கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் நெய்வேலி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட அனல்மின் நிலைய பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகள் முழுமை அடைந்த பிறகே எத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 7ஆம் தேதி அன்று இரண்டாவது அனல்மின் நிலையத்திலிருந்த 6வது யூனிட்டில் ஏற்பட்ட தீ விபத்து 5 நபர்கள் உயிரிழந்தனர்.

கடந்த இரண்டு மாதத்தில் மூன்றாவது முறையாக என்எல்சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 நெய்வேலி அனல் மின் நிலைய விபத்து

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடலை வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்று தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உறவினர்கள் மற்றும் காவல்துறை இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் மற்றும் நெய்வேலி காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தைத் தொடர்ந்து விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், என்எல்சி மனிதவள இயக்குநர் விக்ரமன், தலைவர் ராகேஷ் குமார் மற்றும் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

நெய்வேலி தீ விபத்தை தொடர்ந்து இரண்டாவது அனல்மின் நிலைய முதன்மை மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது விபத்து தொடர்பாக நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறது என்.எல்.சி நிர்வாகம்?

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து என்.எல்.சி நிர்வாகத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.குருசுவாமிநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது, “என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையம் யூனிட் ஐந்தில் பராமரிப்பு காரணமாக மூடப்பட்டுப் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்ட போது, கொதிகலனில் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் விளைவாக ஒரு நிர்வாகி, இரண்டு மேற்பார்வையாளர்கள், மூன்று ஊழியர்கள் மற்றும் 17 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட 23 நபர்கள் காயமடைந்தனர்.

இதில்,  ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேற்கொண்டு  காயமடைந்த 16 நபர்கள் நெய்வேலி மருத்துவமனையில் முதன்மை சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு,  சிறப்புச் சிகிச்சை பெற்று வருகின்றனர்,”

“இந்த தீ விபத்து குறித்து என்.டி.சி.சி.யின் ஓய்வு பெற்ற தொழில்நுட்ப இயக்குநர் மொகாபத்ரா தலைமையில் உயர் மட்ட விசாரணை நடத்தப்படும். மேலும், உள்கட்ட அமைப்புக்கள் குறித்து விசாரணை செய்ய என்.எல்.சி  இயக்குநர்(பவர்) தலைமையிலான மூத்த நிர்வாகிகளுடன் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இரண்டாவது அனல்மின் நிலைய முதன்மை மேலாளர் விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது இரண்டாவது அனல்மின் நிலையத்தின் உள்ள Stage-II நிலையம் முழுவதையும் பாதுகாப்பு  கருதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்  எஸ்.குருசுவாமிநாதன்.

Share.
Leave A Reply