விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதால் சிகிச்சைக்காக கோவை வந்த இலங்கை பெண்கள் தவித்து வருகிறார்கள். இதனால் தங்களுக்கு உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இலங்கையை சேர்ந்த சந்திரமோகனா கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்று அளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நான் இலங்கையை சேர்ந்த பெண். நான் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக எனது தாயார் காந்திமதியுடன் கோவை வந்தேன். நான் இங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். எனது சிகிச்சை முடிந்து இலங்கை திரும்ப இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது.

இதனால் நான் உள்பட இலங்கையில் இருந்து தமிழகம் வந்த பலர் மீண்டும் இலங்கை திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். நானும், எனது தாயாரும் கடந்த சில மாதங்களாக இங்கேயே தங்கி உள்ளோம்.

இந்த நிலையில் எங்களது இருவரின் விசா காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதற்குமேல் தமிழகத்தில் தங்க முடியாத நிலை உள்ளது. நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோம். எனது தாய் வயதானவராக உள்ளார். நாங்கள் எவ்வித உதவியும் இன்றி கஷ்டப்படுகிறோம்.

இதனால் தொடர்ந்து இங்கேயே தங்கி இருக்க முடியாத நிலை உள்ளது. நாங்கள் இருவரும் நாடு திரும்ப கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்களது நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் இலங்கை திரும்பி செல்ல உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Share.
Leave A Reply