார் ரவி, மணமகனின் இறுதிச் சடங்கை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுவிட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் சிலரைப் பரிசோதனை செய்ததில் அவர்களில் 15 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அங்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு திருமணத்தில் கலந்து கொண்ட 300க்கும் அதிகமானோரைப் பரிசோதனை செய்ததில், அவர்களில் 80க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தும், தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், 50-க்கும் அதிகமானவர்களைத் திருமண நிகழ்வில் பங்கேற்க வைத்ததன் மூலம், குடும்பத்தினர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Share.
Leave A Reply