இந்தியாவிலில் தங்கியிருந்த வேலணையை சேர்ந்த ஒருவர், தற்காலிக தெப்பத்தில் பயணம் செய்து, நெடுந்தீவில் கரையொதுங்கிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
நேற்று (2) மதியம் 12 மணியளவில் இவர் நெடுந்தீவின் தென் பகுதி கடற்கரையில் கரையொதுங்கியுள்ளார்.
வேலணை 2 ஆம் வட்டாரப் பகுதியை சேர்ந்த சுரேஸ் (29) என்பவரே இவ்வாறு கரையொதுங்கியுள்ளார்.
இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக சென்று தங்கச்சி மடம் பகுதியில் தங்கியிருந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாக தெரிவித்து, நேற்று தற்காலிகமாக தயாரிக்கப்பட்ட றெஜிபோம் தெப்பம் ஒன்றில் நெடுந்தீவு தென்பகுதி கடற்பகுதியில் கரையேறியுள்ளார்.
இவர் கரையேறியதை அவதானித்த மீனவர் ஒருவர் கடற்றொழில் சமாசத்துக்கு தெரிவித்தார். கடற்றொழில் சமாசம் ஊடாக நெடுந்தீவு பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரொனா தொற்று தலைவிரித்தாடும் நிலையில், இவரது வருகையால் அச்சமடைந்த மக்கள் அவரை நெருங்கவில்லை. அதேநேரம் அவரை தீவுக்குள் உள்நுழைய விடவில்லை.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சுகாதார பிரிவினர், பொலிசார் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். பின்னர், தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தற்காலிக தெப்பத்திலேயே தங்கச்சிமடத்திலிருந்து புறப்பட்டதாக அவர் தெரிவித்தார். எனினும், அவர் மீனவர்களின் உதவியுடன் கரையை நெருங்கி, பின்னர் தற்காலிக தெப்பத்தில் வந்தடைந்தாரா என்பது உள்ளிட்ட மேலதிக விசாரணைகள், அவரது தனிமைப்படுத்தல் முடிந்த பின்னர் இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.