தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்தவர்.
ஒகவாங்கோ டெல்டா பகுதியின் மேல் விமானம் மூலம் பறந்து கண்காணித்த போது யானைகளின் இறந்த உடல்களைப் பார்த்த உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் மே மாத தொடக்கத்திலேயே அந்நாட்டு அரசுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“அவர்கள் மூன்று மணி நேரம் பறந்தில் 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களை பார்ப்பது என்பது மிகவும் அதிகமானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தமாக 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம் என்று அவற்றின் உடல்களில் தந்தம் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி போட்ஸ்வானா அரசு தெரிவித்தது. விலங்குகளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்திருக்கின்றன” என்று கூறுகிறார் மெக்கேன்.
கடந்த ஆண்டு இயற்கையாகப் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. ஆனால் இப்போது அதற்கும் அதிகமான வாய்ப்பு இருக்காது என்று அவர் கூறுகிறார்.
ஆனால் நச்சு மூலமாகவோ நோய் தாக்குதலாலோ இந்த யானைகள் உயிர் இழந்திருக்க கூடும் என்பதையும் முழுதாக மறுக்க முடியாத சூழல் நிலவுகிறது.
முகம் மண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து கிடக்கும் நிலை உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவமான பாதையில் நடப்பது ஆகியவை அந்த யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்குகிறது என்றும் அவர் கூறுகிறார்.
யானைகளின் இந்த இறப்புகளுக்கான மூலம் எது என்பதை அறியாமல் இத்தகைய நோய் மனிதர்களுக்கும் பரவும், குறிப்பாக நீர் மற்றும் மண் வழியாகப் பரவும், என்பதையும் மறுக்க முடியாது என்கிறார் அவர்.
கோவிட் -19 நோய்ப் பரவல் விலங்குகளிடையே பரவி வருவது குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.
வன உயிர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை இது மிகவும் பேரழிவுதான். அதேசமயம், இது மக்களுக்கான பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்கிறார் அவர்.